Tag Archives: ஆக்கங்கள்

புனைவுப் புதைவும் அகவெழுச்சி ஆக்கங்களும்

சிறுகதைக் களஞ்சியம் ஆக சொல்வனம் மாறிக் கொண்டிருக்கிறதோ என்னும் பயம் உங்களுக்கு வந்திருக்கும்.

வருகிற எல்லா புனைவுகளையும், பொறுமையாகப் படித்து, ஒவ்வொன்றுக்கும் கருத்தும், எதற்காக மறுதலிக்கிறோம், எப்படி தேர்ந்தெடுப்பில் வைக்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் (பதினைந்து நாளுக்கு ஒரு முறைதான் என்றாலும்… தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தால் மட்டுமே வீட்டுப்பாடத்தின் பளு) குறையும், நிறையும் சொல்லும் அனைத்து பதிப்பாசிரியர்களுக்கும் நன்றி.

முக்கியமாக லண்டன் சிவா.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-318/

சரி… சுய புராணம் போதும்.

இந்த 318ஆம் இதழைப் பார்த்தால்
ஏழு கதைகள்
ஏழு மொழியாக்கங்கள்

மொழிபெயர்ப்புகள் எல்லாவற்றையும் கடகடவென்று ஓட்டியதில்:
1. நம்பி – சுய முன்னேற்ற கட்டுரையைத் தந்திருக்கிறார். அமெரிக்காவில் உழைத்துத் தள்ளுவோருக்கான ஊக்க விட்டமின்

2. மயக்கமா… கலக்கமா… என்பது போல் டொடரொண்டோ வெங்கட் ஆக்கம் – இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும். ஓவியம், மதம், புத்தம் என்று காக்டெயில் போட்டிருக்கிறார்.

3. ரேமண்ட் வில்லியம்ஸ் – நம்பிக்கைக்கான ஆதாரங்கள் : இப்பொழுது உங்களுக்கு இந்த இதழ் தினுசாக மன ஊக்கத்திற்க்காக, உள் உற்சாகத்திற்காக உருவானதோ என்னும் சந்தேகம் வர வேண்டும்.

4. நாம் அனைவரும் அர்ஸுலா லெ க்வினை அதிகம் படிக்க வேண்டும் – விபி வெங்கட் பிரசாத்தின் தமிழாக்கம். லெ குவின் எழுதிய ‘Sea Road’ போன்ற அதிகம கவனம் பெறாத ஆக்கங்களை அடுத்துக் கையில் எடுக்க வேண்டும். இது தெரிந்த விஷயங்களை அர்சுலா மூலமாகத் தொட்டுச் செல்கிறது.

5. எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் : நியு யார்க் நகரமும் நகரத்தின் எழுத்தாளர்களும் நியு யார்க்கை சுற்றி நடக்கும் எந்தக் கதையும் திரைப்படமும் எனக்கு ரசிக்கும். பால் ஆஸ்டர் இதெல்லாம் ஒருங்கேக் கொடுத்தவர். கூடவே ஃப்ரெஞ்சு வாசிப்பு + வளர்ப்பு வேறு உண்டு.

கூடவே…
யூதர்களைப் பற்றி, மார்கெரித் யூர்செனார் என்ன சொல்லியிருக்கிறார்?

இவ்வளவு சொல்லிவிட்டு அந்த ஏழு கதைகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாவிட்டால்…
நவீன உணவுமுறையில் பாரம்பரிய சோற்றை விரும்பும் தற்கால ஆண்களைச் சாடும் ’அறிவுப்புருசன் ‘ வாசித்தேன்.

சிறுகதை என்றால்
அ) முடிவுக்கு அருகில் துவங்க வேண்டும்
ஆ) சம்பவங்கள் நிறையவும் தாவல்கள் குறைவாகவும் இருக்க வேண்டும்
இ) போதனை வேண்டாம்; புரிதல் கொடுக்க வேண்டும்.

இது எதுவுமே அந்தக் கதையில் இல்லை. தமிழில் ஒரு பக்கம் காமம் + சுயம் குறித்து எழுதி அலுக்க வைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எண்பதுகளில் இருந்தே மீளாமல் புரளுகிறார்கள்.

நன்றாக எழுதுபவர்கள் எல்லாம் சினிமாவில் வாசம் செய்கிறார்களோ!?

ஆயக்கல் – Solvanam #300 Issue

சியாமந்தக மணியை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜய்ரொலைட் (Gyrolite, NaCa16(Si23Al)O60(OH)8·14H2O) தெரியுமா?

அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் பாறைகளுக்குள் தங்கமாக, மலையினுள் மறைந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் எத்தனை எத்தனை ஆளுமைகள்? இசை ஞானிகள்? எழுத்தாளர்கள்? பேராசிரியர்கள்? பேச்சாளர்கள்?

இவர்களின் சங்கீதத்திலும் புனைவிலும் படைப்பிலும் ஆய்விலும் சிந்தனையிலும் உரையாடலிலும் – அவற்றை மகோன்னதமான செயல்பாட்டில் செழுமையாக்கிய வித்தையையும் அறிந்து தெளிந்து கொள்ள அம்பையின் “துவாரம் மங்கத்தாயாரு” போன்ற சொல்வனம் கட்டுரை உதவுகிறது.

சொல்வனத்தின் இந்த முன்னூறாவது இதழிலும் நிறைய பேர் இவ்வாறான தெரிந்த, தெரியாத பெயர்களையும் சிறுகதையாசிரியர்களையும் நெடுங்கதைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கமலராகம், பதுமராகம் போன்ற அருங்கல்லான ஜய்ரொலைட் கல்லின் பெயர் – ‘குரொஸ்’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குரொஸ்’ என்றால் முழுமை; வட்டத்தின் பரப்பு – பலம்.

சொல்வனத்தின் பலமே இந்த மாதிரி இரத்தினங்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கைப் பாதையை உணர்த்தி, ஊன்றுகோல் வழிகாட்டிகளை பரிச்சயப்படுத்தி, தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை விவரித்து – அவர்களைப் போல் அரிய காரியங்களுக்கு உங்களையும் கிரியா ஊக்கியாக இலட்சியங்களை அடையாளங்காட்டுவது

நான் இப்போதுதான் மே மாதம் வெளியான கட்டுரையே வாசிக்கிறேன். நீங்களாவது 300வது இதழின் ஆக்கங்களை உடனடியாக வாசித்து விடுங்கள்.

இதழ்-300 – சொல்வனம் | இதழ் 300|13 ஆகஸ்ட் 2023 (solvanam.com)

புதிய இதழில் கவனப்படுத்திய எந்தப் படைப்பாளியை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்?
எவர்களைத் தவறவிட்டுவிட்டார்கள்?
எந்த கட்டுரைகள் விமர்சனங்களாக இல்லாமல் வெறும் அறிமுகமாக நின்று விட்டது?
அருமைகளையும் பாஷாணங்களையும் சொல்லவும்

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?