Tag Archives: Contemporary

StoryJudge – ஸ்டோரி ஜட்ஜ்: தற்கால தமிழ் இலக்கியம்

சர்ச்சைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
சிறுகதைகளுக்கும் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

வாசிப்பவர்கள்? அரிது.
வாசித்ததை நயம்பட விமர்சிப்பவர்கள்? அரிதினும் அரிது!

சென்ற ஜனவரி மாதத்தில்:
வாசகசாலை – 18 கதைகள்
சொல்வனம் – 5
மயிர் – 8
வல்லினம் – 10
பதிவுகள் – 3
நடுகல் – 10

இவை தவிர கனலி இதழில் – “Fate of a Man” (Судьба человека; சுட்பா செலோவெகா) சோவியத் ரஷ்ய எழுத்தாளர் மிகைல் ஷோலோகோவ் எழுதிய சிறுகதை மொழியாக்கம் வந்திருக்கிறது.

காலச்சுவடு ஜனவரி 2026 – 313 இதழில்
1. மழை நிற்கப் போவதில்லை: பெருந்தேவி
2. குறளி : யுவன் சந்திரசேகர்
3. தொலைகின்ற இடம் : கோகுலக்கண்ணன்

– ஜனவரியில் வெளியாகாத இதழ்கள்: யாவரும், அழிசி
– சிறுகதைகள் வெளியிடாத இதழ்கள்: அகழ்
– வெளியாகி இருக்குமோ என்று தேடிய தளங்கள்: நடு வெப், அம்ருதா, உயிர்மை
– இன்னும் பார்க்க வேண்டிய இதழ்கள்: குவிகம், பண்புடன், நீலி, திண்ணை, அந்திமழை, கணையாழி, கீற்று
– அச்சில் மட்டுமே இருந்திருக்கக் கூடிய இதழ்கள்: தமிழ்வெளி, நீலம், உயிர் எழுத்து, கல்குதிரை

இது தவிர வேறு இருக்கலாம். இருக்கும்.
அவற்றைச் சொல்லுங்கள்

இவ்வளவும் எதற்கு?

ஸ்டோரிஜட்ஜ் என்றொரு முயற்சி.
வரும் கதைகளை எல்லாம் வாசிப்பது.
வாசித்ததில் பிடித்ததை விவாதிப்பது.
கூடவே, ஊறுகாயாக சமூக ஊடக விவகாரங்களைத் தொட்டுக் கொள்வது.

சில கேள்விகளுக்கு பதிலளிக்கப் பார்ப்பது:
அ) புகழ் பெற்ற அல்லது நிறைய கவனிக்கப் பெற்றவர்கள் யார்? அஜிதன், ஜெயமொகன், ஜி.எஸ்.எஸ். வி நவின், சுப்ரபாரதிமணியன்
ஆ) ஒரே எழுத்தாளரே பல பல இடங்களில் இடம் பெற்றிருக்கிறாரா? டீன் கபூர்
இ) குழந்தைகளுக்கான இலக்கியம் – சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்கின்றன?
ஈ) மொழியாக்கங்கள், மொழிபெயர்ப்புகள் – எந்த மொழி, எவர் தமிழாக்கம் செய்தார், யாரின் படைப்பு?
உ) பெண் எழுத்தாளர்கள் உண்டா? எத்தனை பேர்? – ஸ்ரீரஞ்சனி, கமலதேவி, லாவண்யா சுந்தர்ராஜன், றின்னோஸா, மனுஷி, அருணா சிற்றரசு, ஷைலஜா, தன்யா, லதா , மலர்விழி மணியம்

இதெல்லாம் உங்களாலும் செய்ய இயலும்.
வரும் வாரங்களில் நீங்களும் ஸ்டோரி ஜட்ஜ் விமர்சன அரங்கில் பங்கெடுக்க வாருங்கள்.
கை கொடுங்கள்.

நல்ல சுவாரசியமான அறிபுனை கதைக்கு ஒரு உதாரணம்

2013ல் புலிட்சர் பரிசு பெற்ற ஆடம் ஜான்சன் இந்த மாத Esquireல் கதை எழுதியிருக்கிறார். தற்கால காலச்சுவடு, சொல்வனம்.காம் போன்ற இதழ்களில் வரும் எந்தப் புனைவும் இதற்கு நிகரானவையே.

கதை ஏன் என்னை கவர்ந்திழுத்தது? சிறுகதையின் தலைப்பு ‘நிர்வானா’. அது எனக்கு ரொமபவேப் பிடித்த இசைக்குழு.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரக ஆரம்பம். திடீரென்று வாயில் நுழையாத வியாதி வந்த மனைவி. கை, கால் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அவளை மிகவும் அனுசரித்துப் பார்த்துக் கொள்ளும் கண்கண்ட கணவன் என்று பீம்சீங் காலத்து உருகல். ஆனால், அதை கவுதம் வாசுதேவ் மேனன் நடையில் சொல்லியிருக்கிறார். செயலிழந்த உறுப்பு கொண்ட அவர்களுக்கிடையேயான உடலுறவு சொல்லும்போது கூட நன்றாகவே உரு ஏற்றுகிறார்.

இலக்கியத்தில் அடிக்கடி கேட்கப்படும் வாசகம் ‘தட்டை’. இந்தக் கதையில் அதைக் காணோம். களன் சிலிக்கான் பள்ளத்தாக்கு. நாயகனும் கண்டுபிடிக்கிறான். அதுவும் எந்த சமயத்தில்? மனைவியை கண்ணும் கருத்துமாக விழித்திருந்து கவனித்துக் கொண்ட பதினைந்தே நாள்களில் ’ஹாலோகிராம்’ மனிதர்களை உருவாக்குகிறான். சாதாரண hologram அல்ல. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் உருவத்திற்கு உயிர் தருகிறான். இணையம் மூலமாக அவரின் விழியப்படங்களையும் ஒளிப்படங்களையும் நடை உடை பாவனைகளையும் இணைத்து உலவ விடுகிறான்.

இந்த மாதிரி ஹோலொகிராம் உருவாக்குவதால் என்ன பிரச்சினைகள் எப்படி எல்லாம் எழும் என்பதையும் அறிபுனைவாக அலசுகிறது சமூகப் புனைவு. எல்லோரும் பொய் உருவங்களைக் கோரி அவனிடம் வருகிறார்கள். அவனே அந்த மாதிரி ஒரு தோற்றத்தை சரி செய்யும் reputation management பணியாளன். இப்பொழுது இறந்து போன நிர்வாணா குழுவின் கர்ட் கோபேனுக்கு நிகர் உருவாக்குவது சரி… வாழ்ந்து கொண்டிருந்தாலும் அசைவற்ற மனைவிக்கு நிகர் உருவாக்குவது கூட சரி… ஆனால், ஃபேஸ்புக்கில் எக்குத்தப்பான படம் போட்டுவிட்டு அதை அகற்ற போலி நிகர் உருவாக்குவது எப்படி சரி?

இது எதிர்கால உருவகம். கூடவே, சமகால கூகிள் கண்ணாடியும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களும் வருகிறது. அவனே இயந்திரகதியில் இயங்குவதை இந்த இரண்டு வன்பொறிகளும் உணர்த்துகின்றன. எவரோ இயக்க, எங்கோ பறந்து, எவற்றையோ பார்க்க வைக்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் drone, மனைவிக்கு புது உலகத்தைக் காட்டுகிறது. கட்டிலிலும் நரம்புகள் எங்கும் ஊசித் துளைப்பாக முடங்கியவரை, தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருபது பக்க சிறுகதை எழுதுவது பெரிய விஷயமல்ல… நாலு அறிவியல் கண்டுபிடிப்புகளை புனைவில் தூவுவது பெரிய விஷயமேயல்ல… நேற்று தோன்றிய வியாதிகளை விவரிப்பது புதிய சரக்கேயல்ல… கவித்துவமாக உருவகங்களை உலவ விடுவது சங்கத்தமிழ் சங்கதி… ஆனால், எல்லாவற்றையும் சுவாரசியமாக, பக்கங்களை ஆர்வமுடன் புரட்டுமாறு ஒரே கதையில் புழங்க விடுவது மிகப் பெரிய விஷயம்.

தமிழில் நான் எழுதினால் மட்டுமே சாத்தியம்.