Tag Archives: Deepavali

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

உசேனி நட்சத்திரம்

என்றுமே நட்சத்திர எழுத்தாளர்களுக்கான வாசகர் பட்டாளம் அதிசயிக்க வைப்பவை.

அரசு பதில்களுக்காக குமுதம் வாங்கியவர்கள்;
கல்கி கிடைத்தவுடன் பொன்னியின் செல்வனைத் தேடியவர்கள்;
மெர்க்குரிப் பூக்கள் வந்த பிறகே சாவி என்னும் பத்திரிகை இருப்பதை அறிந்தவர்கள்;
தங்கள் நாயகனின் போஸ்டருக்காக ஸ்போர்ட்ஸ்டார் பெற்றவர்கள்

லலிதாராம் அந்த வகையைச் சார்ந்தவர்.

சொல்வனம் தளத்தில் சுகா கட்டுரை இடம்பெற்றால் முதல் நாளே பத்தாயிரம் வாசகர்கள் வருவார்கள். அவரை வாசிப்பார்கள். பகிர்வார்கள். மீண்டும் இன்னொரு தடவை வாசிக்கவும் திளைக்கவும் அனுபவிக்கவும் வருவார்கள். அப்படியே அடுத்த நாள்.

இந்த மாதிரி இன்னொரு நம்பகமான ஆள் லலிதா ராம். சுகா சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தீபாவளி ரிலீஸாகப் போட்டி போடும் கமல்ஹாசனாக இவர்.

1978 தீபாவளிக்கு பதினொன்று தமிழ்ப்படங்கள் வெள்ளித்திரையில் வந்தது.
அவள் அப்படித்தான்
தப்புத் தாளங்கள்
சிகப்பு ரோஜாக்கள்
பைலட் பிரேம்நாத்
தாய் மீது சத்தியம்
மனிதரில் இத்தனை நிறங்களா
வண்டிக்காரன் மகன்
ஸ்ரீ காஞ்சி காமாட்சி
தங்கரங்கன்
கண்ணாமூச்சி
அதிர்ஷ்டக்காரன்

இருந்தாலும் ப்ளாக்கில் எல்லோரும் பார்க்க நினைத்தது ஒன்றிரண்டுதான் இருக்கும். அந்த மாதிரி கட்டுரை முதல் பின்னூட்டமாகக் கீழே கிடைக்கும்

உசேனி இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், “வேத” என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.