Dianamani.com – Election Coverage


1. வி.ஐ.பி. தொகுதி: ஆயிரம் விளக்கும், இளைய சூரியனும் – கடந்த 50 ஆண்டுகளில் 3 தேர்தல்களைத் தவிர, 8 தேர்தல்களில் தி.மு.க.வின் எஃகுக் கோட்டையாக ஆயிரம் விளக்கு திகழ்ந்துள்ளது. 1957-ல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, 1962, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் கே.ஏ. மதியழகன், 1977-ல் எஸ்.ஜே. சாதிக்பாட்சா, 1989, 1996, 2001 ஆகிய 3 தேர்தல்களில் ஸ்டாலின் ஆகிய தி.மு.க. மூத்த தலைவர்கள் வென்ற தொகுதி.

1980, 1984, 1991 ஆகிய 3 தேர்தல்களில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி (அ.தி.மு.க.) வென்றார்.

2. தமிழகத்தின் அரசியல் அளவுகோல் ராமநாதபுரம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடி தொகுதி மட்டும் தனித்தொகுதி.

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பாலும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. அது கடந்த தேர்தல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட தற்போது எம்எல்ஏ ஆக உள்ள அ.அன்வர்ராஜா, கட்சியின் மாவட்டச் செயலராக உள்ள செ.முருகேசன், முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.முனியசாமி, ராமநாதபுரம் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி செயலரும், மண்டபம் சிறப்பு சிற்றூராட்சித் தலைவருமான தங்கமரைக்காயர், அரசு ஊழியர் எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர்.

இத்தொகுதியில் அகமுடையார் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட சேதுபொறியியல் கல்லூரியின் நிறுவனரும், தொழிலதிபருமான எஸ்.முகமது ஜலீல், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்.பி. காதர், ராமநாதபுரம் நகர் திமுக செயலர் ஆர்.ஜி.ரெத்தினம், மண்டபம் ஒன்றிய செயலாளர் வி.சி.கனகு உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர்.

பரமக்குடி : கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.ஆர்.ராம்பிரபு அவரை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் செல்லையாவைவிட கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்தவரும் அவர்களை அடுத்து முக்குலத்தோர், யாதவர், செட்டியார் சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர்.

முதுகுளத்தூர் : கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பதினெட்டாம்படியான் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் தொழிலதிபர் மலேசியா பாண்டியனை (மக்கள் தமிழ்தேசம்) விட 1500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இருமுறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 1962, 1980, 1984-ம் ஆண்டுகளில் பார்வார்டு பிளாக் வெற்றி பெற்றுள்ளது.

கடலாடி : கீழக்கரையை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் கீழக்கரை முஸ்லிம்களின் ஆதரவை பெறுபவர்களே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோ.பாலகிருஷ்ணன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாவட்ட திமுக செயலர் சுப. தங்கவேலனைவிட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருவாடானை : இத்தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கே.ஒ.ஆர்.ராமசாமி அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜோன்ரூசோ, திமுக கூட்டணி சார்பில் குட்லக் ராஜேந்திரன் (பாஜக) ஆகியோரைவிட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3. பனைத் தொழிலாளர்களின் ஆதரவு யாருக்கு? – கடலாடி தொகுதியில் 36,000 வாக்காளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் 32,000 வாக்காளர்களும், பரமக்குடி தொகுதியில் 14,000 வாக்காளர்களும், திருவாடானை தொகுதியில் 18,000 வாக்காளர்களும் முதுகுளத்தூர் தொகுதியில் 14,000 வாக்காளர்களும் பனைத் தொழில் செய்பவர்களாகவும், அவர்களை சார்ந்து தொழில் செய்யும் நாடார் சமுதாயத்தவராகவும் உள்ளனர்.

4. அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப மாறும் தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஓட்டப்பிடாரம் மட்டும் தனித் தொகுதி.

கோவில்பட்டி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகள் எதுவும் குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

தாமிரபரணியில் இருந்து சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இதைத் தடுக்க தடுப்பணைகள் கட்டி, கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கோரிக்கை. மேலும், ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைகளை தூர்வாரி, அமலைச் செடிகள், காட்டாமணக்குச் செடிகளை அகற்ற வேண்டும் என்பதும் விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

கோவில்பட்டி தொகுதியில் ஏராளமான தீப்பெட்டி தொழில்சாலைகள் உள்ளன. இயந்திரமயமாக்கல் காரணமாக கையால் செய்யப்படும் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்து வருகிறது.

பழையகாயலில் ஜிர்கோனியம் தயாரிக்கும் தொழில்சாலை அமைப்பதற்கான பணிகளை உடனே துவக்க வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழில்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் கோரிக்கைகள்.

5. வி.ஐ.பி. தொகுதி: “தோழர்’களின் கோட்டையாக திகழும் திருவட்டார் : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் சங்கத்தினர் நிறைந்த மலையோர எல்லைத் தொகுதி திருவட்டார். இத்தொகுதியில் 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜே. ஹேமச்சந்திரன். திருவட்டார் தொகுதியில் குலசேகரம், அருமனை, திருவட்டார் ஆகியவை முக்கியமான இடங்கள். இங்கு ரப்பர் தொழிலாளர்கள் அதிகமுள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.