தேர்தல் தில்லுமுல்லுகள்


இது பல செய்தித்தாள்களிலும் அய்யா, அம்மா டிவியில் (கை நிறைய உப்போடு) பார்த்து அதிலிருந்து கொஞ்சம் சலித்ததும், கொஞ்சம் சொந்தமாக, நேரடியாக சிலரிடம் விசாரித்ததிலிருந்தும்…

1. கையில் இட்ட மையை அழித்து, பின் கள்ள வாக்கு போடுவது: நேற்று என் கையில் இட்ட மையை லேசாக அழித்துப் பார்த்தேன். மை காய்வதற்கு முன் இழுத்தால் கையோடு வந்துவிடுகிறது. நக்கலாமா என்று யோசித்துப் பார்த்தேன். அதில் என்ன ரசாயனம் இருக்கிறது என்று தெரியாததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தினமணி செய்தியில் இதற்கெனத் தனியாக ஓர் அமிலம் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதே செய்தியில் தினமணி நிருபர் அவ்வாறு நான்கைந்து முறை வாக்களித்த சிலரிடம் பேசியதும் தெரிய வந்தது. உண்மையாக இருக்கலாம்.

2. வாக்குச்சாவடியில் குளறுபடிகள்:
(அ) ஒரு வாக்குச்சாவடியில் வேலை செய்யும் அரசு அலுவலர், நாளின் இறுதியில் தானாகவே சில வாக்குகளை (ஏதோ ஒரு கட்சிக்குப்) பதிவு செய்ய முயன்றுள்ளார். அதைக் கண்ட தேர்தல் முகவர்கள் புகார் செய்ய, அவர்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
(ஆ) சில வாக்குச்சாவடிகளில் வேட்பாளரோ, அவரது ஆதரவாளர்களோ அடிதடியில் இறங்கியதாக திமுக, அஇஅதிமுக வட்டாரங்கள் இரண்டுமே குறை கூறின. ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தையே அதிரடியாக செயலிழக்கச் செய்ய சீமான் முயன்றதாகப் புகார்கள் வந்துள்ளன.
(இ) வாக்குச்சாவடிக்கு அருகில் கையில் செல்பேசியுடன் சில அரசியல்வாதிகள் ஆள்களைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். இது அனுமதிக்கப்படாத செயல். நான் வாக்களிக்கச் சென்றபோதே இதை கவனித்தேன்.
(ஈ) வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல். பல செய்தித்தாள்களில் இது வந்திருந்தாலும் நான் நேரடியாகவே இதனை உறுதி செய்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் (கோபாலபுரம்) திமுக, அஇஅதிமுக இருவருமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இரண்டு கட்சிகளிடமிருந்தும் மக்கள் பணம் வாங்கியுள்ளனர். அஇஅதிமுக தலைக்கு ரூ. 250-ம், திமுக அதற்குமேலும் தந்ததாக நான் பேசியவர்கள் சொன்னார்கள். இரண்டு பேரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு சிரிப்புதான் பதில். ஒருவேளை விஜயகாந்த் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கலாம்:-)
(உ) வாக்களிப்போருக்கு நாள் முழுதும் உணவு. என் வீடு வாக்குச்சாவடிக்கு (National Public School, Lloyds Road) நேர் எதிரே. பலர் கூட்டம் கூட்டமாக எதிரே இருந்த காதி அலுவலகத்தின் வாயிலில் உட்கார்ந்து காலை உணவு, மதிய உணவு (பிரிஞ்சியாம்…) சாப்பிட்டுவிட்டு பின்னர்தான் வீட்டுக்குப் போனார்கள். கட்சி அலுவலர்கள் (பார்க்க திமுக போல் இருந்தது) தம் ஆதரவாளர்களுக்கு – அல்லது தம் கட்சிக்கு வாக்களிப்பவர்களைப் போல இருந்தவர்களுக்கு – நாள் முழுதும் சாப்பாடு வாங்கிக்கொடுத்தனர். வாக்களித்து வந்தபின்னும் அவர்கள் உட்கார்ந்து மாலை வரை வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின்னர்தான் நகர்ந்தனர். இன்று காலை செய்தித்தாளில் பிரியாணி கிண்டும் திமுக ஆதரவாளர்கள் படமும் இருந்தது.
(ஊ) 49 O? அப்பிடின்னா என்ன? பல வாக்க்குச்சாவடிகளில் 49 ஓ பிரிவு பற்றித் துளியும் புரிதல் இல்லை என்றும், மீறி 49 ஓ போடுவோம் என்றவர்களை “அது உங்களுக்கு நல்லதில்லை” என்ற மாதிரியான மிரட்டலும் வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(எ) வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. ஓரிடத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை ஒளிர்ந்ததாகச் செய்தி. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை – கருணாநிதி வாக்களிக்கும் சாவடியிலும் (இதுவும் எங்கள் தெருவில்தான் உள்ளது) இதுதான் நிகழ்ந்தது; பின்னர் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் 1%க்கும் குறைவான வாக்குச்சாவடிகளிலேதான் நிகழ்ந்தது.

3. அடையாள அட்டை உண்டு; பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது ஒவ்வொரு தேர்தலிலும் வரும் குற்றச்சாட்டு. உண்மையில் இதில் தேர்தல் ஆணையத்தின் மீது எந்தக் குற்றமும் இல்லை. வாக்காளர் பட்டியலைத் திருத்தும் நேரத்தில் பெயர்கள் விடுபட்டால் நாம்தான் கவனமாக மீண்டும் நமது பெயரைச் சேர்க்கவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதுவே வாக்களிக்கும் உரிமையாகிவிடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.

7 responses to “தேர்தல் தில்லுமுல்லுகள்

  1. Unknown's avatar நாமக்கல் சிபி

    //வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதுவே வாக்களிக்கும் உரிமையாகிவிடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது//

    நல்ல கதையாக இருக்கே! ஒவ்வோரு முறையும் வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதும் தன் பெயர் இருக்கிறதா என்று சரி பார்க்க முடியுமா என்ன?

    வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரை நீக்கும் முன் அந்நபருக்கு தெரியப்படுத்த வேண்டியதில்லையா என்ன?

    வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக் கொள்ளல் என்பது நீக்கப்பட்ட பிறகு சம்மந்தப்பட்ட நபர் தெரிந்து கொள்வது.

    நீக்குவதற்கு முன்பாகவே தனித்தனியாக இல்லாவிடினும், மொத்தமாகவாவது வார்டு வாரியாக நீக்கப்பட இருக்கும் நபர்களின் ஒரு வரைவு பட்டியலை வெளியிட்டு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மறுப்பு/ஆட்சேபனை இல்லாவிடில் நீக்கலாமே!

    மறுப்பு/ஆட்சேபனை இருப்பின் அதற்கான விளக்கத்தை/ஆவணங்களை நேரில் சம்மந்த்ப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கச் சொல்லலாமே!

  2. —இரண்டு கட்சிகளிடமிருந்தும் மக்கள் பணம் வாங்கியுள்ளனர்—-

    குழந்தை தலையிலடித்து சத்தியம் செய்யச் சொல்வாங்களே… வர வர நாட்டில கடவுள் பயம் கம்மியாகிப் போச்சு 😛

  3. Unknown's avatar வலைஞன்

    //நீக்குவதற்கு முன்பாகவே தனித்தனியாக இல்லாவிடினும், மொத்தமாகவாவது வார்டு வாரியாக நீக்கப்பட இருக்கும் நபர்களின் ஒரு வரைவு பட்டியலை வெளியிட்டு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மறுப்பு/ஆட்சேபனை இல்லாவிடில் நீக்கலாமே! //

    நீக்கப்பட இருப்பது என்று ஒரு விஷயமே இல்லை. பட்டியல் இம்முறை தபால் அலுவலகங்களிலேயே பல வாரங்கள் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்த்து சேர்க்க* நீக்க* படிவங்களும் தபால் அலுவலகங்களின் மூலமாகவே வழங்கப்பட்டிருந்தது. எனவே இம்முறை தேர்தல் கமிஷனை நாம் குறை கூற முடியாது.

  4. Unknown's avatar நாமக்கல் சிபி

    //நீக்கப்பட இருப்பது என்று ஒரு விஷயமே இல்லை.//

    பின் எப்படித்தான் ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போக முடியும்!

  5. Unknown's avatar நாமக்கல் சிபி

    ஒட்டுமொத்த பட்டியலில் தன் பெயர் இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடிப்பதற்கும், ஒரு சிறிய பட்டியலில் தேடிப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு நண்பரே!

    புதிதாகச்ச் சேர்க்க விண்ணப்பித்த நபர் வேண்டுமெனில் இப்பட்டியலில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டக் கூடும்!

    தபால் அலுவலங்கள் அனைவருக்கும் அருகாமையில்தான் உள்ளனவா இப்போது? இப்போதெல்லாம் கொரியர்/ஃபாக்ஸ் என்று போய்க்கொண்டிருக்கும்போது தபால் நிலையங்களை மக்கள் அணுகுவதே மிகக் குறைவு என்று எண்ணுகிறேன் நான். அதற்கான காரணங்களைச் சொல்ல வேண்டுமென்றால் தனிப் பதிவே போட வேண்டியதிருக்கும்.

  6. Unknown's avatar குறும்பன்

    நீக்கப்பட்ட, சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வைப்பதுவே பயனுள்ள முறை.
    இதை தேர்தல் ஆணயம் கவனத்தில் கொண்டு ஆவன செய்யவேண்டும்.

  7. Unknown's avatar நாமக்கல் சிபி

    அப்பாடா! சப்போர்ட்டுக்கு ஆள் வந்தாச்சு!

    மிக்க நன்றி குறும்பன்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.