கல்லூரி காலத்தில் வந்த ‘ஹம் ஹே ரஹி பியார் கே’ இந்திப் படத்தில் தென்னிந்திய நடன கலைஞர் சந்திரன், நடன கலைஞராகவே நடித்திருப்பார். இவர் சுதா சந்திரனின் அப்பா.
கிட்டத்தட்ட ‘விஸ்வரூபம்’ கமல் போலவே நளினமான அபிநயங்கள் மிகுந்த கதாபாத்திரமாக சித்தரித்திருப்பார்கள். அவருக்கு ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கும். அவரின் கை முத்திரைகளும் முகபாவங்களும் பிடிக்காததால் வீட்டை விட்டு ஹீரோயின் ஓடுவதில் கதை துவங்கும்.
இருபதாண்டுகள் கழித்தும் பரதநாட்டியம் கற்ற ஆண்களை இப்படித்தான் தமிழ் சினிமா வரையறுக்கிறது. அழகான நாயகி, சாஸ்திரீய கலை கற்றவனின் நடை, உடை பாவனைகளை வெறுப்பாள் என்று சொல்கிறது.
படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.
எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.
இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.
கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.
டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.
தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.
‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது? அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்!’
‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும். இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’
இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.
1. இளையராஜா
கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.
2. கமலஹாசன்
நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.
3. எஸ் பி ஷைலஜா
அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?
ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.
இது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா?
When Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா?
கணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா?
அம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா?
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde