ADMK & Vijayaganth Alliance???


தினமணி செய்திப்படி: அதிமுகவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தியே. தேர்தலில் எக் கட்சியுடனும் கூட்டணியில்லை. எங்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் “ஆட்சியில் கூட்டணி” வைத்துக் கொள்வோம் என, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் மதுரையில் தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரத்தில் வியாழக்கிழமை வேனில் இருந்தவாறு பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:

அதிமுகவுடன் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கூட்டணி வைத்துக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என அதிமுகவும், உளவுப் பிரிவு போலீஸாரும் வதந்தி பரப்பி வருகின்றனர். அரசியலுக்காக நான் சினிமா துறையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்திருக்கிறேன். நான் நினைத்திருந்தால் தொடர்ந்து சினிமாவில் நடித்து, கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்க முடியும்.

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, எம்.ஜி.ஆரைப் போலவே என்னுடைய உழைப்பில் சம்பாதித்த பணத்தைச் செலவழித்து அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளேன். அதிமுகவும் திமுகவும் கூட்டணியில்லாமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன என்றால், அக் கட்சிகள் தங்களின் தனித்தன்மையை இழந்துள்ளன என்பதுதானே அர்த்தம்.

நான் ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிக்கவும் பேப்பர், காஸ், பால் உள்ளிட்டவை வீடுகளுக்கு வருவதுபோல் ரேஷன் பொருள்களையும் மக்களின் வீடுகளுக்கே வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

மாவட்டங்கள் தோறும் தொழிற்சாலைகள் அமைக்கவும், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு வங்கிக் கடன்பெற்று சுயதொழில் தொடங்கவும், கல்வித் துறையில் சீர்திருத்தத்தையும், நகரங்களுக்கு ஈடாகக் கிராமப் புறங்களில் சுகாதார வசதியும், மருத்துவ வசதிகளும் பெறுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவேன்.

இத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லையென்றால், அடுத்த முறை எனக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். எங்கள் கட்சியின் இக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் ஆட்சியில் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன் என்றார்.

கடைசியாகக் கிடைத்த (அதிகாரப்பூர்வமற்ற) தகவல்களின் படி விஜய்காந்த் தரப்பு 40 தொகுதிகள் கோரியதாகவும், அதிமுக தரப்பில் 32க்கு பேசி வருவதாகவும் சொல்கிறார்கள். தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்த்தின் கொள்கைகளை அதிமுக ஏற்றுக் கொண்டதாக கூடிய சீக்கிரமே அஃபிஷியலாக விஜய்காந்த் அறிக்கை விடலாம்?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.