“மார்ச் மாதம் திருச்சியில் நடக்கவிருக்கும் தி.மு.க. மாநாட்டுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட கருணாநிதி தீர்மானித்து இருக்கிறார். எந்தெந்த தொகுதிகள் யார்யாருக்கு என்பது முடிவாகாவிட்டாலும், குறைந்தபட்சம் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்வது அவருடைய திட்டம். இதற்காக சோனியாவின் உதவியை நாடியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
கருணாநிதி, இப்போது ஜெயலலிதாவைவிட கூட்டணிக் கட்சிகளை நினைத்துதான் அதிகம் கவலைப்படுகிறார். அதிக தொகுதிகள்… கூட்டணி ஆட்சி என கலர் கனவுகளில் இருக்கும் கூட்டணித் தலைவர்கள், அவரது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
மர்மப் பேச்சோடு வளையவரும் வைகோ… கூப்பிட்டாலும் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்கு வராத ராமதாஸ்… ஏகப்பட்ட கோஷ்டி கானங்களோடு குழப்பத்தில் தவிக்கும் காங்கிரஸ்…தனி ரூட்டில் ஆவர்த்தனம் செய்து வரும் கம்யூனிஸ்ட்கள்… என இவர்கள் எல்லோரையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களில் யாராவது ஓரிருவர் வெளியில்போய் எதிரணியில் சேர்ந்தாலும் வெற்றிக்குப் பங்கமாகி விடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”











