Tag Archives: RIP

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்?

ஜிம் சைமன்ஸ் மறைந்துவிட்டார்.

தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:

“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons).
31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”

https://news.lankasri.com/article/world-richman-jim-simons-dies-at-86-1715378169

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்

உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.

ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.

“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”

Jim Simons

ஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பாட்டி வீட்டிற்கு செல்வோம். அவள் விவித பாரதியின் சாயாகீத் ரசிகை. அங்கே கேட்க ஆரம்பித்த “தேரே பினா ஜிந்தகி ஸே கோயி… ஷிக்வா தோ நஹி”, பிறிதொரு அந்தாக்‌ஷரியில் கை கொடுத்தது.

அந்தப் பாடலை சற்றே பார்ப்போம். நாயகனும் நாயகியும் ரகசியமாக சந்திக்கிறார்கள். நாயகியைப் பொறுத்தவரை அவன் மட்டும் அவளுடைய வாழ்வில் குறுக்கிடா விட்டால், அவள் வாழ்வு தெளிந்த நதியாக, கொந்தளிப்புகள் இல்லாமல் அமைதியான ஓடத்தில் மிதந்து சென்றிருக்கும். ஆனால், அவன் இல்லாவிட்டால், வாழ்க்கை என்பது வாழ்வாக இருந்திருக்காது.

நான் நாவலும் சிறுகதையும் படிக்க ஆரம்பித்ததே, அதை ஏதாவதொரு பெண்ணிடம் கொடுத்து அவளின் மனதைத் தொட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான். “நில்… கவனி… காதலி” என்று ராஜேஷ் குமார் கொடுத்து பார்த்தேன்; பலிக்கவில்லை. அடுத்த அஸ்திரம்… ‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ அந்தாக்சரி விளையாட்டு. இந்தப் பாடல் என் உணர்வை, குறிப்பால் உணர்த்த உதவியது.

அந்த மாதிரி இன்னொரு அற்புதமான ரேடியோ நிகழ்ச்சி Only A Game.

அலுவலில் அரசியல் பேச முடியாது. எல்லோரும் தீவிர கொள்கைவாதிகள். என் உடன் வேலை பார்க்கும் டீமில் ஐந்து பேருக்கு ஐந்து கொள்கை; ஒரே அணியில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக ஒருவர்; காவல்துறையின் பணிக்கு அதி தீவிர ஆதரவாளர் இன்னொருவர்; பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பையும் வெறுப்பவர் பலர்; சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கியம் என்று உறவினர்களை போருக்கும் காக்கி சட்டைக்கும் பலி கொடுத்தவர் சிலர்.

எனவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கான பேச்சு என்பது – “விளையாட்டு”. நேற்று ரெட் சாக்ஸ் எப்படி பேஸ்பால் ஆடினார்கள்? இந்த வருடம் பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்தில் சாதிப்பார்களா? பனிச்சறுக்கு ஹாக்கியில் ப்ருயின்ஸ் எவ்வாறு கெலிப்பார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக நியு இங்கிலாந்து பேட்ரியாட்ஸ், டாம் ப்ரேடி, பெலிசிக் எல்லோரும் போங்காட்டம் ஆடுகிறார்களா அல்லது அழுகுணி ஆட்டத்தில் அமெரிக்க கால்பந்தின் மன்னர்களாக இருக்கிறார்களா?

இப்படி பேச ஒரு நிகழ்ச்சி… ஒலிப்பதிவு… பாட்காஸ்டிங்… தேவை. அதை டபிள்யூ.பி.யூ.ஆர். வானொலியின் “ஒன்லி எ கேம்” நிகழ்ச்சி அருமையாக பூர்த்தி செய்தது.

அலுவலுக்குப் போக ஒரு மணி நேரம். திரும்பி வருவதற்கு இன்னொரு மணி நேரம். அப்போது கேட்பதற்கென்று பிரத்தியேகமாக சில நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பேன்:

  • வெயிட் வெயிட்… டோண்ட் டெல் மீ
  • ரேடியோ லாப்
  • ஃப்ரீகனாமிக்ஸ்
  • டெட் டாக்ஸ்
  • ஷங்கர் வேதாந்தம் வழங்கும் ஹிட்டன் பிரெயின்

அந்த வரிசையில் இந்த ஒலிபரப்பிற்கு சிறப்பான இடம் இருந்தது. வெறுமனே ஸ்கோர்களை ஒப்பிக்காமல், அந்த ஆட்டக்காரர்களின் கதையையும் சொல்லியது. சட்டென்று பருந்துப் பார்வை பார்த்து, பழைய சரித்திரத்தை விவரித்து, விஷயத்தைப் புரிய வைத்தது. பெரிய பெரிய அணிகளின் ஆட்டங்களைப் பற்றி மட்டும் அலசாமல், பக்கத்து வீட்டுப் பையன் ஆடிய விதத்தை அவ்வப்போது கண்முன்னே காதின் வழியே உபாசித்தது.

எத்தனையெத்தனை கதைகள்! எவ்வளவு அணுக்கமான சம்பவங்கள்!! நெகிழவைக்கும் உண்மை நிகழ்வுகளின் குரல்கள்!!!

ஆண்கள் மட்டுமே ஆடிய விளையாட்டுகள் எல்லோரின் கவனத்தைக் கவர்ந்தபோது, மகளிர் கலந்து கொண்ட போட்டிகள், அவர்களின் சாதனைகள், அந்தப் பெண்களின் போராட்டங்கள் என்று என்.பி.ஆர். ரேடியோவிற்கே உரிய தனித்தன்மையை நிலைநாட்டியது. மியா ஹாம், க்றிஸ்டீன் லில்லி, ப்ரியானா ஸ்கரி எனப் பல பெண் நட்சத்திரங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்திக் கொண்டது இவர்கள் வழியாகத்தான். 1999ல் உலகக் கோப்பை வீரர்களாக அவர்கள் உலகம் அறியப்படுவதற்குமுன் அலைவரிசையில் அவர்களை உலாவவிட்டு கண்முன்னேக் கொணர்ந்திருந்தார்கள்.

உச்சத்தில் இருக்கும்போது விடைப்பெற்றுவிட வேண்டும். ஒரு நிகழ்ச்சியோ பத்திரிகையோ நடிகரோ – தன் தொழிலில் சாதித்துக் கொண்டிருக்கும்போதே ஓய்வு பெற்று, வெற்றிடத்தை உணர்த்த வேண்டும்.

உணர்த்தி இருக்கிறது – “இது வெறும் விளையாட்டு மட்டுமே”.

Top 10 Indians of 2018 – Gnani Sankaran

என் கணக்கில் இந்த வருடத்தின் தலை பத்து இந்தியர்கள் யார் என்பதை பட்டியலிட எண்ணம். அந்தப் பட்டியலை ஞாநி சங்கரன் கொண்டு துவக்குகிறேன்.

அவரைப் போன்ற மிதமான குரலில் தீர்க்கமாக பிரச்சினையை அணுகி, சுயசிந்தனையுடன் இயங்குபவர் குறைவு. அதுவும் தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும், அரசியல் பிரச்சார கோஷங்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் வெளியில் தொடர்ச்சியாக தன் குரலை வாதங்களுடன் முன்னிறுத்தி செயலிலும் கூட்டு செயல்பாடுகளிலும் முன்னெடுப்பவர் அதனினும் குறைவு. சினிமா மயக்கம், பதவி ஆசை, பண லட்சியங்கள் என்று சமரசம் செய்து கொள்ளாமல், சொந்த வாழ்விலும் அறவிழுமியங்களை பின்பற்றுபவர் ஓரிருவர் மட்டுமே நான் அறிவேன்.

அவர் சென்ற வருடம் மறைந்தார்.

Gnani Sankaran - ஞாநி (ஞானி) - Jnani (Njaani Sangaran)

சில காரணங்கள்

  1. ஆம் ஆத்மி ஆகட்டும்; நோட்டா – 49 ஓ போடு ஆகட்டும் – ஏதாவது சிக்கலான விஷயம் என்றால் தலை பதுங்கும் கூட்டத்தினுள், தன் குரலை தீர்க்கமாக முன்வத்தவர்
  2. மூத்திர சட்டி தூக்க இன்னொருவரின் உதவி தேவைப்படும் வயதில் திறமையாக தலைமைப் பதவியை செயலாற்ற முடியுமா என்று கருணாநிதியின் முதல் மந்திரி பேராசையை போட்டுடைத்தவர் – ஓ பக்கங்கள்
  3. எளிமையானவர்; அழைக்கும் போதெல்லாம் நெருக்கமாக உரையாடியவர்; எசகு பிசகான கேள்வியானாலும் வெளிப்படையாக பதிலுரைத்தவர் – மனிதன் பதில்கள்
  4. கேணி
  5. சிந்தனையாளர்
  6. பரிக்ஷா
  7. நேர்மையான கொம்பன்
  8. “கண்டதைச் சொல்கிறேன்” என்றவர்
  9. ‘அறிந்தும் அறியாமலும்’
  10. தீம்தரிகிட
  11. ஜூனியர் போஸ்ட்
  12. ராமசாமியையும் விடவில்லை (அய்யா – EVR)

ஞாநி குறித்த என்னுடைய பதிவுகள்