பத்திரிகைகளில் லே-அவுட் என்பது கண்கவர் வித்தை.
அவற்றை தலைசிறந்த ஓவியர்கள் கொண்டு வடிவமைப்பது பிரசித்தம். அன்றைய ஆனந்த விகடனுக்கு கோபுலு, மாலி. இதயம் பேசுகிறது வாராந்தரிக்கு மாயா. குமுதம் குழுமத்தில் இராமு, அர்ஸ், மாருதி, வர்ணம் என எல்லோரும் பங்களித்ததாக நினைவு.
வயதானவர்களுக்கு பழைய நினைப்பு எப்பொழுதும் பிளாட்டினம் காலம். தீபாவளி சிறப்பிதழோ புத்தாண்டு மலரோ கொண்டு வந்து, பெரிய புத்தகத்தை வெளியிட்டு, கடைகளுக்கு அனுப்பி வைத்து விட்டால் — நியு யார்க்கர் பதிப்புக் குழு மாதிரி சுருட்டும் விஸ்கியும் பருகாவிட்டாலும், அந்த அச்சாபீஸ் ஊதுபத்தி மணக்க, இதழ் வெளியாக உழைத்த ஒவ்வொருவரும், மகப்பேறை அடைந்த மகிழ்ச்சியோடு அந்த நூலைக் கொண்டாடினார்கள்.
இன்றைய இணையச் சூழலில் ஒரேயடியாக இத்தனை கனமான விஷயங்களைக் கொடுத்தால் எவரும் வாசிக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரையாக, தனித்தனி தினங்களில், இந்திய விடுமுறைகளைத் தவிர்த்து, போதிய அளவு முன்னோட்டங்களை சமூக ஊடகங்களில் துளிரவிட்டு, புதன் சாயங்காலமாக வலையில் போட்டால், வாசகர்கள் அள்ளும். அதன் புறகு அந்தப் பதிவிற்கு துணைப் பதிவு, கொசுறு கலவரம், அடுத்த நாள் மீம் என்று விளம்பரங்களையும் விழியங்களையும் உலவ விட வேண்டும்.
இது சமூக பரவல் சித்தாந்தம். இதற்கும் ஓவியர்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஓவியர்கள் கண்ணைப் பறிக்கும் செப்படி வித்தைக்காரர்கள்; சமூகப் பம்பல்கள் கண்ணில் பட்ட இடமெல்லாம் விதை தூவும் விளம்பரதாரர்கள்.
சித்திரக்காரர் உங்கள் சிந்தையை நீங்களே அறியாமல் கவர்வார்; சமூகப் பம்பல்காரர் அலறி முகத்தில் அடித்து ஆக்கிரமிப்பார்.
எழுத்துக்காரரின் ஆக்கத்தை தூரிகை கொண்டு தூண்டில் போடுபவர் அவர். மூச்சு முட்டுமளவு நாமம் அடித்து பட்டை போட்டு எழுத்தையும் சிந்தையையும் மறைப்பவர் மீம்காரர்.
செல்பேசி இருப்பவரெல்லாம் ஒளிப்படம் எடுத்து தள்ளுவது இக்காலம். இந்தக் காலத்தில் நல்ல புகைப்படக்காரரை கண்டுகொள்வது எவ்வளவு கடினமோ…
அதை விட கடினம்: நல்ல படக்காரரை கண்டுகொள்வது.
சாட் ஜிபிடி-யோ, பிங் அரட்டை பெட்டியோ, டால்-ஈ, மிட் ஜர்னி, கூகுள் பார்ட் என எந்தப் பக்கம் பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு ஓவியம் தீட்டுகிறது. கைவிரல்களை எண்ணாத வரைக்கும் அசல் படைப்பாளி மாதிரியே பாவ்லா காட்டுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழுக்கும் இந்தியத்திற்கும் புனைவிற்கும் பொருத்தமாக வரைய இருவர் கிட்டி இருக்கிறார்கள்.
அருண் – இரா முருகனின் மிளகு என்னும் பெருநாவலுக்கு சொல்வனம் தளத்தில் வரைந்து காட்சிகளை உருவாக்குகிறார்.
சங்கர நாராயணன். – கவிஞர் ஜகன்னாத பண்டித ராஜா மொழியாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறார்.
பொக்கிஷங்கள்! தொடர்ந்து மென்மேலும் உருவாக்கி நம் எண்ணத்தை செழுமையாக்க வாழ்த்துகள்












