Read & Stirred


நன்றி: ஜெகத் | காலச்சுவடு | தமிழ் சிஃபி

அசோகமித்திரன்: “சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன.

ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.”


ஜேஜே சில குறிப்புகள் வயசு 25 – சுகுமாரன்: “புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவாதத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் ‘திட்டமிட்ட சதி’யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது.

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவல் தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான காலப் பகுதி புதிய சோதனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் பக்குவப்பட்டிருந்தது. இருத்தலியல், நவ மார்க்சியம், அமைப்பியல்வாதம் முதலான பல சிந்தனைப் போக்குகளும் அலையெழுப்பிக்கொண்டிருந்தன. இந்த அலைகளின் வீச்சுக்கு ஈடு நிற்கும் திராணியுடன் உருவான நாவல் ஜே.ஜே:சில குறிப்புகள். அதன் உருவமும் செய்நேர்த்தியும் முன்னுதாரணமற்ற புதுமையைச் சார்ந்திருந்தன. ஒரு தனி மனிதனை முன்னிறுத்திக் காலத்தின் சிக்கல்களைப் பகுத்தறிய அந்நாவல் முற்பட்டது.

சமகாலத் தமிழ் வாழ்வின் மீது செல்வாக்குச் செலுத்தும் எல்லாக் கருத்தாக்கங்களிலிருந்தும் பகுக்கப்பட்ட இழைகள் வலைப்பின்னலை உருவாக்குகின்றன. முற்போக்குவாதத்தின் ஓர் இழை. நவீனத்துவத்தின் ஓர் இழை. தனித்தமிழ்ப் போக்கின் ஓர் இழை. பண்டித மனப்பாங்கின் ஓர் இழை. தனிமனிதவாதத்துக்கும் சமூக வாதத்துக்குமான ஒவ்வோர் இழைகள். இந்த ஒவ்வோர் இழையும் மற்றோர் இழையுடன் பின்னி முடிச்சிட்ட அமைப்பிலுள்ளது. எனக்குத் தோதான ஓர் இழையை அவிழ்த்தெடுக்கும்போது வலையின் இயல்பும் பயன்பாடும் எளிதில் குலைந்துபோகின்றன. ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை அணுகுவதிலுள்ள முதன்மையான சிக்கல் இதுவாகத் தோன்றுகிறது. பெரும் படைப்புகளின் இயல்பான இந்தத் துலக்கமின்மைதான் வாசகனைத் தொடர்ந்து வசீகரிக்கிறது. விமர்சகனைத் திணறச் செய்கிறது.


நூற்றாண்டு நாயகர் ம.பொ.சி. :: வெங்கட் சாமிநாதன்

சற்று முன் தான் ஆர்.கே நாராயணன் நூறாண்டு நினைவு தமிழ்நாட்டில் அல்ல, கர்நாடகத்தில் கொண்டாடப்படுவது பற்றிப் பேசினேன். கன்னடம் பேசிய ஈ.வே.ராவை தமிழர்கள்தான் பெரியாராகக் கொண்டாடுகிறார்கள்.

அடுத்து 1906 மனிதர் சிட்டி. அடுத்து இன்னொருவரும் இருப்பது நமது நினைவுக்கு வரக் காரணம் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் (Pro-Vice Chancellor) எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும் ம.பொ.சிவஞான கிராமணியாரின் நூற்றாண்டு நினைவைக் கொண்டாடிய செய்தியைப் பத்திரிகையில் படித்தது தான்.

எனக்கு இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் சரிவரத் தெரிவதில்லை. ஒரு இடத்தில் உள்ள சம்பிரதாயம் இன்னொரு இடத்தில் வழங்குவதில்லை. தமிழ்நாட்டின் சம்பிரதாயங்கள், அதிலும் அரசியல் பொது மேடை சம்பிரதாயங்கள் விளங்குவதில்லை. இதில் யாருக்கு யார் நினைவுப் பரிசு தருவது என்பதில் எனக்குக் குழப்பம் அதிகம். சாதாரணமாக அரசு தான் நினைவு விழா நாயகரின் நினைவில் ஏதும் செய்யும், விழாக் குழுவினருக்கு உதவும், ஆதரவளிக்கும் என்று நினைப்பேன். இங்கு தலைகீழாக இருக்கிறது. அல்லது என் நினைப்புகள்தான் தலைகீழோ என்னவோ.

எப்படியாயினும், இவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாவிட்டால், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்த, ஒரு பெரிய மனிதரை நினைவுகொண்டு கௌரவித்துள்ளது பெரிய விஷயம்.

வெற்றுப் பேச்சாளர் இல்லை. பேச்சும் சிந்தனையும், வாழும் வாழ்வும் ஒன்றாக இருந்தது அவர் வாழ்வு. இதை எத்தனை பேர் நம்ப முடியும் இன்று? ஒரு பைசா சம்பளமில்லாத ஒரு கிராமத்துப் பஞ்சாயத்துத் தேர்தலுக்கு லட்சக் கணக்கில் போட்டியாளரிடம் பேரம் பேசும் அரசியல் இன்று. இந்தக் கலாச்சாரம், நாடு முழுதும் பரவியிருக்கிறது. எத்தனை முறை சென்றார் என்பது இப்போது கணக்கில் இல்லை. சிறையில் மின் விசிறி இல்லை, கரப்பும் தேளும் என்று கூச்சலிட்டார்கள் இன்றைய நமது தலைவர்கள் பலர் அன்று. ம.பொ.சியோ மற்றவர்களோ ஏதும் குறை சொன்னதாக அன்று கேள்வி இல்லை. அது வேறு கலாச்சாரம்.

‘என் போராட்டம்’, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ போன்ற நூல்கள் தமிழ் சரித்திரத்தில் இன்னும் விரிவாகப் பேசப்படாத, (இனி பேசப்படும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. சரித்திரம் வேறு விதமாக கற்பித்து எழுதப்படத் தொடங்கிவிட்டது என்பது என் கவலை), பேசப்பட மாட்டாதோ என்று இருக்கும் இந்நாளில், அந்தப் புத்தகங்கள் திரும்பப் படிக்கக் கிடைக்க வேண்டும். நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளதாகச் சொல்கிறார்கள். தமிழ் அரசுக் கழகம் அவர் தொடங்கியது, தேசீயம் பேசும் காங்கிரஸ் தமிழையும் தமிழ்நாட்டையும் புறமொதுக்கப் பார்த்திருந்து விடுமோ என்ற அச்சத்தில் பிறந்தது. தேசீயத்தில் தமிழ் அடையாளம் கரைந்துபடாமல் இருப்பதில் அவருக்குக் கவலை அதிகம். தமிழைச் சொல்லி தேசீயத்தை மறுத்த அரசியல் அல்ல அவரது.

அகில இந்தியப் பின்னணியில் தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் இந்து மதச் சீர்திருத்த புருஷர்களாக, 19ஆம் நூற்றாண்டின் அரசியல், பண்பாட்டுச் சூழலில், இந்து மதம் தன்னை அர்த்தமுள்ளதாக, புதுப்பித்துக் கொள்ளும் ஒரு பரந்த அலையின் பின்னணியில் ராமலிங்க ஸ்வாமிகளின் வாழ்க்கையையும் அவரது உபதேசங்களையும் பார்த்தார். 19ஆம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, அதன் இன்றைய அர்த்தங்களையும் பொருத்தத்தையும் காந்தியடிகளின் தோற்றத்தையும் வாழ்க்கையும் உறவுபடுத்திப் பார்த்தார்.

திராவிட இயக்கச் சிந்தனையாளர்களான, இலக்குவனார், சாமி சிதம்பரனார் போன்றோரெல்லாம் அந்நாளில் சிலப்பதிகாரம் பற்றிப் பெருமையாகப் பேசி எழுதி அவையெல்லாம் ‘விடுதலை’ பத்திரிகையில் வெளிவரும். அதே சமயம் சிலப்பதிகாரம் பற்றியும் பொதுவாகத் தமிழ்ப் படிப்பு அறிவு வளர்ச்சிக்கு உதவாதது பற்றியும் ‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்வார்களா?’ என்றெல்லாம் பெரியார் கருத்துகளும் வெளிவரும். இலக்குவனாரோ, சாமி சிதம்பரனாரோ அல்லது கழகத் தமிழ் அறிஞர்களோ பெரியாரோடு வாதம் புரிந்ததில்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பேசிச் செல்வார்கள். பெரியார் கருத்துகள் மறுபுறம் வெளிவந்துகொண்டிருக்கும்.

ஆனால், ம.பொ.சி. அப்படியெல்லாம் விட்டுவிட மாட்டார். தான் நடத்தி வந்த தமிழ் முரசு பத்திரிகையில் வெகு விரிவாக “கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர்” என்று ஒரு நீண்ட கட்டுரை எழுதினார். கடைசியில் இதுவும் அதுபாட்டுக்கு அது என்றுதான் ஆயிற்று. அது ம.பொ.சியின் குற்றமல்ல. தமிழ்ப் பண்பு. பதில் சொல்லத் தெரியாவிட்டால், முடியாவிட்டால், கண்டுக்காமல் இருந்து விடுவது தமிழ்நாட்டுப் பண்பு. அப்படித்தான் வாழவேண்டாததெல்லாம், வாழத் தகுதியற்றவெல்லாம், வாழ்வு பெறுகின்றன. யாரும் யாரோடும் மோதுவதில்லை. மோதினாலும் கண்டுக்காமல் ஒதுங்கிவிடுவது சாலவும் நன்று.

அப்படி ஒதுங்கி நல்ல பிள்ளையாகிவிடக் கூடாது காங்கிரஸ் என்ற காரணத்தால்தான், ம.பொ.சி ஆந்திரா பிரிந்த போது சென்னையையும் திருத்தணியையும் தமிழ்நாடு இழந்துவிடாதிருக்கப் போராடினார். கேரளம் உருவானபோதும், பீர்மேடு, தேவிகுளம் சம்பந்தமாகவும் போராடினார். அவர் இருந்திருந்தால், கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்த்திருக்க முடிந்திராது என்றுதான் நினைக்கிறேன்.

இன்று விதி விலக்குகள் என்று ஒரு கக்கனையும் நல்லகண்ணுவையும் பார்ப்பது போல. சாகித்ய அகாடமி பரிசு அவருக்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு இல்லாமலேயே, வள்ளலார் கண்ட ஒருமைப் பாடு’ ஒரு நல்ல புத்தகம். திரும்பத் திரும்ப அச்சில் வரவேண்டிய புத்தகம்.

இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ” விருது அளித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரானார். தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவரானார்.


பிஏ கிருஷ்ணனின் அற்றைத் திங்கள்மிகையற்ற உரையும் அலுப்பற்ற அந்தியும் :: கே.என். செந்தில்

பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது அதை பைண்ட் செய்தவருடைய கருணையால் கல்கி இதழின் கடைசிப் பக்கங்கள் தப்பிப் பிழைத்திருக்கின்றன. அந்தப் பக்கங்களில்தான் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதில் தொடங்கிய கிருஷ்ணனின் வாசிப்புப் பயணம் பிறகு எழுத்துப் பயணமாக வளர்ந்தது.

கிருஷ்ணனின் குடும்பத்திற்குப் பல துறைகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு முக்கியமான காரியத்திற்காக அவரது தாத்தாவைச் சந்தித்திருக்கிறார். அவரது இல்லத்தில் காமராசர் தங்கியிருக்கிறார். கிருஷ்ணனின் எழுத்து முயற்சியை ஆசிரியர் மூலம் அறிந்த ஜீவா அவரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். ஓஅந்த முயற்சியை ஜீவா படிக்கவில்லை என்று நினைக்கிறேன். படித்திருந்தால் அந்தப் பாராட்டும் கிடைக்காமலே போயிருக்கும்!ஔ என்றார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனது உரையின் பெரும்பகுதி முன்னாள் அசாம் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவைப் பற்றியே இருந்தது (காலச்சுவடில் அவருக்கு ஒரு அஞ்சலியையும் எழுதியிருக்கிறார் கிருஷ்ணன்).


சங்கேத அக்காதமி விருது

பரிந்துரைகள் – 1
யவனிகா ஸ்ரீராம் கௌபாய் விருது
மு. ராமசாமி ஓமக்குச்சி விருது
மாலதி மைத்ரி கொல்லிப்பாவை விருது
கலாப்ரியா எம்.ஜி.ஆர். கவிஞர் விருது
தேவதச்சன் சொல்லேருழவன் விருது
பாலைநிலவன் காஸனோவா விருது
அப்பாஸ் ‘உல்லாச புருஷ்’ விருது
நா. முத்துக்குமார் ‘பற பற’ விருது
தேவதேவன் இயற்கைத் திலகம் விருது
க. பஞ்சாங்கம் ஸ்தீரி பார்ட் விருது
காவ்யா சண்முகசுந்தரம் செம்பதிப்பர் விருது
வெளிரங்கராஜன் தங்கமான ராசா விருது
அ. மார்க்ஸ் ‘கௌரவம்’ பாரிஸ்டர் ரஜினிகாந்த் விருது
மணா ஔவை விருது
சூத்ரதாரி பாலசம்பந்தர் விருது
மருதா பாலகுருசாமி
ந. முருகேச பாண்டியன்
மீரா அடிப்பொடி விருது

பரிந்துரைகள் – 2
க. மோகனரங்கன் முன்னுரை முனுசாமி விருது
ந. முருகேச பாண்டியன் கருத்து கந்தசாமி விருது
லஷ்மி மணிவண்ணன் பார் புகழும் மனிதர் விருது
ஜெயமோகன் காவியக் கண்டன் விருது
யுவன் சந்திரசேகர் கிருபானந்த வாரியார் விருது
சுஜாதா இலக்கியக் கடத்தல் விருது


கைமண் அளவு: என் வாசிப்பில் ஜெயமோகன் – 1

காடு நாவலை வீட்டிற்கு எடுத்துவந்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் (லங்காதகனம் கதையில் எந்த வேஷக்குறையும் இல்லாமல் ஆட வரும் ஆசானைப்போல)

காடு என் ஆவலைத் தூண்டிய பிறகு வாசித்தது ரப்பர் நாவல். ஜெயமோகனின் முதல் நாவலான இது காடு போலவே குமரிமாவட்டத்தின் மேற்குப் பகுதியை (திருவட்டார், திர்பரப்பு, குலசேகரம்..) களமாகக் கொண்டது.

டார்த்தீனியம். இந்த கதையைப் படிக்கும் எவருமே பாதிப்படையாமல் இருக்கமுடியாது என்பது என் எண்ணம். மிகவும் மகிழ்ச்சியான சூழலில் வாழும் ஒரு சிறுக் குடும்பம் அந்த குடும்பத் தலைவனுக்கு ஏற்படும் ஒரு விடுபட இயலாத இச்சையின் (obsession) காரணமாக எப்படி சிதிலமடைந்து சின்னாபின்னமாகிறது என்பது தான் கரு.

மிகவும் கவர்ந்த இன்னொரு கதை “பிரம்ம சங்க்யா” நம்பூதிரியைப் பற்றிய ஜகன் மித்யை என்ற சிறுகதை. நீட்சே, ஐன்ஸ்டீன், ஜடத்தையும் காலத்தையும் இணைக்கும் சமன்பாடுகள், சுழற்சித் தத்துவம் போன்ற விஷயங்கள் கதையில் இடம்பெற்றிருந்தாலும் இவற்றில் பயிற்சியில்லாதவர்கள் கூடப் ஆர்வத்தோடு வாசிக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை மாடன் மோட்சம். ஒருபக்கம் மதமாற்றங்களினாலும் இன்னொரு பக்கம் சமஸ்கிருதமயமாக்கலாலும் அடித்தட்டு மக்களின் சிறுதெய்வ வழிபாடு அழிந்து வருவதாகச் சித்தரிக்கும் கதை. ஜெயமோகன் ஒரு இந்துத்துவாதி அல்ல என்று நிறுவ முனைவோர் இன்றளவும் சுட்டிக்காட்டும் கதை இதுதான்.

சுந்தர ராமசாமியின் சில கதைகளில் காணப்படும் அங்கதம் ஜெயமோகன் எழுத்தில் பொதுவாக காணமுடிவதில்லை. ஆனால் மடம் என்ற குறுநாவல் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். மாட்டு வைத்திய புத்தகம் ஒன்றைப் படித்து “ஞானம்” பெற்ற ஒரு பனையேறி சாமியாரைப் பற்றிய கதை. சாமியார் மிகப்பெரிய ஞானி என நம்பும் கனபாடிகள், சாமியார் மறைந்த பிறகு அவர் ஞானம் பெறக்காரணமான ஆதார நூல் எது என்றுத் தேடி அலைகிறார். சாமியாரின் பூர்வாசிரம மனைவியான கிழவிக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து அவளிடமிருந்து ஆதார நூல் பற்றிய ரகசியத்தை அறிய கனபாடிகள் முயல்வதும், அவருடைய கேள்விகளுக்கு கிழவியின் பதில்களும் (“என்னெளவ படிச்சானோ? எந்த அம்மெதாலி அறுத்தானோ?”) அந்த தேடலின் பின் உள்ள அபத்தத்தை வெளிப்படுத்துகின்றன. படுகை, லங்காதகனம், மண், கிளிக்காலம் போன்ற வேறு சில சிறுகதைகளும் மறக்கமுடியாதவை.

ஜெயமோகன் (அவரே “ஆழிசூள் உலகு” நாவலின் விமரிசனத்தில் குரூஸ் சாக்ரடாஸ் என்ற எழுத்தாளருக்குச் சொன்னது போல்) அவரால் மட்டுமே எழுத சாத்தியமான தென் திருவிதாங்கூர் மக்களின் தனித்தன்மையுடைய வாழ்க்கை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றைப் பற்றி நிறைய எழுதவேண்டும். (நினைவுக்கு வரும் சினிமா பாடல்: “அக்கம் பக்கம் பாரையா, சின்ன ராசா! ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா!”)

“மற்றவர்களை தன்னைப் பற்றி இழிவாக எண்ணவைத்து அதில் சுகம் அடைபவர்கள் இருக்கிறார்கள். தான் உண்மையிலேயே இழிவானவன் அல்ல. அது ஒரு தோற்றம் மட்டுமே என்று ரகசியமாக அறிவதிலிருந்தே அந்த சுகம் வருகிறது”.

நல்லவேளை வைரமுத்து, அப்துல் ரகுமான் போல ஜெயமோகன் தி.மு.க ஆதரவாளராக இல்லை. இருந்திருந்தால் கழக மேடைகளில் “தென்னாட்டு தாஸ்தாவெஸ்கி அண்ணன் ஜெயமோகன் அவர்களே!” என்ற விளியை நாம் கேட்கவேண்டியிருந்திருக்கும்.


| |

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.