கவிதையில் இருந்து அரசியலுக்கு வந்த சல்மா : “திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழியின் நண்பர் என்பதால் எனக்கு சீட் கிடைத்துவிடவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என தலைவர் விரும்புவதால் எனக்குரிய தகுதிகளை ஆராய்ந்து பார்த்து சீட் தரப்பட்டிருக்கிறது” என்கிறார் மருங்காபுரி திமுக வேட்பாளர் ஏ. ரொக்கையா மாலிக் என்ற சல்மா.
கவிஞர் சல்மா என்பது நவீன இலக்கிய வட்டாரத்தில் அறிந்த பெயர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சொந்த ஊர். வயது 37. அப்பா சம்சுதீன் ஸ்டீல் வியாபாரம். அம்மா சர்புன்னிசா இல்லத்தரசி. சல்மா 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அதற்கு மேல் பள்ளி செல்லவில்லை.
கணவர் அப்துல் மாலிக் வர்த்தகர். 2 மகன்கள்.
பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு வீட்டில் நிறைய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதலில் சிறு பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியது. அப்போது வயது 15.
2 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” என்ற தொகுப்பு 3 பதிப்புகள் பிரசுரம் ஆகியுள்ளது. “பச்சை தேவதை” என்பது இன்னொரு தொகுப்பு. “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவலும் எழுதியிருக்கிறார்.
இலக்கிய நிகழ்ச்சிகளில் கனிமொழியை சந்தித்தது உண்டு. மற்ற இலக்கிய நண்பர்களைப் போல கனிமொழியும் ஒரு நண்பர். மற்றபடி அவரால் தான் சீட் கிடைத்தது என்று கருதக் கூடாது என்கிறார் சல்மா.
பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சித் தலைவராக இருக்கும் சல்மா, சிறந்த ஊராட்சி என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றிருக்கிறார். இலக்கிய ஆர்வத்துக்காக சில பரிசுகள் பெற்றிருக்கிறார்.
எந்தக் கட்சியுமே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லையே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, “யாருமே 33 சதவீதம் தரவில்லை என்பது உண்மைதான். அதற்கான முயற்சியை எங்கள் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கும்” என்று சொன்னார் நம்பிக்கையுடன்.
பேட்டி: கே.எம். சந்திரசேகரன்