ஜெயலலிதா சட்டசபைக்கு வருகை தந்ததன் மூலம் ஆரோக்கியமான ஜனநாயக மரபுகள் மிக கௌரவமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. தமது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க முடிவெடுத்தது வரவேற்கத்தக்கதே. அவ்வாறு அவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிராவிடினும் ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு வந்திருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி ஒரு முகாந்திரம் கருதி அவர் சட்டசபைக்கு வந்ததற்கே இன்று தமிழகம் மகிழ்ந்துபோயிருக்கிறது.
இரு முக்கிய கட்சித் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்திருக்கிறார்கள் – மிக நீண்ட காலம் கழித்து! சபாநாயகர் ஆவுடையப்பன், எதிர்கட்சியினர் பேசுவதற்குப் போதுமான அவகாசத்தை ஒதுக்க வேண்டும் என்று கருணாநிதி அவரை வரவேற்றுப் பேசும்போதே கேட்டுக் கொண்டார். அதற்கேற்ப, ஜெயலலிதாவுக்கு, ஆளுனர் உரைமீதான விவாதத்தில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் ஒரு சீரிய எதிர்கட்சித் தலைவராகச் செயல்பட்டு, குறிப்புகளையும் தயாரித்து எடுத்து வந்து, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் வாக்குறுதி குறித்தும் விவசாய கூட்டுறவு கடன் ரத்து திட்டம் குறித்தும், அழுத்தமான, நியாயமான கேள்விகளை, புள்ளி விவரங்களின் துணையோடு எழுப்பியிருக்கிறார்!
‘‘பொதுவாக, இவ்விவாதத்தின்போது எதிர்கட்சித் தலைவருக்கு முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குவது வழக்கம். ஆனால், எனக்கு அரை மணி நேரம்தான் ஒதுக்கப்பட்டது’’ என்று அ.தி.மு.க. தலைவர் குறைபட்டுக் கொண்டாலும், இந்த விவாதத்தில் அவர் பேச எடுத்துக்கொண்ட நேரம் 42 நிமிடங்கள்! இதனை அவைத் தலைவர் அனுமதித்தும் இருக்கிறார்; அதிகம் குறுக்கிடாமல், உறுப்பினர்கள் அவர் உரையை முழுதும் கேட்டிருக்கிறார்கள்; உரிய கட்டத்தில் பதில்களும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற ஆரோக்கியமான, ஆக்கபூர்வமான நிகழ்வுகளைத்தான் தமிழக சட்டசபையில் நாம் மேலும் மேலும் காண விரும்புகிறோமே தவிர, முதல் நாளே அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பியது போன்ற ரகளையையும் வன்முறையையும் அல்ல!
தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஜெயலலிதா பாடம் நடத்தி வன்முறை, பழித்துப் பேசுதல் போன்றவற்றைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், கேள்வி நேரம் போன்றவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என முன்கூட்டியே எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துபேசி, ஒரு திட்டம் வகுத்து, அதன்படி அவையில் இயங்க வேண்டும்.
எதிர்கட்சி என்பது வெறுமே எதிர்ப்பதற்கு அல்ல; நல்ல யோசனைகள் கூறி ஆளுங்கட்சியின் சிறந்த செயல்பாடுக்கு உதவுவதற்கும் ஆளுங்கட்சி தவறிழைக்கும்போது தட்டிக் கேட்பதற்கும் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, தி.மு.க.வுக்கு இப்படிப்பட்ட எதிர்கட்சியாக இயங்க சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அப்போதைய சபாநாயகர் இத்தகைய ஆரோக்கிய போக்குகளுக்கு இடமளிக்கவே இல்லை.
இன்று, ஆவுடையப்பன் அவைத் தலைமையில், அ.தி.மு.க.வுக்கு அர்த்தமுள்ள எதிர்கட்சியாக இயங்க வாய்ப்பு நிறைய உண்டு. அப்படி நடந்து கொள்வதற்குப் பதில், வீண் கூச்சல், கலாட்டா, வன்முறை என்று இறங்கிவிட்டு, அதற்குரிய தண்டனை பெறும்போது, ‘‘ஜனநாயகப் படுகொலை’’ என்று கூக்குரல் எழுப்பினால், அந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களிடையே செல்வாக்கைத் திரும்பப் பெறும் அரிய வாய்ப்பையும் அ.தி.மு.க. தலைவர் இழந்து விடுவார்.










