பிபிசி தமிழ்: எதிர்வரும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வி (அலர்ட் விட்டவர்: Sambhar Mafia)
அதேசமயம், தம்மோடு கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால், தமிழக சட்டமன்றத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
தமது கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆளும் அஇஅதிமுக தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய கிருஷ்ணசாமி, அஇஅதிமுக தலைமை, தமது கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து, தமது தலித் சமூகத்திற்கு சம அந்தஸ்தும் அதிகாரப்பகிர்வில் உரிய இடத்தையும் உறுதி செய்தால் அஇஅதிமுகவுடன் தமது கட்சி கூட்டணி அமைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.
அஇஅதிமுகவுடன் தமது கட்சிக்கு ஏற்கெனவே ரகசிய ஒப்பந்தம் உருவானதாக வெளியாகும் தகவல்களை உறுதியாக மறுத்த கிருஷ்ணசாமி, எந்த தேர்தல் உடன்பாடானாலும், அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.
தமக்கும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, கடந்த காலத்தில் தலித் என்கிற பொதுவான தளத்தில் தாங்கள் ஒருவரும் இணைந்து செயல்பட்டதாகவும், ஆனால் திருமாவளவன் தலித் என்கிற தனி அடையாளத்தை விட்டு விலகி, தமிழ் அடையாளத்தில் தன்னை சுருக்கிக்கொண்டதால் தான் தலித் ஒற்றுமையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தலித் அடையாளத்திற்கு தமிழ் அடையாளம் ஒரு பின்னடைவை உருவாக்ககூடிய விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.










