என்னோட பள்ளித் தோழனை 96 படம் மாதிரி இருபதாண்டு கழித்து பார்த்த போது நடந்த உரையாடல்.
“பொழுதுபோக்கிற்கு என்னடா பண்றே!?”
“எழுத்தாளரா இருக்கேண்டா…”
“அச்சச்சோ… உங்கிட்ட கவனமா இருக்கணுமே! எத எடுத்தாலும் ஆராஞ்சுண்டு, எதிலும் குத்தம் கண்டுபிடிச்சுண்டு, எல்லாவத்தையும் காமாலக் கண்ணோடு பாக்கிறவனா நீயு!”
“அப்படியெல்லாம் பொத்தாம் பொதுவில் சொல்ல முடியாதுடா! அலுவலில் கூட இப்படி பாக்கிறவங்கள QAனு சொல்லி மரியாதையா டெஸ்ட்டர், குவாலிடி அஷுயூரன்ஸ், பிசினஸ் அனலிஸ்ட்னு சொல்லிண்டு இருக்கோமே?”
“என்ன வேணா சொல்லிக்க மச்சீ… நீங்க எல்லாம் கிட்டத்தட்ட சைக்கோ! வாழ்க்கைய எப்படி அனுபவிக்கணும்னு தெரியாம திண்டாடற ஜென்மங்கதான் எழுத்தாளராத் திரியுது!”
”டேய்… ஏண்டா இந்த கொலவெறி?”
“நான் ஃபேஸ்புக்கில் ஆரம்பிச்சு அந்துமணி வர பாத்துட்டேண்டா! எல்லோரும் கோணப் பார்வை பாக்கிறேன்… என்னது கேவலமாப் போகும்னு யோசிக்கிறேனு பைத்தியமா ஆக்கி; சகாக்களை பயமுறுத்தி; பார்க்காத நீலிய பொண்டாட்டியா ஆக்கி; அமாவாசக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போட்டு தீவிரவாதம் துவங்கி டைவோர்ஸ் வரை… நம்ம சிக்கலுக்கு சிரிப்புத் திருடன் சிங்காரவேலுவாக சித்தரிக்க வேண்டியவங்க — சாஹித்ய அகாடெமி ஆசையில் சின்னாபின்ன அச்சுபிச்சு சித்தாளாக சீரியசாக்கி வைக்கிறாங்க!”
”அதுதாண்டா… அடையாள நெருக்கடி. உனக்கு என்ன பிரச்சினை என்று அறிந்து கொள்ள உதவ நல்ல கட்டுரைகளையும் கதைகளையும் என்னால் பரிந்துரைக்க முடியும்.”
“வேணாண்டா…”
“வெறுமனே சூப்பர் சிங்கர், பிக் பாஸ், ரீல்ஸ் பார்க்காம, சமூகச் சிக்கல்களையும் குடும்பப் பிரச்சினைகளையும் தனி மனித உரிமைகளையும் உணர, அறிய, புரிந்து கொள்ள… நாங்க வேணும்!”
“வேணாண்டா…”
“பொது புத்தி, திரள் மந்தை, கூட்ட மந்தி அறிவிலித்தனத்தில் இருந்து அறிவார்ந்த தளத்திற்கு மாற்றும் கடமை எனக்குண்டு தோழா! தமிழ்ச் சமூகமே ராம்ஜி யாஹூ ஆக மாறும் போது பத்ரித்தனமாக நாங்கள் தேவை”
பரட்டையை சப்பாணி பளாரென்று அடித்துவிட்டான்.
“அண்ணாத்த… சப்பாணிகளுக்கு மயிலு கிடைக்கிறார்கள். ஆனால், இருபதாண்டு கழித்து இங்கிலீஷ் விங்லிஷ் அஜீத் கிடைப்பார்களா என்னும் இருத்தலிய யதார்த்தவாத மாந்திரீக அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம் இது நண்பா”
அவன் அழ ஆரம்பித்து விட்டான்.
லிட்ஃபெஸ்ட்டுக்கு வர ஒப்புக் கொண்டு விட்டான்.












