Tag Archives: MR

தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

  1. படம் பிடித்திருந்ததா? – ஓம்; ஆம்! ஆமாங்க…
  2. ஏன்? – காக்கி சட்டை, மகாநதி, புன்னகை மன்னன் என பல முக்கிய கமல் படங்கள் அவ்வப்போது தெரிந்தாலும், இது புத்தம்புதிய ‘நாயகன்’
  3. முதல் பாதி எப்படி? – உச்சஸ்தாயி. அழுத்தம். பாசாங்கற்ற பளிச்.
  4. இரண்டாம் பாதி? – தக் லைஃப் இரண்டிற்காக பாக்கி வைக்காமல் எடுத்ததற்கு ஷொட்டு
  5. ஏமாற்றிய தருணங்கள் – நாசர் நடிப்பு/கதாபாத்திரம்; நாலு பேரால் நினைவில் வைக்க முடியாத வசனம்; அண்ணன் – தங்கை பாசமலர்
  6. உற்சாக தருணங்கள் – பாலைவனம், பனிவனம், டெல்லிவனம், அலைவனம் என கேமிரா; ரீங்கரிக்கும் பொருத்தமான இசை; நான் எப்பொழுதாவது சொல்வேன் என்று நினைத்திரவே இராத: ‘சிம்பு அவர்களின் நடிப்பு!’
  7. த்ரிஷா – 96 போன்ற குப்பை படங்களில் பொம்மையாக வந்தவர் சும்மா ராணியாக ஜொலிக்கிறார்.
  8. பாடல்கள் – பாதிப் பாடல் மட்டுமே வெள்ளித் திரையில். மீதி அடுத்த அராஜக வாழ்க்கையில்
  9. பிடிக்கவில்லை என்பவர்கள் – நன்றாயிருக்கிறது என்றால் கண்ணியவான் வேசம் போய்விடுமோ என்னும் பயம் கொண்டவர்கள்
  10. மொத்தத்தில் – கமல் ரசிகன் என்றால் கண்ணிலேயே நிற்கும். மணி ரத்னம் விரும்பி என்றால் மனதில் லயிக்கும். பூமர் என்றால் ரசிக்கும்.

தக் லைஃப் – குறியீடுகள்

1. டெல்லி ராஜ்ஜிய போட்டிகள்:
– இந்திரா காந்தி x சஞ்சய் காந்தி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – ராஜீவ் காந்தி
– சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ராகுல் காந்தி
– அசோக் செல்வன் – ஜெயப்ரகாஷ் நாராயண்
– நாசர் – லால் பகதூர் சாஸ்திரி
– ஜோஜு ஜார்ஜ் – மொரார்ஜி தேசாய்
– மகேஷ் மஞ்சரேகர் – ஜனாதிபதி நிக்சன்
– த்ரிஷா – மாருதி சுஸூகி
—-

2. ஈடிபஸ் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

3. ஏகலைவன் – சிம்பு
உயிர் போன்ற கட்டைவிரலைக் கேட்பார் துரோணர்.
வளர்ச்சியையும் திறமையையும் கண்டு அச்சம் கலந்த பொறாமை கொள்வார் அர்ச்சுனர் கமல்.
மாறாப்பற்றைப் போன்ற அடிமைத்தனத்தை எதிர்பார்ப்பார் கமல் என்னும் ஆசான்.
—-

4. ஒரே பெண்ணை ராமனும் விரும்புகிறார்.
பத்து தல அசுரனும் நாடுகிறார்.
அவர் –> த்ரிஷா.
ராவணன் என்னும் சிம்பு, சீதையை சிறையெடுக்கிறான்.

5. புராணத்து சீதையை நிஜ வாழ்வில் த்ரிஷா என்னும் நட்சத்திரத்தின் குறியீடு.
இது உங்களைக் குழப்பலாம்.
கமல்தனமாக யோசியுங்கள்.
விண்ணைத் தாண்டி வந்த மன்மதன் அம்பு எவ்வாறு இரு முரடர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது?
—-

6. சீஸர் என்கிறார் சுதிர் ஸ்ரீனிவாசன்

7. அபிமன்யு – கமல்
துரியோதனன் (சிம்பு)
துரோணாச்சாரியார் (நாசர்)
கர்ணன் (ஜோஜு ஜார்ஜ்)
கிருபர் (பகவதி பெருமாள் (அ) பக்ஸ்)
துச்சாதனன் (அர்ஜுன் சிதம்பரம்)
பீஷ்மர் (இளங்கோ குமாரவேல்)
—-

8. மகாபாரதம் என்றாலே வெண்முரசு.
ஜெயமோகன் போன்ற இலக்கிய பிதாமகர் பாத்திரத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர்!
அவரின் அண்ணன் போன்ற சுந்தர ராமசாமி ஆக நாஸர்.
அவரின் மகன் போன்ற வழித்தோன்றல்களை நாயக்கரே உருவாக்குகிறார்.
சதானந்த் போன்ற சாநி… மன்னிக்க… எதிரணிக்காரர்களுக்கும் விஷ்ணுபுரம் விருது கொடுத்து நேசக்கரம் கொடுக்கிறார்.
நாயக்கரைத் தவிர அவரின் அடிப்பொடியை நாடி, அமரன் பக்கம் வெகுஜனம் சாயும் போது விமர்சன மழையைப் பொழிகிறார்.
அப்படி என்றால், ‘இந்திராணி’ யார்? – சாகித்ய அகடெமியா? ஞானபீடமா??

9. ரொம்ப யோசிக்காதீங்க – இது நவீன ‘வீரபாண்டிய கட்டபொம்மன்

10. அதுவும் இல்லை – சிலப்பதிகாரம் + மணிமேகலை
– கோவலன் – த்ரிஷா
– கண்ணகி x மாதவி (கமல் x சிம்பு)
– ஐஷ்வர்யா லஷ்மி – கவுந்தி அடிகள்
– கருணாநிதி – மணிமேகலை
– அட்சய பாத்திரம் – தமிழ் நாடு
– நெடுஞ்செழியன் – பார்வையாளர் ஆகிய நீங்கள்
– கோப்பெருந்தேவி – வாசிக்கும் தாங்கள் தான்!

Ravanan Videos

Reviews

Making of Raavanan

Ravanan movie with Kamba Ramayanam

கம்பராமாயணம் என்பதற்கு பதிலாக கம்பராவணாயணம் என்பதே பொருத்தமோ என்பது போல், கம்பன், வில்லனைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். எனவே, மணி ரத்னத்திற்கும் ஆர் எஸ் மனோகருக்கும் இன்ஸ்பிரேசன் கம்பர் (அல்லது வான்மீகி?)

ராவணனின் வீரத்தைப் புகழும் கம்பர்:

காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கலந்த
பூளை போன்றதப் பொருசினத் தரிகள்தம் புணரி

மலர் மென்மையானது. [ஐஸ்வர்யா ராயை சொல்லவில்லை]. பூளைப்பூ காற்றால் சிதறியோடுவதை, வீரர் முன் வீரமிலாப் படை சிதறியோடுவதற்கு உவமையாக்குகிறார் கம்பர்.

இராமனை இகழும் இராவணன்:

தேறுதி; நாளையேயல் விருபது திண்டோள் வாடை
வீறிய பொழுது, பூளை வீயென வீவன்.

கரன் [கனகவேல் காக்க அல்ல] போன்ற தளபதிகள் இறந்தார்கள் என்னும் சூர்ப்பனகையின் சொல்லைக் கேட்டவுடன் கிளர்ந்தெழுந்த சினத்தன்மை:

ஆழித்தீயில் நெய் ஊற்ற ஆழித்தீ கனல்தலென இராவணன் சினந்தான்

மலையில் தோன்றிப் பாய்ந்த நீர், ஆறாக ஓடிக் கடலோடு கலந்தது. – ப்ருதிவிராஜில் தொடங்கும் காதல், விக்ரமில் சங்கமம் ஆகிறது.

தொடக்கத்தில் ஒரே இடத்தில் தோன்றிப் பல இடங்களில், பல்வேறு விதமான அளவுகளிலும் வடிவத்திலும் பாய்ந்து, வழிநெடுகிலும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் கடலில் கலந்து, வேறுபாடின்றிக் கலக்கும் உயிர்களின் தன்மைக்கு விளக்கமாக இரு தரப்பினரும் உரைப்பதை ஒத்து இருந்தது.

கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம்,
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே.

ராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்தில், இராமனையே முழுமையாகப் பார்க்காதவர்கள் என்னும் நையாண்டி:

தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்

சீதையைப் பற்றி கம்பர் எப்படி வர்ணிக்கிறார்?

  • மாதரார் வடிவு கொண்ட, நஞ்சு தோய் அமுதம்
  • சீதை என்று ஒரு கொடுங் கூற்றம்
  • சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்;

போர்க்களத்தில் சமையல் நடக்கும் பாடலில், யானைகளின் மேலிடும் தவிசும், அம்பும், தேரும், வில் முதலிய படைகளும் — கொடிய விறகுகளாய் அமைய, இறந்த வீரர்களுடைய சினமிக்க கண்களாகிய தீயில் பிணங்கள் வெந்து அவை பேய்கட்கு உணவாகின்றன:

சிந்துரங்களின் பருமமும், பகழியும், தேரும்,
குந்து வல் நெடுஞ் சிலை முதல் படைகளும், கொடியும்,
இந்தனங்களாய், இறந்தவர் விழிக் கனல் இலங்க,
வெந்த வெம் பிணம் விழுங்கின, கழுதுகள் விரும்பி

வீராவின் [படத்தில் விக்ரம்] மற்றொரு பாதி அவனின் தங்கை. அவளுக்கு நடந்த வன்முறை பிறரால் அன்று. இராவணனாலேயே நிகழ்ந்தது. தோன்றாதவை, அல்லது தோன்றியவை அவனைத் தவிர வேறொன்றும் இல்லை. அவன் கொலை செய்கிறான்; அல்லது வாழவைக்கிறான். பற்பலவற்றைப் படைத்த பிறகும் அவன் மட்டுமே எச்சம். ஊரார் எல்லாம் அவனின் தோற்றங்களே. பல்வேறு வகைப்பட்ட இவற்றின் அழிவிற்குப் பிறகும், அவனே இருப்பான்:

வில்லும் வேலும்வெங் குந்தமும் முதலின விறகாய்
எல்லு டைச்சுட ரெனப்புக ரெஃகெலா முருகத்,
தொல்லை நன்னிலை தொடந்துபே ருணர்வன்ன தொழிலச்
சில்லி யுண்டையிற் றிரண்டன படைக்கலச் சாலை

எம்.ஃபில்லோ, முனைவரோ ஆகுமளவு மணி ரத்தினமும் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே ‘இராவணன்’ அமைந்திருக்கிறார்.

நாயகனின் ‘அந்தி மழை மேகம்’ உங்களுக்குப் பிடிக்குமா? கிழவிகள் கொட்டமடிக்கும் ‘ருக்குமணி ருக்குமணி’ ரீங்காரமிடுகிறதா? ‘திருடா திருடா’வின் லாஜிக்கின்மை கவருகிறதா? உங்களுக்கு இந்தப் படம் பிடித்துப் போகும் வாய்ப்பிருக்கிறது.

ப்ரியாமணியுடையது, பருத்தி வீரனில் ஏற்கனவே செய்யப்பட்ட கதாபாத்திரம்! பிருத்விராஜைப் பார்த்தால் ‘டூயட்’ ரமேஷ் அர்விந்த் மாதிரி ஐஸ்வர்யாவோடு பொருந்தாமை!! வீரப்பன், நக்சல்பாரி, விடுதலைப் புலிகளின் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், ‘பேராண்மை‘ என்றெல்லாம் +2 படிக்கும் மாணக்கனாக பக்கம் பக்கமாக பதிபவரா நீங்கள்? உங்களுக்கு இந்தப் படம் நிறையவே பின்னூட்ட வருகை பிராப்திரஸ்து ஆசீர்வதிக்கும்.

அவ்தார் போன்ற கொடுமையை மெச்சும் ஹாலிவுட் அர்ச்சகரா? ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பச் பச்சென்று பறித்த சாலட் கொறிப்பாளரா? உயிர்மை போன்ற நவீன குமுதங்களில் இடம்பிடிக்க விழைபவரா? உங்களுக்கும் உள்ளேன் அய்யா போட்டுக் கொள்ளலாம்.

அங்காடித் தெரு’ போன்று கருப்பு வெள்ளையாக எல்லா கதாபாத்திரமும் உங்களுக்கு உலா வர வேண்டுமா? ‘மெகாதீரா‘ போன்று அல்டாப்பு நிறைந்த மாய்மால ரசிகரா? ‘Shutter Island‘ போன்று குப்பாச்சு, குழப்பாச்சு மூக்குச்சுற்றி மூச்சுத்திணறல்களின் விரும்பியா? ஐ எம் வெரி சாரி மேடம். வெயிட் ஃபார் ‘யாவரும் கேளிர்’.