Satellite City Plan Dropped – Editorial & VaiKo Comments


Dinamani.com – Editorial Page

துணை நகரம்

நாட்டின் நடப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற அதேநேரத்தில் தீர்க்க நோக்குடன் எதிர்காலத்திற்கான திட்டத்தைத் தீட்டுவது என்பது ஆட்சித் தலைமையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அத்தகைய எதிர்காலத் திட்டம், இப்போதுள்ள பிரச்சினைகள் கடுமையாக முற்றாமல் தடுப்பதுடன் எதிர்காலத்தில் இவைபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதாகவும் அமையும். சென்னை அருகே துணைநகரை அமைப்பது என்ற திட்டம் அவ்வகையிலானது.

உள்ளபடியே சென்னை நகரின் மக்கள்தொகை பெருகி வருகிறது. நகரின் போக்குவரத்துப் பிரச்சினை, குடியிருப்புப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளும் மேலும் மேலும் கடுமையாகி வருகின்றன. என்னதான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் வருகிற ஆண்டுகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. சென்னை நகரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்தாலும் அது தற்போதுள்ள பிரச்சினைகளைத் திருப்திகரமான அளவுக்குத் தீர்க்கும் என்று தோன்றவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு அருகே ஒரு துணைநகரை அமைப்பது என்பது வரவேற்க வேண்டிய திட்டமாகும். நாம் இப்போதே நடவடிக்கை எடுத்தால்தான் அத் துணைநகரம் சில ஆண்டுகளில் உருப்பெறும்.

எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளில் சென்னை நகரம் விரிவடையாமல் அப்படியே இருந்து வந்துள்ளதாகக் கூற முடியாது. நகரம் தானாக விரிவடைய ஆரம்பித்து மீனம்பாக்கம் கிராமம், பல்லவபுரம் கிராமம் என மேலும் மேலும் பல இடங்களை விழுங்கி விரிவடைந்துள்ளது. இப்படி ஏற்பட்ட விரிவாக்கம் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகக் கூற முடியாது. திட்டமிடாமல் தாறுமாறாக ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகத்தான் சென்னையின் பல புறநகர்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.

சென்னைக்கு அருகே துணைநகரை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மட்டுமன்றி சென்னைக்கு மேற்கிலும் வடக்கிலும் உள்ள இடங்களும் அங்குள்ள நஞ்சை, புஞ்சை தரிசு நிலங்களும் வருகிற ஆண்டுகளில் சென்னை நகரால் விழுங்கப்பட்டுவிடும். சென்னை இவ்விதம் விரிவடைவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. துணை நகரத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும் சென்னை அருகே துணை நகரம் என்ற பெயரில் இல்லாமல் பல புறநகர்கள் தாமாகத் தோன்றத்தான் போகின்றன. ஆனால் அத்தகைய வளர்ச்சி தாறுமாறாகத்தான் இருக்கும். அவ்விதமின்றி அந்த வளர்ச்சி நன்கு திட்டமிட்ட வகையில் இருக்கும்படி நாம் பார்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். திட்டமிட்ட முன்னேற்றம் என்பது எப்போதுமே நல்லது. மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். துணை நகரம் அமைய வேண்டிய இடம் குறித்து பொதுக்கருத்து ஒன்றை எட்டுவதற்கு ஒன்றுபட வேண்டும்.

சென்னை நகரின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்ட தனியார் அமைப்புகள் பல உள்ளன. அவையும் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும், பிரமுகர்களும் அரசின் இத்தகைய திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்க வேண்டும்.


Dinamani.com – TamilNadu Page :: துணை நகர விவகாரம்: வைகோ கருத்து

சென்னை, செப். 5: சென்னை மாநகருக்கு துணை நகரம் என்ற அறிவிப்பும் அதிரடி வாபஸýம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பாருக்கு சரியான எடுத்துக் காட்டு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநதி அறிவித்தார்.

துணைநகரம் அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், தங்கள் வீட்டையும் நிலங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆகும் அவதியும் அவலமும் ஏற்படும். பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வரும் மக்கள் சொல்லொணாத துன்பத்துக்கு ஆளாக நேரிடும். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று அறிவித்தார் முதல்வர்.

இந்த நிலையில் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியதோடு, துணை நகரத் திட்டத்தால் அல்லல்படப் போகும் மக்களின் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் சுட்டிக்காட்டி துணைநகரத் திட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதற்குப் பின்னரும் சட்டப்பேரவையில் எவர் எதிர்த்தாலும் துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று முழங்கினார். முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல்டி அடித்ததன் மூலம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பார் முரண்பாடுகளுக்கும் தடுமாற்றத்துக்கும் ஆளாகி இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

5 responses to “Satellite City Plan Dropped – Editorial & VaiKo Comments

  1. சென்னைக்கு அருகே ஒரு துணைநகரை அமைப்பது என்பது வரவேற்க வேண்டிய திட்டமாகும்.

  2. Unknown's avatar பழூர் கார்த்தி

    //நகரம் தானாக விரிவடைய ஆரம்பித்து மீனம்பாக்கம் கிராமம், பல்லவபுரம் கிராமம் என மேலும் மேலும் பல இடங்களை விழுங்கி விரிவடைந்துள்ளது. இப்படி ஏற்பட்ட விரிவாக்கம் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகக் கூற முடியாது. //

    மிகவும் உண்மை, துணை நகரம் திட்டம் நிறுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது, மாற்று வழிகளுடன் அரசு விரைவில் துணை நகரங்களை நிறுவ முன்வர வேண்டும் !!

  3. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    சுத்த அரசியல்.

    தலையங்கம் சொல்வதுபோல தனியார் முயற்சியில் சென்னை விரிவாவதை யாரும் தடுக்க முடியாது.

  4. Unknown's avatar பழூர் கார்த்தி

    //நகரம் தானாக விரிவடைய ஆரம்பித்து மீனம்பாக்கம் கிராமம், பல்லவபுரம் கிராமம் என மேலும் மேலும் பல இடங்களை விழுங்கி விரிவடைந்துள்ளது. இப்படி ஏற்பட்ட விரிவாக்கம் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகக் கூற முடியாது. //

    மிகவும் உண்மை, துணை நகரம் திட்டம் நிறுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது, மாற்று வழிகளுடன் அரசு விரைவில் துணை நகரங்களை நிறுவ முன்வர வேண்டும் !!

  5. அரசு புது நகரம் அமைத்தை தன் கையில் முழுக்க எடுத்துக் கொள்ளாமல் புறநகர் பகுதியில் தொழில் தொடங்குவோருக்கு சலுகைகள் கொடுத்து போக்குவரத்து சாலை வசதிகள், குடிநீர், மின்சார வசதிகளை புறநகர் பகுதியில் அதிகரித்தால் நகரம் தானாகவே விரியும். அரசே நகர நிர்மாணத்தை செய்ய ஆரம்பித்தால் வேண்டாத விவாதங்களும், கட்சிகாரர்களின் பாக்கெட்டில் சில்லறையுந்தான் அதிகமாகும்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.