Daily Archives: செப்ரெம்பர் 19, 2005

Gurumurthy’s Take on New Orleans in Thuklaq  

Gurumurthy’s Take on New Orleans in Thuklaq
 Posted by Picasa

Gurumorrthy’s Take on New Orleans in Thugalq 

Gurumorrthy’s Take on New Orleans in Thugalq Posted by Picasa

இரு சந்திப்பு

பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு மாலை

ஆஸ்தான இலக்கிய சந்திப்புகள் நிகழும் ட்ரைவ்-இன்னில்தான் பி.ஏ.கிருஷ்ணனை முதல் முறை சந்தித்தேன். அப்பொழுது நான் ‘புலி நகக் கொன்றை’யை கேள்வி மட்டுமே பட்டிருந்தேன். இரா. முருகன், ‘நேசமுடன்’ வெங்கடேஷ், ஐகரஸ் பிரகாஷ் ஆகியோர் வழிநடத்த, நான் கொஞ்சமாய் வாய் பார்த்து, நிறைய அசட்டுக் கேள்விகளைக் கேட்டு, இனிமையாக சென்ற உரையாடல். அஸ்ஸாம் அனுபவங்கள், சத்யஜித்ரே திரைப்படங்கள், உலக இலக்கியம் என்று பல விஷயங்களை எளிமையாக எடுத்து வைத்தவிதம், என்னுடைய விமானத்தை கிட்டத்தட்ட தவறவிட வைத்தது.

மீண்டும் பி.ஏ.கிருஷ்ணனை பாஸ்டனில் சந்திக்கும் வாய்ப்பு ஆகஸ்ட் இருபத்தெட்டு வாய்த்தது. கூடவே மாதவன், ராஜேஷ் சந்திரா, நவன், நம்பி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முறை ‘புலி நகக் கொன்றை’யை முழுதாகவும், அவரே எழுதிய அதன் ஆங்கில மூலம் ‘டைகர் க்ளா ட்ரீ’யை கொஞ்சம் படிக்கவும் முடிந்திருந்தது.

நாவல் என்பது முழுமையான வாழ்க்கையை சொன்னாலும், முழுமையடையாத எண்ணத் தேக்கத்தை எவ்வாறு வாசகனிடம் ஏற்படுத்த வேண்டும், தமிழ் சிறுகதைகளின் உலகளாவிய தரம், திரைப்படங்களின் சீரழிவும் சலனத்தை ஏற்படுத்தும் அரிய சினிமாக்களும், ஆங்கிலக் கவிதையுலகமும் தமிழ் களமும், இலக்கியத்தின் பயன், புத்தகங்களுக்கும் வாசகனுக்கும் இருக்கவேண்டிய உறவு, மார்க்ஸ¤ம் கம்யூனிஸமும் லெனினும் என்று சமூக அக்கறையுடன் அலுக்காத வகையில் உரையாடினார். திணறடிக்காமல், எங்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்த பிஏ கிருஷ்ணனுக்கு எங்களின் நன்றி.

சுந்தர ராமசாமி க. நா. சு.வை நினைவு கூறும்போது எழுதியமாதிரி, பிஏ கிருஷ்ணன் அன்று குறுகிய நேரத்தில் ஏகமாகச் சொன்ன ஆசிரியர்களுடைய பெயர்களை எல்லாம் அவரை வழியனுப்பியபின் நினைவுகூர முடியாமல் போனதில் எனக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்படுகிறது. அவர் சொன்ன விஷயங்களை அவரே எடுத்துக் கொண்டு போய்விட்ட மாதிரி இருந்தது.


சுந்தர ராமசாமியுடன் ஒரு சந்திப்பு

‘திண்ணை’ கோபால் ராஜாராமின் வீட்டில் இன்று (செப்டம்பர் 18, ஞாயிறு) சுந்தர ராமசாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நெடிய தேகம். பார்த்தவுடன் மயக்கும் வசீகரம். வாஞ்சையானப் புன்னகை. நட்புடன் இறுகத்தழுவி இறுக்கத்தை உடனடியாக நீக்குகிறார். வயது வித்தியாசத்தையும் அனுபவ அறிவையும் எழுத்து சாதிப்புகளையும் மறக்கடிக்கும் எளிமை. வெள்ளை தாடி ஐம்பத்தைந்து வருட வாசக தன்வயமாக்கலை காட்டுகிறது. கருத்துக்களை முன் வைப்பதில் கண்ணியம் கலந்த காத்திரம். பதில்களைக் கோர்வையாக விவரிப்பதில் அவரைப் படிப்பதையொத்த அனுபவம். இளைஞனின் ஆர்வத்துடன் புதிய எழுத்தாளர்களையும் மறந்து போன புத்தகங்களையும் கவனிக்கப்படாத படைப்புகளையும் கண்கள் விரிய விவரிக்கிறார். தான் பேசுவதை விட மற்றவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து விவாதத்தையும் மதிப்பீடுகளையும் செழுமையாக்குகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தின் தமிழ் அடையாளமான அண்ணாமலை அவர்களும் கலந்து கொண்டு தனித் தமிழ், மணிப்பிரவாள நடை, க்ரியா அகராதி தயாரித்த அனுபவங்கள், வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணர் என்று பல கருத்துக்களையும் விவாதங்களையும் தெளிவாகப் பகிர்ந்துகொண்டு மிகுந்த பலனை அளிக்கும் எதிர்வினைகளை முன்னிறுத்தினார்.

எழுத்தாளர்களையும் பெரியோர்களையும் சந்தித்த அனுபவத்தை சுராவின் புத்தகத்தைக் குறித்த குறிப்புடன் முடிக்கிறேன்:

“இன்று வரையிலும் புத்தகங்கள் வியப்பாகவே இருக்கின்றன. வெட்டித் துண்டாடப்பட்ட காகிதங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எறும்புச் சாரிகள். காகிதங்களை இணைக்கச் சில தையல்கள். அதற்கு மேல் ஒரு சட்டை. இலேசாகவோ அல்லது கட்டியாகவோ. அந்த இணைப்பிலிருந்து ஒரு பெரும் வியப்பு எப்படித் தோன்ற முடியும்? புத்தகங்களைப் பார்க்கும்போது ஏன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது? புத்தம் புதிய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கடைக்குள் நுழையும்போது ஏன் நாடித் துடிப்பு வேகம் கொள்கிறது? ஏன் ஒரு பேராசை மனத்தில் விம்முகிறது? பெண்களின் அழகுகள் சகஜமான பின்பும்கூடப் புத்தகங்களின் அழகுகள் ஏன் சகஜமாக மறுக்கின்றன? புத்தகங்கள் கோடிக்கணக்கில் உற்பத்தியான பின்பும் எப்படி அவை புதுமையும் புதிரையும் வனப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன?

புத்தகங்கள் (எழுத்தாளர்களும்தான்) அளிக்கும் வியப்பு விளக்கத்திற்கு அப்பாற்பட்டது என்றுதான் நினைக்கிறேன்.”

(ஆளுமைகள், மதிப்பீடுகள்/பக்.383)

கோபால் ராஜாராமின் விருந்தோம்பலும், செவிக்கு உணவோடு சுவையான அறுசுவை பதார்த்தங்களுடன் கூடிய உணவும், விடைபெறுவதற்கு முன் தேர்ந்தெடுத்து கொடுத்த சில புத்தகங்களும் சந்திப்பின் உவகையை திக்குமுக்காட வைத்தது.


Sundara Ramasamy Annamalai Meet with PKS Rajaram Thukaram Sundar Paari

காலச்சுவடு நேர்காணல் :: இ. அண்ணாமலை (1938) உலக அளவில் மதிக்கப்படும் மொழியியல் அறிஞர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பிஎச். டி. பட்டம் பெற்றவர். மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (Central Institute of Indian Languages – CIIL) பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர். அமெரிக்கா, ஆஸ்திரேýயா, ஜப்பான், நெதர்லாந்து முதலான நாடுகளின் உயராய்வு மையங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். எதிர்வரும் கல்வியாண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராக அமர்ந்து, தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். “க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, “தற்கால மரபுத்தொடர் அகராதி’, “மொழிநடைக் கையேடு’ ஆகியவற்றின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இவர் எழுதிய நூல்கள்: Adjectival Clauses in Tamil; Managing Multilingualism in India; (ed.) Language Movements in India


நன்றி: தமிழோவியம்

தெரிப்பு

சுந்தர ராமசாமி –> பா ராகவன் –> கத்ரீனா –> பெப்ஸி உமா –> ஜான் ஜி ராபர்ட்ஸ்

சுராவின் சந்திப்பை முன்னிட்டு, ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தின நாள் ரிவிஷன் கொடுக்கும் +2 மாணவன் போல், ஆளுமைகள், மதிப்பீடுகள், ஜேஜே, காகங்கள் என்று கலந்துகட்டிப் புரட்டும்போது ஒத்துக்கொள்ளத்தக்க கருத்து பல கிடைத்தது. சுரா சொல்வார்…

இந்தியாவுக்குள் அகதிகளாய் வரும் சீனர்களால் ஆபத்து என்று எல்லா எழுத்தாளர்களும் குமுறிக் கொண்டிருந்தால், சீனர்களின் வருகை எவ்வாறு நன்மை பயக்கும்; குறைவான சம்பளத்தில் உழைப்பவர்களின் அவசியம்; எவ்விதம் அவர்கள் உள்நுழைவதால் பொருளாதாரம் சமனடைகிறது என்றெல்லாம் எழுதத் தோன்றும்.

கொஞ்ச நாள் கழித்து சீனர்களின் வருகை எவ்வாறு பாரதத்தை வீறுநடை போட வைக்கிறது என்று மட்டுமே பார்வை மங்கினால், உடனே அப்பொழுது புதிய கலாசாரத்தின் வருகை எவ்வாறு இந்தியாவை சீரழிக்கும்; உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு பறிப்பு; வோட்டுரிமை மாற்றங்கள் என்று எழுதுவேன் என்னும் அர்த்தத்தில் விளக்கியிருந்தார்.

அட…. நான் சுரா மாதிரி யோசித்திருக்கிறேனே என்று வியப்பு ஏற்பட்டது. சிந்திக்க மட்டுமே செய்திருக்கிறேன். அவரைப் போன்ற ஒளிவு மறைவற்ற அகப்பார்வையை தெளிவான முறையில் முன்வைத்ததுண்டா என்பதையும் சிந்திக்கிறேன்.

பா ராகவனின் கத்ரீனா குறித்த கட்டுரையும் ஒருவித சார்புநிலையைப் படம் பிடித்து வைக்கிறது. தமிழகத்தில் சுனாமியின் போதும் மும்பை முற்றுகையின் போதும் தலையிடாத அரசியலை குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் கத்ரீனாவை முன்வைத்து குடியரசு கட்சியும் சுதந்திர கட்சியும் தங்கள் அர்ப்பணிப்பையும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளையும் நவம்பரில் வரப்போகும் இடைத்தேர்தல் அரசியலை அரங்கேற்றியது.

ஐயாயிரம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அனாதரவாக ஐ-10 நெடுஞ்சாலையில் பார்த்ததாக ஜெஸ்ஸி ஜாக்ஸன் வருத்தப்படுகிறார். அடிமைக் கப்பலை போல தோற்றம் அளித்ததாகத் தொடர்ந்து டிவியில் பல பேட்டி கொடுத்து வந்தார். உதவிக்காகத் தொடர்பு கொண்ட தேவாலயங்களில் ‘அவர்கள் கறுப்பா? வெள்ளையா?’ என்று விசாரித்ததாக வருத்தப்பட்டார்.

ஹஃபிங்டன் போஸ்ட்டை சேர்ந்த ராண்டால் ராபின்சன் அடுத்த நிலைக்கு சென்றார். ‘கத்ரீனாவில் பாதிக்கப்பட்ட கறுப்பர்கள் பிணந்தின்னிகளாகிப் போனார்கள். அமெரிக்காவின் இனப் பாகுபாடில் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அமெரிக்கா என்பது மிகப்பெரிய பம்மாத்து’ என்று எழுதினார். நேரில் சென்று பார்த்த மாதிரி விவரித்ததனால், நேரடியாகப் பார்க்க முடியாதவர்களின் கடுமையான விமர்சனத்தினால் ‘இறந்தவர்களை உண்டு வாழ்கிறார்கள்’ என்பதற்கு மட்டும் மறுப்பு விட்டார்.

தொலக்காட்சியில் நேரடி ஒளிபரப்பான நிகழ்ச்சியின் நடுவே மைக் மையர்ஸுடன் தோன்றிய கான்யே வெஸ்ட், ‘ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கறுப்பர்களைப் பற்றி கவலையில்லை. நம்மை குறிவைத்து சுடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்’ என்று பொரிந்து தள்ளினார்.

மைக் லூகோவிச் கார்டூன், கட்சித் தலைவர் ஹோவர்ட் டீனின் பேச்சுக்கள், பார்பரா லீ நேர்காணல்கள், டெட் ரால் கேலி சித்திரம் என்று தொடர்ந்து அடுக்கலாம். பா ராகவனும் விகடனில் எழுதினார்.

என்ன…. பெப்ஸி உமா தொலைபேசியது போல் வெகுஜன மீடியத்தில் எழுதிவிட்டார்.

தொலைபேசியில் வழக்கம் போல் ‘நாலைந்து ஸ்பான்ஸர் மாறினாலும், நீங்க எப்படி இவ்வளவு இளமையாக இருக்கீங்க ?’, ‘வீட்டில் பையன் போன் பேசி விளையாடறானா ?’ என்பது போன்ற சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், ஆங்கிலம் மட்டுமே உசாவும் நமீதாவை விட, தமிழில் சம்சரிக்கும் (முன்னாள் பெப்சி) உங்கள் சாய்ஸ், ‘உமா’வை நோக்கி பிரமாஸ்திரத்தை ஏவினார் எல்லே அம்மணி.

‘உங்களின் மனதை சூர்யா, அஜீத், விஜய், விக்ரம், ஆர்யா, சிம்பு, தனுஷ், ரவி போன்ற இளம் ஹீரோக்களில் யார் கவர்ந்திருக்கிறார்கள்?’

விவகாரமான கேள்வி. சரியான பதில் ‘என் ஆருயிர் கணவன்’.

சமாளித்துக் கொண்ட உமா பதிலளித்தார். ‘எனக்கு விப்ரோ ப்ரேம்ஜி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, சபீர் பாடியாதான் மனங்கவர்ந்தவர்கள். அஃப்கோர்ஸ், என் கணவனை சொல்லியே ஆக வேண்டும்!’ என்று முடித்துக் கொண்டார்

பொலிடிகலி இன்கரெக்ட் பதில்.

புக் மீமீயில் அஞ்சு புத்தகம் சொல்லுங்க என்றவுடன் ஐம்பது புத்தகங்கள் சொன்ன கதையாக, அதிகப்பிரசங்கி பதில். அறிவு உள்ளவர்கள்தான் அழகு உள்ளவர்களா? பணம் படைத்தவர்கள்தான் மனங்கவர்பவர்களா? நிறுவன முதலைகள்தான் முதல் தரமா? என்று எதுகை மோனையோடு கேள்வி கேட்க அருமையான வாய்ப்பு.

பா ராகவன் மாட்டிக் கொண்டார். பெப்ஸி உமா (இப்போதைக்கு) தப்பித்து விட்டார்.

எப்பொழுதும் வலைப்பதிவர்கள் வாயில் விழுந்து புரளாமல் இருக்க செனேடர்களிடம் அகப்பட்ட ஜான் ஜி ராபர்ட்ஸ் போல் பதில் சொல்லவேண்டும்:

Senator Charles E. Schumer, Democrat of New York, sarcastically derided the “absurd” nature of Roberts’s responses. He wisecracked that if asked, Roberts probably would not even name a movie he liked. “I ask you if you like ‘Casablanca,’ “ Schumer said. “You respond by saying, ‘Lots of people like “Casablanca.” ‘ You tell me, ‘It’s widely settled that ”Casablanca” is one of the great movies.’ “

இது ஒருவழிப்பாதை.

ராபர்ட்ஸை ஷுமர்கள் போட்டுத் தாக்கலாம். செனேட்டர்களை குறித்து ராபர்ட்ஸ் இந்த மாதிரி எள்ளிக் கொண்டிருந்தால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாது!

Sundara Ramasamy & Annamalai 

Sundara Ramasamy & Annamalai Posted by Picasa

Sundara Ramasaamy 

Sundara Ramasaamy Posted by Picasa

PA Krishnan Meet 

PA Krishnan Meet Posted by Picasa

Cats & Bulls 

Cats & Bulls Posted by Picasa

Annamalai 

Annamalai Posted by Picasa

Sundara Ramasamy & Annamalai 

Sundara Ramasamy & Annamalai Posted by Picasa