வண்டலூர் அருகே 30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு
சென்னை, செப். 1: சென்னை அருகே வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைக்க உத்தேசிக்கப் பட்டுள்ளதாக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உலகில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று. எனவே, உள்கட்டமைப்பு வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் தற்போது திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றத் தேவையான இடவசதியும் இல்லை.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆய்வு மேற்கொண்டது. வண்டலூர் -கேளம்பாக்கம் சாலைக்கு தென்பகுதியில், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் 45-ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையில் 1.40 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உத்தேசமாக இக் குழுமம் தேர்வு செய்துள்ளது.
இப் பகுதியில் தற்போது 13,000 குடும்பங்கள் வாழ்கின்றன. 270 சதுர கிலோமீட்டரில் உள்ள இந் நிலப்பரப்பு, மாசற்ற, நல்ல சுற்றுப்புறச் சூழலில் இருக்கிறது. புதிய நகர அமைப்பிற்கு இது உகந்த பகுதியாகும்.
இப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பயிரிடப்படாமல் தரிசாகவே உள்ளன. இவற்றைக் கையகப்படுத்தும்போது நீர்வளப் பகுதி, குடியிருப்புப் பகுதி, காடுகள் உள்ள பகுதி ஆகியவற்றை நீக்கிவிட்டு, தரிசாகவும், புஞ்சையாகவும் உள்ள நிலங்களே கையகப்படுத்தப்பட உள்ளன.
நிலங்களைக் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களுக்கு நியாயமான மார்க்கெட் விலை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட மாட்டார்கள். அவர்கள் அந்தந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழலாம். ஏற்கெனவே மக்கள் வாழும் இப் பகுதிகள், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய துணை நகரத்தின் வளர்ச்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான சாலை, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்பாடு செய்யப்பட்டு, அவர்கள் பயனடையும் வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய நகரம் அமையும்போது உருவாகும் வேலைவாய்ப்புகள் இப் பகுதியில் ஏற்கெனவே வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்ல பலனை வழங்கி, அவர்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைய வழிவகுக்கும்.
இத் துணை நகரத் திட்டம் -வளர்ந்து வரும் சென்னைப் பெருநகரத்தின் நெரிசலைப் பெருமளவுக்குக் குறைப்பதோடு -உலகின் ஒரு முக்கிய தொழில் நகரமாகவும், தகவல் தொழில்நுட்ப நகரமாகவும் வளர்ந்து வரும் சென்னையை நோக்கி மேலும் தொழில் முதலீட்டாளர்களைத் தொடர்ந்து ஈர்த்திடவும், பொதுமக்களுக்குத் தரமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பயன்படும் என்றார் முதல்வர்.
Dinamani.com – TamilNadu Page :: துணை நகரம் அமைக்கும் திட்டம்: உடனே கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை அருகே துணை நகரம் அமைய உள்ள உத்தேச பகுதி
காஞ்சிபுரம், செப். 1: திருப்போரூர் தொகுதியில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திருப்போரூர் தொகுதிக்குள்பட்ட திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களில் 44 கிராமங்களில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களின் கருத்தறியும் கூட்டம் பாமக சார்பில் ஊரப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது ராமதாஸ் பேசியது: விவசாயிகளின் நிலங்களை பறித்து துணை நகரம் அமைக்கத் தேவையில்லை. இத்திட்டம் மேட்டுக்குடி மக்களுக்காக மட்டுமே பயன்படும். இதற்காக நஞ்சை, புஞ்சை நிலங்களை எடுக்கக் கூடாது. 44 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் நிலங்களை காக்க உயிரையும் துறக்கத் தயாராக உள்ளனர். அரசு அதிகாரிகள் துணை நகரம் அமைக்கும் திட்டம் தொடர்பாக முதல்வருக்கு தவறான தகவலை தந்து வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் முதல் ஆள்
100 நாள்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆனால் துணை நகரம் அமைக்கும் திட்டத்தால் கெட்ட பெயர் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தும் முதல் ஆளாக நான் இருப்பேன். எனவே இத்திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நிலப் பகுதிகளை பயன்படுத்தி துணை நகரங்கள் அமைக்கலாம். ஓரே இடத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது நன்றாக இருக்காது. செய்யூர், மதுராந்தகம் வட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்றார் ராமதாஸ்.
தற்கொலை முயற்சி
பொதுக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் தன்னிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து தன் மீது ஊற்றிக் கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் அருகே இருந்தவர்கள் அம்முயற்சியை தடுத்து விட்டனர். அவர், கொட்டமேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் (60) என விசாரணையில் தெரிய வந்தது.










