விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ::
கோயில்களில் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றைப் பலிகொடுக்கக்கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததே! அது, பாரம்பரியமாக குலவழிபாடு முறையில் எம்மக்கள் செய்துவந்த சடங்குகளில் கைவைத்து விட்ட இந்துத்வா திணிப்புதான்.
“பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் துணை ராணுவம் வரவேண்டும் என பேசியுள்ளீர்களே.. தமிழகம் பீகாராகிவிட்டதா என்ன?”
“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் பா.ம.க-வினர் தடுத்துவிடுவார்கள் என்பதைத்தான் கடந்த கால தேர்தல்கள் காட்டின. தமிழகக் காவல்துறையினரால் இவர்களின் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதால்தான் அப்படி ஒரு கோரிக்கை வைத்தேன்.”
தாமரைக்கனி ::
“தமிழ்நாட்டுல இப்போ இன்பத் தமிழன் அதாவது இன்பமான தமிழன் யாரு?”
“‘இன்பத் தமிழனா?’ அது யாரு? ஓ… அப்பிடி வர்றீங்களா! தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடி நம்மளைச் சந்தோசப்படுத்தி அதுல இன்பம் காண்ற கலைஞர்தான் எனக்கு உண்மையான இன்பத்தமிழன். மத்தபடி அப்பிடிப் பேர் வெச்சிட்டுத் திரியறதெல்லாம் சும்மா வெத்துவேட்டு!”
வைகோ ராமேஸ்வரத்தை வந்தடைந்தபோது இரவு மணி ஒன்பதரை.
“வைகோ ராமேஸ்வரத்தில் பேசுகிறானே.. கடல்கடந்து யாராவது வந்திருக்கிறார்களா என்று க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கண்கள் அலைமோதுவதையும் நான் பார்க்கிறேன்”
என டைமிங்காக ஜோக்கடிக்கிறார்.
டெல்லிக்குப் போற வாய்ப்பை உதறிட்டு, சிவகாசியைத் தூக்கி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்கிட்ட குடுத்துட்டு, தேர்தல் பிரசாரத்துல பிஸியா இருக்காரு வைகோ. ‘அடுத்து என்ன பண்ணப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ்’னு அடிக்கடி பத்திரிகைக்காரங்ககிட்ட சொல்றாரு.
2006 சட்டமன்றத் தேர்தல்தான் அவரோட லட்சியமாம். ‘அதுக்குள்ள புத்தம்புது பலம் திரட்டிப் பெரிய சக்தியா தேர்தலை அவர் சந்திப்பாரு’னு வைகோவோட இருக்கிறவங்க சொல்றாங்க.. அப்படி என்ன திட்டம் வெச்சிருக்காருனுதான் புரியலை!
விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..?
“அரசியலைப் பத்தி நான் எந்த முடிவும் இப்ப எடுக்கல. இந்தத் தேர்தல்ல யாருக்கும் ஆதரவு கொடுக்கறதாகவும் முடிவு பண்ணவேயில்லை. அரசியல்வாதிங்க என் மன்றத்து தோழர்களை சந்திச்சு ஆதரவு கேட்டிருக்கலாம். அதுல தப்பு இல்ல.. என்னை சந்திக்க வந்தாலும் நானும் அவங்கள சந்திக்க முடியாதுனு சொல்லப்போறதில்ல. ஆனா நாங்க யாரையும் ஆதரிக்க போறதில்லங்கிறதுதான் உண்மை. ஜனநாயகக் கடமையைச் செய்யற வகையில என் மன்றத்தினர் தவறாம வோட்டு மட்டும் போடுவாங்க.
அதே போல, இந்த தேர்தல்ல என் மன்றத்தினர் போட்டியிடப் போறதில்ல. அரசியல்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவாத்தான் இருக்கேன். என் ரசிகர்களும் அப்படித்தான். என் பேச்சை மீறி ஒரு துரும்பைக்கூட அவங்க அசைக்க மாட்டாங்க.
அரசியல்ங்கிறது தவிர்க்க வேண்டிய விஷயம் கிடையாது.. நான் சொன்னா சொன்னபடி அரசியல் களத்துல குதிப்பேன்” என்று விடைகொடுத்தார் கேப்டன்!
வேட்பாளர்களில் அதிக பசை உள்ளவர்?
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றதுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காட்டியிருக்கும் சொத்துக் கணக்குப்படி… மிகபெரிய பணக்காரராக இருப்பது, ப.சிதம்பரம்தான்! இவர் தன் குடும்பத்துக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் நிலவரம்.
பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் சொத்துமதிப்பு, நான்கு கோடி ரூபாய்தான்! ஆனால், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது!
தி.மு.க.வைச் சேர்ந்த கரூர் தொகுதி வேட்பாளரான கே.சி.பழனிசாமி, கொடுத்திருக்கும் கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ஐம்பத்திரண்டு கோடி!
நன்றி: ஆனந்த விகடன் & ஜூனியர் விகடன்










