லயோலா கல்லூரி – கருத்து கணிப்புகள்


சென்னை லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை சார்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில், பல ஆச்சரியத் தகவல்கள். அதில் முக்கியமானது 2004_ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த மக்கள் மனநிலை, இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்பது. இந்தக் கருத்துக்கணிப்புகள் பற்றி அத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகத்திடம் பேசினோம்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

பா.ஏகலைவன்

‘‘கடந்த ஐந்தாண்டுகளாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ‘தமிழக அரசியல் பண்பாட்டு அமைப்பு’ பற்றிய கருத்துக்கணிப்பை, தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரையில் ஒரு கட்டமாகவும், ஜனவரி எட்டிலிருந்து பதினாறாம் தேதி ஒரு கட்டமாகவும் சர்வே செய்தோம்.

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவை தயார் செய்திருக்கிறோம். இதில் தொகுதி வாரியாக மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்ற பங்கீடு தெரியாத நிலையில், மாவட்டவாரியாக சர்வேயை மேற்கொள்வதுதான் சிறந்தது என செயல்பட்டோம். இதிலும் நீலகிரி மாவட்டத்தை நடைமுறை காரணங்களுக்காகத் தவிர்த்தோம். அதேபோன்று புதுவை மாநிலமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கருத்துக்கணிப்பில், கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளைப் பயன்படுத்தியது ஓர் உதவிக்காகத்தான். மற்றபடி அவர்களின் போக்கிலேயே சகஜமாகப் பேசி, கலந்துரையாடல் அடிப்படையில், அவர்களின் ஆழமான கருத்துப்பதிவு என்ன என்பதையும் கணக்கிலெடுத்தோம். சமூக உளவு ஆய்வியல் முறையில் இது ஒரு முக்கிய அம்சம்.

கடந்த இரண்டாயிரத்து நான்கு, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஓர் ஆய்வை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அப்போது அ.தி.மு.க.விற்குப் பத்தொன்பது சதவிகிதம் மக்கள் ஆதரவு. தி.மு.க.விற்கு ஐம்பத்தேழு சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை சர்வேக்கள் நடத்தினோம்.

தற்போது எடுத்த சர்வே முடிவுப்படி, அ.தி.மு.க. படிப்படியாக 33.7 சதவிகிதத்திற்கு உயர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தி.மு.க.வோ பழைய செல்வாக்கு நிலையிலிருந்து படிப்படியாகக் குறைந்து, 38.4 சதவிகிதத்தில் இறங்கிவிட்டிருக்கிறது. நான்கு சதவிகிதம்தான் வித்தியாசம். இது வெறும் சதவிகித கண்ணோட்டம் மட்டுமல்ல; அரசியல் போக்கைக் காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது. இதற்குள் அ.தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரை பயன்படுத்தி வரும் ‘அணுகு முறையையே பயன்படுத்துமேயானால், மிக எளிதாக தற்போதிருக்கும் நான்கு சதவிகித இடைவெளியைத் தாண்டிவிடும் என்றே சொல்லலாம்.

அ.தி.மு.க. ஆதரவு உயர்வுக்குக் காரணம், இந்த ஆட்சியில் மக்கள் கண்களால் பார்க்கும், நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததுதான்.

சுனாமி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள், விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் லோன், வீரப்பன் உள்ளிட்ட சில சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பலவும், நம்பகத்தன்மை உணர்வை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதே சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் அதிருப்தியும் உள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கும் அது சென்றடையவில்லை. கட்சி சாராத மக்கள் என நாற்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு உதவி கிட்டவில்லை. அ.தி.மு.க. தி.மு.க. என அரசியல் பார்க்காமல், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி என அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டால், வரும் தேர்தலுக்குள் நான்கு சதவிகித வித்தியாசம் என்பது பெரிய விஷயமேயில்லை.

இதில் மற்றொரு அம்சத்தையும் கணக்கெடுத்தோம். தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி தன்னந்தனியாக அ.தி.மு.க.வை எதிர்த்து நின்றால் ஜெயிப்பது கடினமே.

எனவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து ஒரே ஒரு கட்சி விலகி வந்தாலும் கூட, அ.தி.மு.க.விற்குச் சாதகமான வாய்ப்பாகப் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றைக்கூட உதாசீனப்படுத்த முடியாது.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், கட்சிகளில் மூன்றாவது இடம் என்றிருப்பது நடிகர் விஜயகாந்துக்குத்தான் 8.9 சதவிகிதம். இதற்கடுத்துதான் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என்று சதவிகித அடிப்படையில் வரிசையாக வருகிறது. நடிகர் விஜயகாந்திற்கு இருப்பது ‘பாசிட்டிவ்’ ஓட்டு அல்ல. அவரது ஆளுமை, வசீகரிப்பு, கொள்கை என்பவற்றிற்கானதல்ல.

‘இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டும், அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ§ம் இந்த இரண்டுக் கட்சிகளில் யாராவது ஒருவருடன்தான் இருக்கிறது. மூன்றாவதாக, புதிதாக ஒருவர் வரட்டுமே’ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த ஆதரவு உள்ளது. இந்த நிலையும் நடிகர் விஜயகாந்த் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தால் மாறிவிடும்.

அதேபோன்று விஜயகாந்திற்கு மட்டுமே இந்த 8.9 சதவிகிதம் ஆதரவு. அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு, அந்த சதவிகிதம் இல்லை. எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறார்? அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார்? தேர்தலை ஒட்டிய மற்ற பரிவர்த்தனை என்பதையெல்லாம் பொறுத்து, விஜயகாந்த் கட்சி வேட்பாளரின் செல்வாக்கு மேலும் கூடும் குறையும். அவ்வளவுதான்.

சமீபத்தில் அவர் தேனியில் கலந்துகொண்ட கூட்டத்தில் நாங்கள் நேரில் பங்கெடுத்தோம் நல்ல கூட்டம் இருந்தது.

அந்தக் கூட்டத்தில் எண்பது சதவிகிதம் பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் ஆதரவாளர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் ‘பார்ப்போம்’ என்ற நிலையிலிருப்பவர்களாகத்தான் இருந்தார்கள். விஜயகாந்த் தவிர, வேறு எந்த நடிகர் கட்சி தொடங்கி வந்தாலும் இந்தளவில் அல்லது கூடுதலாகவே கூட்டம் இருக்கும். ஆனால், இந்த அளவு ஆதரவு இருக்குமா என்பது தெரியாது.

இவரால் தனித்து நின்று எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை சிறு அளவில் பிரிக்க முடியும்.

அதேபோன்று விஜயகாந்த் வருகையால் சாதி அடிப்படையில் வைகோவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டதாக சர்வேயில் தெரியவில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் முதலிடம் வன்னியர்கள். அடுத்து ஆதி திராவிடர் மற்றும் முக்குலத்தோர் என நீண்டு, கடைசியாகத்தான் நாயுடு சமூக ஆதரவு விஜயகாந்திற்கு வருகிறது.

தி.மு.க.வின் படிப்படியான சரிவுக்குக் காரணம் என்பது, யதார்த்தத்தில் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். எதிராக இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசு, படிப்படியாகச் சில திட்டங்களை அறிவித்து ஆதரவு நிலையைப் பெருக்கிவரும்போது, தி.மு.க. மக்கள் ஆதரவு என்பது, குறையத்தான் செய்யும்.

அடுத்த குறை, தி.மு.க. சார்பாக இப்போது மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் நலன் பலன் என்று ஏதும் இல்லாததுதான். தொலை தொடர்பு சாதனை செல்போன் சலுகை வசதி என தினந்தோறும் டி.வி.யில் செய்தி வருவதைப் பற்றி மக்களிடம் கேட்டோம்.

மெஜாரிட்டி ஓட்டு வங்கி என்பது கீழ்த்தட்டு, மக்கள்தான். அவர்கள் ‘எல்லாமும் சரி வயிற்றுப் பாட்டுக்கு, சோற்றுக்கு வழி உள்ளதா?’ என்கிறார்கள். வரவேற்கக்கூடிய திட்டங்கள் என்பதற்கு மறுப்பில்லை. அதனால் வாக்காளருக்கு நேரடிப் பயன் என்ன என்ற கேள்வி உள்ளது.

‘‘தமிழ் செம்மொழியாகிவிட்டது. அதனால் எனக்கென்ன பயன்?’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது? யாருக்கு? ஓட்டுப் போடும் எங்களுக்கு இப்போது என்ன? என்ற நிலையில் உள்ளார்கள். இப்படி மக்களுக்கு நேரடியான பலன் இல்லாதபடிக்கு தி.மு.க.வின் அணுகுமுறை இருந்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.

அடுத்து, தி.மு.க. கூட்டணி பற்றியது. இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு என்பது மிகமிக குறைவுதான். அது நீடிக்குமா நீடிக்காதா, யார் பிரிந்து செல்வார்கள், யார் விலகுவார்கள், தேர்தலின் போதுதான் கூறமுடியும் என்ற குழப்ப நிலையையே பலரும் தெரிவித்துள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எடுத்த ‘கூட்டணி ஒற்றுமை’ பற்றிய கருத்துக் கணிப்பில், அபாரமான ஆதரவு இருந்தது. இப்போது சுத்தமாக குறைந்து, சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் இந்தக் கூட்டணியே நீடிக்கும் என்கிறார்கள்.

தி.மு.க. ஆதரவு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று மக்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மேல் அதிருப்தியை விட, திருப்தி அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சி என இருக்கும் தி.மு.க.வைப் பார்க்கும்போது, அதிருப்தி என்று எதுவும் இல்லை. சிக்கலான நிலைதான். ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை என இருக்க வேண்டும். அல்லது அந்தவித எதிர்ப்பலைக்கான சாத்தியமும் தெரிய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.விற்கு அப்படி ஏதும் இல்லை. அதேபோல தி.மு.க. ஆதரவு அலையும் இல்லை. இன்றைய தேர்தல் களத்தின் விநோத சூழ்நிலை இதுதான். அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதத்தில் பெரிய டிரெண்ட் ஏதும் நிகழாதபட்சத்தில், இப்போதைய மக்கள் போக்கில் மாற்றமிருக்காது. அ.தி.மு.க.விற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு என்ற போக்கு, தி.மு.க.விற்குச் சரிவு ஏற்படலாம், என்ற போக்கு. அதுதான் நீடிக்கும்.

அதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகி களம் குதித்தால், அதுவும் அ.தி.மு.க.விற்குத்தான் சாதகமாக முடியும். வெற்றி என்பது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம். என்றாலும், நிச்சயிக்கக்கூடியதுதான். தி.மு.க.வின் தற்போதைய பலம், அதன் கூட்டணியின் பலமே. இதில் மூன்றாவது அணி என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏதாவது ஒரு பிரதான கட்சி அதிலிருந்து வெளியேறும். இது நடந்தால் வாக்கு சதவிகிதம் குறையும். வெற்றி, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.’’ என்று முடித்தார் ராஜநாயகம்.

அடுத்த முதல்வர் யார்? என்ற 2005 மே மாத கருத்துக் கணிப்பில், பதினைந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னணியில் இருந்தார். இதே கணிப்பில் அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. கருணாநிதிக்கு 87.46 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 82.09 புள்ளிகள். இது ‘திறமை.’ அடிப்படைக்கு எடுத்தது. ‘வாய்ப்பு’ என எடுத்ததில் கருணாநிதிக்கு 81.98 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 78.07 புள்ளிகள். சுமாராக நான்கு புள்ளிகள்தான் வித்தியாசம்.

இதில் மூன்றாவது இடம் நடிகர் விஜயகாந்த் கட்சிக்கு. ‘திறமை ’அடிப்படையில் 32.27 புள்ளிகளும் ‘வாய்ப்பு’ ரீதியில் 30.19 புள்ளிகளும் எடுத்திருக்கிறார். அதாவது, மாற்றுக் கட்சி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதபவர்கள்தான் இவர்கள்.

மக்கள் இன்றைக்கு ஓட்டுப்போட்டால், தி.மு.க.விற்கு 38.4 சதவிகிதம் அ.தி.மு.க.விற்கு 33.7 சதவிகிதம் (வித்தியாசம் 4 சதவிகிதம்) விஜயகாந்திற்கு 8.9 சதவிகிதம், காங்கிரஸ§க்கு 4.7, அடுத்து பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் உள்ளன.

சிறுசிறு கட்சிகளுக்கு .2 சதவிகிதம். வாக்களிக்க விரும்பாதவர்கள் 10 சதவிகிதம்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமங்கள் தோறும் ‘தன்னம்பிக்கை’க் களமாக வளர்ந்துள்ளன. இவர்களின் ஆதரவு என்பதும் அ.தி.மு.க.விற்குத்தான் அதிகம். பெண்கள் ஓட்டுக்கள் அதிகப்படியாக அ.தி.மு.க.விற்குத்தான்.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

http://www.kumudam.com/reporter/260106/pg1.php

பா.ஏகலைவன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.