வாக்களித்தோர் வெளியேறும்போது எடுக்கப்பட்ட கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. இதில் மாற்றம் ஏதும் இருக்கப்போவதாக எனக்குத் தோன்றவில்லை. திமுக+ 140-150 தொகுதிகளாவது பெறும். அதற்கு மேலும் போகலாம்.
ஆனால் 200ஐத் தொடும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கூட்டணி ஆட்சி அவசியம். மூன்று கூட்டணி வாய்ப்புகள் உள்ளன:
1. திமுக + காங்கிரஸ்
2. திமுக + காங்கிரஸ் + பாமக
3. திமுக + காங்கிரஸ் + பாமக + இடதுசாரிகள்
இதில் முதலிரண்டுக்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொல்வார்கள்.
CNN-IBN-Hindu கணிப்பில் ஒரேயோர் ஆச்சரியம் மட்டும் இருந்தது – அது அஇஅதிமுக வட மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெறும்; ஆனால் தென் மாவட்டங்களில் நிறையத் தோற்கும் என்பது. அப்படி நடந்தால் அதற்கான காரணங்களாக இவைதான் இருக்கும்.
1. விஜயகாந்த் பாமக வாக்குகள் பலவற்றைப் பிடித்துள்ளார்.
2. விடுதலைச் சிறுத்தைகளின் பலமும் விஜயகாந்த் பிளவும் சேர்ந்து பாமக+திமுக பலத்தைக் குறைத்து அஇஅதிமுகவுக்கு நிறைய வாக்குகளைக் கொடுத்து இடங்களையும் கொடுக்கப் போகிறது.
3. பார்வர்ட் பிளாக் (தேவர்) வாக்குகள் சிதறியதால் அஇதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் வாக்குகள் குறைந்துள்ளன.
4. மதிமுகவால் தென் மாவட்டங்களில் அதிகப் பிரயோசனம் இல்லை.
5. மேல் இரண்டு காரணங்களுடன் இடதுசாரி+காங்கிரஸ் பலத்தால் திமுக கூட்டணி தென் மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெற்று அஇஅதிமுகவை ஒழித்துள்ளது.
சென்னையில் என்ன நடந்துள்ளது என்று வியாழன் அன்றுதான் சரியாகத் தெரியவரும்.
திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க கருணாநிதிக்கு வாழ்த்துகள். அதே சமயம் ஜனநாயக முறை குலையாமல் இருக்க எதிர்க்கட்சிகளுக்கு 70 இடங்களாவது கிடைக்கும் என்று நம்புவோம். அதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 5 இடங்களும் மதிமுகவுக்கு 10 இடங்களுமாவது இருக்கட்டும் என்றும் நம்புவோம்.











தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புளின்படி இருந்தாலும் வேறு சில ஆச்சரியங்கள் இந்தத் தேர்தலில் இருக்கலாம். சில கட்சிகளுக்கு அதிர்ச்சியும் சிலவற்றுக்கு வியப்பும் எதிர்பாராமல் ஏற்படக்கூடும்