மத்திய அரசின் 2 ஆண்டு செயல்பாடு: இடதுசாரி கட்சிகள் பரிசீலிக்க முடிவு
புதுதில்லி, செப். 7: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடு குறித்து பரிசீலிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன், வியாழக்கிழமை புதுதில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்த இதர விவரம்:
இடதுசாரிக் கட்சிகள்-ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு விவகாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் ஆகியவை குறித்தும் மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் செல்வதை அனுமதிக்க இயலாது. எனவே அரசை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கான யோசனைகளை இடதுசாரிகள் தெரிவிப்பார்கள் என்றார் பரதன்.










