வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று பாமக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டம், மாநில அரசை கண்காணிக்க நிழல் அரசாங்கத்தை அமைப்போம் என்பது உட்பட 67 அம்சங்களை பாமக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளது. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பதற்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தமது குடும்பத்தை சேர்ந்த யாரும் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது. இதன் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மீனாட்சி பவன் ஓட்டலில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புதுவை ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டார்கள். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ராமதாஸ் கூறியதாவது:
இந்த தேர்தல் அறிக்கை 41 பக்கங்களை கொண்டுள்ளது. 67 தலைப்புகளில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்தியில் உள்ளது போல குறைந்தபட்ச செயல் திட்டத்தை இங்கும் செயல்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமையும் ஆட்சியில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும், ஆலோசனைகள் கூறவும் குழு ஒன்றை அமைக்கலாம்.
ஏற்கனவே தெரிவித்தபடி திமுக ஆட்சியில் பங்கு பெறுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக் கிறோம். புதிதாக அமையும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். மேலை நாடுகளில் ஆட்சியில் இடம் பெறாத கட்சிகள் ஒன்று சேர்ந்து நிழல் அரசாங்கத்தை அமைத்து திட்டங்களையும், சட்டங்களையும் எடுத்துக் கூறுகிறார்கள்.
அது போல பாமக நிழல் அரசாங்கத்தை ஏற்படுத்தி திமுக அரசு முன்மாதிரி அரசாக விளங்க உதவிகரமாக இருப்போம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கட்டாய கல்வி தற்போது 6 வயது முதல் 14 வயது என்று இருப்பதை 3 வயது முதல் என்று திருத்தி கட்டாய கல்வியை வழங்க வேண்டும். கல்விக்கு ஒதுக்கும் நிதியை 50 சதவீதத்தை ஆரம்ப கல்விக்கு செலவிட வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத்துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும். பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது 30 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு மாவட்டம் என்ற வகையில் 39 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.
பத்திரிகையாளர் நலனை பேணும் வகையில் நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மத்திய அரசு போல பொருளாதார சர்வே அறிக்கையை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டு திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட விதத்தை கண்டறிந்து அது குறித்து அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் முழுமையாக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு செயல் படுத்தும் பணிகள், மாநில அரசு செயல்படுத்தும் பணிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பணிகள் என்று மூன்று பட்டியல்கள் உள்ளன.
தற்போது புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கி உள்ளாட்சித்துறை அமைப்புகளுக்கென்று தனி பட்டியலை தயாரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டுமே வீட்டு வசதி வாரியம் உள்ளது. கிராமப்புறங்களிலும் வீட்டு வசதி வாரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தனி தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இது போன்ற முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ராமதாஸ் பேட்டி
பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. கிராம சபையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. இதுபோன்ற குறைகளை முழுமையாக களைந்து, உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு உரிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் நிதிகளும் நேரடியாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே சென்றடைய வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக சார்பாக ஒருவர் கூட இந்த முறை சட்டமன்றத்திற்கு வரமுடியாது; வரவும் மாட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலை உருவாகாது. ஒருவேளை அப்படி ஒரு நிலை வந்தாலும், திமுக ஆட்சி அமைக்க நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம்.
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலை எங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். கூட்டணி கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் நல்லது.
திமுக இப்போது வெற்றி பெற்றுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல, நாங்களும் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி எதையும் எங்களுக்கு தரவில்லை.
வன்னியர் சங்க நிர்வாகிகள் என்ற பெயரில் அறிக்கை விடும் சிலரை பற்றி வன்னிய சமுதாய மக்கள், “கூலிக்கு மாரடிப்பவர்கள், கைக் கூலிகள், பதர்கள், செல்லாக்காசுகள்’ என்று அடையாளம் கண்டு புறக்கணித்திருக்கிறார்கள். இது போன்ற பலரை எனது 25 ஆண்டு கால பொதுவாழ்வில் பார்த்திருக்கிறேன். இதன் மூலம் எனக்கு எந்த தோல்வியும் வராது.
பாமக தொகுதி பட்டியல் வெளியானதும், அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுடன் நேர்காணல் நடத்தி முடித்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 2 அல்லது 2க்கு மேற்பட்ட தனித்தொகுதிகளில் பாமக இம்முறை போட்டியிடும்.
தமிழகத் தேர்தலுக்கான கூட்டணி பட்டியல் வெளியான பிறகு, பாண்டிச்சேரி கூட்டணி பற்றி கருணாநிதி முடிவு செய்வார். தேர்தல் முடிந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து தமிழ் பாது காப்பு இயக்கப் பணிகளை மேற்கொள்வோம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்திட மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து நடிகர் கார்த்திக்கை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பார்வர்டு பிளாக் தீர்மானம் நிறைவேற்றிருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, வாக்குகளை சிதறடிக்கத்தான் இது உதவும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
குடும்பத்தினர் போட்டி இல்லை
வரும் சட்டசபை தேர்தலில் தமது குடும்பத்தை சேர்ந்த எவரும் போட்டியிட மாட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இன்று தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சட்டசபை தேர்தலில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடுவார்களா என்று நிருபர்கள் கேட்டனர். இந்த கேள்வி எந்த வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். வரும் சட்டசபை தேர்தலில் என் குடும்பத் தைச் சேர்ந்த எவரும் நிச்சயமாக போட்டியிட மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முக்கிய அம்சங்கள்
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று வெளி யிடப்பட்ட பாமக தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கள்ளச்சாராயத்தை ஒழிக்க பாமக கடும் நடவடிக்கை எடுக்கும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்.
* கஞ்சா, பான்பராக் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பொது இடங்களில் விற்கப்படுவதை தடுக்க சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும்.
*மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். சுற்றுச்சூழல் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
*தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னை குடிநீர் தேவைகளை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும்.
* குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவல்துறையின் பணி நேரத்தை 8 மணி நேரம் என நிர்ணயிப்போம்.
* சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
*வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்பது பாமகவின் தலையாய நோக்கம். அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குறைந்தபட்ச வேலைவாய்ப்பு திட்டத்தை பாமக அமல்படுத்தும்.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தேவையான சட்டம் கொண்டுவர பாமக வலியுறுத்தும்.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாமக குரல் கொடுக்கும்.
Courtesy: Maalaisudar











தினமணிச் செய்தியின்படி “சட்டமன்றம், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு செய்ய வழு வகுக்கப்படும்” என்று தேர்தல் அறிக்கையில் பாமக சொல்லியிருப்பதுபோலத் தெரிகிறது. அதை செயல்படுத்தும் முதல் கட்டமாக பாமகவுக்குக் கிடைத்துள்ள 31 இடங்களில் 15-ல் (அல்லது 16-ல்) பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் நன்றாக இருக்கும். செய்வார்களா?
//வரும் சட்டசபை தேர்தலில் தமது குடும்பத்தை சேர்ந்த எவரும் போட்டியிட மாட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.//
என்னங்க சவுக்கடி clause-அ காணோம்? அய்யாவே விட்டுட்டாரா, printing-ல விட்டு போயிடுச்சா?
//அது போல பாமக நிழல் அரசாங்கத்தை ஏற்படுத்தி திமுக அரசு முன்மாதிரி அரசாக விளங்க உதவிகரமாக இருப்போம்//
காடுவெட்டி குரு, பங்க் குமார் போன்ற தேசிய தலைவர்கள், நிழல் அரசாங்கத்தில் இடம் பெறுவார்களா?
//வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.//
//தேர்தல் முடிந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து தமிழ் பாது காப்பு இயக்கப் பணிகளை மேற்கொள்வோம்.//
அட, இதப்பாருப்பா……. எல்லா இடத்திலையும் ஜெயிச்சு சட்டசபைக்கு போவங்களாம். ஆனா குஷ்பு வீட்டிலயும், சினிமா தியேட்டர்ல கல்லெறியவும், விளக்குமாறு போராட்டம் நடத்தவும் விடுதலை சிறுத்தைகள் வேணுமாம். நல்ல கதையா இருக்குதே.
We all know that these manifestos all are a humbug and no one will be even thinking of what they said once the elections are over!
May the Gullible Tamils long live!!!!
Thank you for this post!
234 கிடைக்கலன்னா.. அய்யா.. மறுபடி மரம் வெட்ட போயிருவாரு…
மரம் வெட்டியே கட்சி வளர்த்தது அவரு மட்டும் தானே..
இதெல்லாம் தமிழ் மக்கள் அனுபவிக்கணும்-னு தலை எழுத்து…
குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து,
“பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலம் முதல் அதன் நிர்வாகியாக இருந்தவர் சி.என்.ராமமூர்த்தி. கட்சியின் அடித்தட்டுக்களில் பணியாற்றிய இவர் திடீரென்று தனியே பிரிந்து பாட்டாளி நலக்கட்சியை தொடங்கியுள்ளார். கூடவே இப்போது பாட்டாளி மக்கள்கட்சியை தடை செய்ய வேண்டும், மத்திய அமைச்சர் அன்புமணியின் பதவியை பறிக்க வேண்டும் என்ற அதிரடி புகார்களை எழுப்பி வருகிறார்.”
……..
இந்த செவ்வியில் இவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுக்கள்:
1. கட்சியின் அங்கீகாரம் வேண்டி , டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு கட்சியின் விதிமுறைகள் என்ன என்பதைக்கொடுத்தாக வேண்டும். அதைத்த்தயாரித்தவர்களில் நானும் ஒருவன்.
அப்படி தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்யும்போது, விதி எண் 2-ல் பிரிவு 3-ல்
‘மார்க்ஸீய-அம்பேத்காரிய-பெரியாரிய-கொள்கைகளின்படி’ அரசியலில் எந்த பதவியையும் ஏற்பதில்லை……………
அரசியல் பொது வாழ்வில் வாரிசுகளை ஈடுபடுத்துவதில்லை……….
தேர்தல் ஆணையத்தில் இப்படி பதிவு செய்துவிட்டு , பிறகு முரண்பட்டு நடக்கக்கூடாது. இதை டாக்டர் ராமதாஸ் முற்றிலுமாக மீறிச்செயல்படுகிறார்.
2. பத்திரிக்கை தொடங்க என்று பலரிடமும் ஆயுள் சந்தா வசூலித்து 8 கோடி ரூபாய் சேர்த்து விட்டு பத்த்ரிக்கை தொடங்காதது (2001 சட்ட மன்ற தேர்தலின்போது, விண்ணப்பித்தவர்களிடம் கூட, நீங்கள் ஆயுள் சந்தா செலுத்தியவரா? என்று கேட்டார்களாம்.) 5 வருடங்களாகியும் அப்படி எதுவும் தொடங்கவில்லை. இப்போது ‘தமிழ் ஓசை’ தொடங்கினாலும், சந்தா கட்டியவர்களுக்கு இல்லை. கேட்டால், ‘அது வேறு, இது வேறு என்கிறார்களாம்.
3. அட, லாட்டரி சீட்டு கூட நடத்தியிருக்காருபா. அதில ஒரு 2 கோடி வசூலாம். சரி, வசூலிச்சவரு குலுக்கல் நடத்த வாணாம்? அப்படி ஒன்னியும் நடக்கலியாம்பா.
4. தின்டிவனம் – பாண்டி ரூட்டில 1400 ஏக்கர்ல ‘சரஸ்வதி எரிபொருள் மையம்’ன்னு ஒண்ணாம். ஒரு ரூபாய்க்கு ஊசி போட்டு சம்பாதித்தவருக்கு, அதுக்கு காசு ஏதுன்னு, அட நான் இல்லைபா, மக்கள் கேக்கறாங்களாம்.
இதெல்லாம் நெசமா ராசா?
இதுக்கெல்லாம் இணைய கொ.ப.செ க்கள் பதில் சொல்வார்களா, இல்லை, அலுவல் பணியின் காரணமாக சிறிது நாட்களாக, தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை என்பார்களா?
அட ஊழலையாவது விடுங்க, அது என்னங்க
‘மார்க்ஸீய-அம்பேத்காரிய-பெரியாரிய-கொள்கை’? பையனுக்கு மந்திரி பதவி வாங்கி குடுக்கறதா?
(பி.கு : நான் எதையும் வெட்டி ஒட்டலை ராசா. குமுதம் ரிப்போர்ட்டர் படிச்சு சரி பாத்துக்கலாம்)