அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்

வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

http://www.moneylife.in/article/foreign-funding-and-the-maharajas-among-ngos/37943.html

– பேராசிரியர் ஆர் வைத்தியநாதன்

கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை:

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. உத்தியோகபூர்வமாக இங்கு 20 பங்கு சந்தைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் இரண்டு மட்டுமே இயங்குகின்றன. மும்பை பங்கு சந்தையில் [பி.எஸ்.ஈ] பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 9,000. இதில் குறைந்த பட்சம் 3,500 பங்குகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விற்கப்படுகின்றன. அதிகம் வாங்கி/விற்கப்படும் 50 பத்திரங்கள் மட்டும் கிட்டத்தட்ட மொத்த சந்தையின் மூன்றில் இரண்டு மடங்கை ஆக்கிரமித்திருக்கினறன. உண்மையில் 250 முதல் 300 “முக்கிய” பங்குகள் மட்டுமே  வர்த்தகத்தில் புழங்குகின்றன. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மூலம் வெளியிடப்பட்ட இந்திய பத்திர சந்தை புள்ளிவிபரங்களின் சமீபத்திய கையேட்டில் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை சொல்வதை நீக்கி விட்டது! குறையும் எண்களின் பிரச்சினையைத் தீர்க்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது.

இதே பாணியில், நாம் இந்தியாவில் இயங்கும் இலாபத்திற்காக இயங்காத அல்லது அரசு சாரா நிறுவனங்களை (என்.ஜி.ஓ) ஆய்வு செய்ய முடிவு செய்தோம். கல்வி போதனைத்துறையில் இருப்பதால், நாம் சராசரியாக ஆய்வுக்கு எடுக்காத விஷயங்களை விசாரணைக்கு எடுத்தோம்! இந்த மாதிரி சமயங்களில் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப வேண்டாம் என்பதுதான் தேசிய வழக்கு.

NGOக்கள் என்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். இவர்கள் VOs எனப்படும் தொண்டு நிறுவனங்களின் கோப்பு அல்லது தன்னார்வ நிறுவனங்கள் (VAs).  மிக சமீபத்தில் தன்னார்வ அபிவிருத்தி நிறுவனங்கள் (VDOs) என்றும் அழைக்கப்படுகிறார்கள். மற்றும் அரசு சாரா அபிவிருத்தி நிறுவனங்கள் (NGDOs) அல்லது இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (NPIs) என்றும் பிரிகிறார்கள். பல்வேறு இந்திய மொழிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு சமமான பெயர்கள் உள்ளன. இந்தி தொண்டு நிறுவனங்கள் சுயம்சேவி சன்ஸ்தாயேன் அல்லது ஸ்வயம்ஸேவி சங்காத்தன் என அழைக்கப்படுகின்றன.

1860 சங்கங்கள் பதிவு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, தன்னார்வ நடவடிக்கை, மத மற்றும் கலாச்சார பண்பாட்டை முக்கியமாக பின்பற்றியது. பின்னர், இலாப நோக்கற்று இயங்கும் துறை சார்ந்து பல்வேறு சட்டங்கள் அமலாகின. இதன் தொடக்க புள்ளியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது ஷரத்தில் குடிமை உரிமைகள் பல அங்கீகரிக்கப்பட்டது. அதில், “அமைப்புகள் அல்லது சங்கங்களின் அமைக்க ….” உரிமை தரப்பட்டது . இது இலாபம் ஈட்டா துறைக்கு பொருத்தமான சட்ட விதிகளை சட்ட அடிப்படையில் அமைக்கிறது. சட்டபூர்வமாக பதிவு செய்யாத ஒரு நிறுவனம் தன்னுடைய இலாப நோக்கற்ற, தன்னார்வ அல்லது நற்பணி தொடங்கும் நோக்கத்தை அனுமதிக்கவும் குழுவாக இயங்கவும் கட்டாயமற்ற விதிகளும் இதில் உள்ளன. இந்த விதிகள் என்.ஜி.ஓ.வின் விருப்ப இயல்புக்கு ஏற்ப இயங்க சுதந்திரம் தருகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையால், பதிவு செய்யாத தன்னார்வ அமைப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.

இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்ட (UNDP) மற்றும் ஐ.நா. தொண்டர்கள் (UNV) திட்டமும் UNDP யின் தில்லி அலுவலகத்தில் ஜனவரி 2006 ல் ஒரு கருத்துக்களம் ஏற்பாடு செய்தன. இலாபம் ஈட்டாத நிறுவனங்கள் (NPIs) குறித்த சிக்கல்களை விவாதிக்கவும் ஐ.நா. கையேடு செயல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் பற்றி பேசவும் சிஸ்டம் ஆஃப் நேஷனல் அக்கவுண்ட்ஸ் [System of National Accounts (SNA)] கீழ் கூடினார்கள்.

உலகம் முழுவதும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான (NPI) ஐ.நா. கையேட்டை செயல்படுத்தும் முயற்சியில் ஒரு அங்கமாக இந்தக் கூட்டம் அமைந்தது. இந்தக் கூட்டத்தில் திட்ட கமிஷன், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், UNV தலைமையகம், மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிவில் சமூகம் கல்வி மையத்தின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த அரங்கில், ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளரும், UNDP இந்தியா குடியுரிமை பிரதிநிதியும் தேசிய பொருளாதாரத்திற்கு NPIகளின் பங்களிப்புகளை அறியும் பொருட்டு ஐ.நா. கையேட்டை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னார்வ துறை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கிய பங்கை ஆற்றுகின்றன என்றும்; கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சியில் என்.பி.ஐ.க்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களத்தில் இந்தியாவில் இயங்கும் NPIக்களுக்கு ஐ.நா. கையேட்டை அமல்படுத்த வேண்டும்; மற்றும் நாட்டில் செயல்படும் NPI கணக்குகளை தொகுக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஆலோசனை கவுன்சில் மறைமுகமான வழிகாட்டுதலின் கீழ், மே 2007 ல் தன்னார்வத் துறைக்கான தேசிய கொள்கை உருவானது. சுயாதீனமாக இயங்கவும், சொந்தமாக வழிவகுத்து தீர்க்கமாக இயங்கும் தன்னார்வ துறையை ஊக்குவித்தது. மாறுபட்ட இந்திய சமூகத்தைப் போலவே, மாறுபட்ட மனிதர்களை அதிகாரத்திலும், வடிவத்திலும் பதவி செயல்பாடுகளிலும் கொண்டு, அதை செய்ய முடியும் என்று நம்பியது. இந்திய மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்  என உறுதி மொழி கோரியது. இது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் அடையாளத்திற்கு பங்கம் இல்லாமல், அரசாங்கம் மற்றும் தன்னார்வத் துறை இடையே ஒரு புதிய உறவு கண்டுபிடிக்க ஒரு செயல்முறை தொடக்கமாக அமைகிறது (GOI / திட்டக்குழு, 2007) . அதன்படி, இதை செயல்படுத்தினால் இலாபம்-சாரா துறையின் செயலில் ஈடுபடும் தன்மையினால், தொண்டுச்சூழல் பரவலாகப் பெருகி, சமூக விவகாரங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் , இந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ‘ன் இரண்டாவது ஆட்சிக்கால தொடக்கத்தில், தன்னார்வ அல்லது அரசு சாரா நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் நிதி நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்கவும் முழுமையான அதிகாரம் இருந்தன என்பதை அறியலாம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல சட்டங்களின் கீழ் பதிவு செய்யலாம் அல்லது எந்தவொன்றிலும் பதிவு செய்யாமல் இயங்கலாம் –  எதிலும் பதிவு செய்யாமல் இயங்குவதே அதிகமாக காணப்படுகிறது.

இலாப நோக்கற்ற நிறுவனங்களைப் பதிவதற்கு, பல்வேறு வகையான சட்டங்கள் இருக்கின்றன:

  • சங்கங்கள் பதிவு சட்டம், 1860;
  • இந்திய அறக்கட்டளைகள் சட்டம், 1882;
  • பொது அறக்கட்டளை சட்டம், 1950;
  • இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956

இலாப நோக்கற்ற மத நிறுவனங்கள் கீழ் பதிவு செய்யும்போது:

  • சமய அறநிலைய சட்டம், 1863;
  • தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920;
  • முஸல்மான் வக்ஃப் சட்டம், 1923;
  • வக்ஃப் சட்டம், 1954
  • பொது Wakfs (வரம்பு நீட்டிப்பு) சட்டம், 1959

“சங்கங்களின் சங்கங்கள் பதிவு சட்டம் / மும்பை பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு” அடியில் 2009 ஆம் ஆண்டு வரை மட்டும், மொத்தம் 33 லட்சம் சங்கங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 22.58 லட்சம் சங்கங்களைப் பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் மாநில இயக்கம் [DESs]  தகவல் சேகரிக்க முடிந்திருக்கிறது அவற்றுள் 21 லட்சம் சங்கம் தொடர்பான தகவல்களை கணினிமயமாக்க முடிந்திருக்கிறது.

மாநிலங்கள்தோறும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தேடி மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ) மக்களை அனுப்பிய போது, அது அவர்களில் இலட்சக்கணக்கானோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் சரிபார்க்க முயன்ற 22 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்,வெறும் 6.95 லட்சம் பேரை மட்டுமே காண முடிந்தது.

இந்த புள்ளிவிவர கணக்குகளில், தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920, கீழ் பதிவு செய்த இலாப நோக்கற்ற நிறுவனங்களை சேர்க்கவேயில்லை. அதையும் கூட்டிக்கொண்டால், இன்னும் சில பல ஆயிரங்களை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இந்திய கம்பெனி சட்டம் 1956 இருக்கிறது. அதன் மேல் அறக்கட்டளைகள் அமைக்க உதவும் மற்ற சட்டங்களின் கீழ் இலாபமடையா  நிறுவனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

மேலும் இந்தத் தொகைகளில் கிராமங்களில் இயங்கும்  பல குழுக்கள் மற்றும் சங்கங்களையும், வழக்கமாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது பிரச்சாரங்களுக்கு பெரிய நிறுவனங்களில் ஒரு அங்கமாக அவ்வப்போது தோன்றுவதையும் சேர்க்கவில்லை.  இவை அந்தந்த நேரங்களில், தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் இயக்க, வெகுஜன சார்ந்த குழுக்கள் என குறிப்பிடப்படுகிறது. PRIA மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகமும் செய்த ஆய்வின்படி இந்தியாவின் மொத்த தன்னார்வ நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50% எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த பதிவு குழுக்கள் வகைப்படுத்தும் போது பழமையான சங்கங்கள் பதிவு சட்டம் குருடாகிறது. அனைத்து பதிவு சமூகங்களையும் அதே வழியில் நடத்துகிறது. இந்த அட்டவணையில் அதி இலாபகரமான பள்ளிகளும், கொள்ளையாக சம்பாதிக்கும்கல்லூரிகளும், மிகுகொழிப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் நாட்டின் விளையாட்டு சங்கங்களும் அடங்கும். இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா என்ஜிஓ என்பதை நினைவில் கொள்ளவும். இந்திய தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) ஒரு அரசு சாரா என்.ஜி.ஓ.

சி.எஸ்.ஓ. சர்வேயில் இருக்கும் முக்கிய கண்டுபிடிப்புகள்:

சி.எஸ்.ஓ. கருத்துக்கணிப்பு மூன்றே மூன்று பிரிவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன:

  • ஆய்வு சங்கங்கள் பதிவு சட்டம் 1860
  • பம்பாய் பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950
  • இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 – 25 பிரிவு

– இவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஆய்வில் இடம்பிடித்தன.

முதல் கட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் 31.7 லட்சம் NPIகள் இந்தியாவில் பதிவாகின. இதில் 58.7% கிராமப்புறங்களில் உள்ளன. பெரும்பாலான NPIகள் சமுதாய, சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள், கலாச்சார சேவைகள், கல்வி, சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட NPIகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலகட்டமான அந்த நேரத்தில், உலக வல்லரசுகளும் இந்தியாவில் ஆர்வம் காட்ட தொடங்குகிறன.

  • 1970 ம் ஆண்டு வரை 1.44 லட்சம் சங்கங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன.
  • அதன் பிறகு 1971 ல் இருந்து 1980 வரையான காலத்தில் 1.79 லட்சம் சங்கங்கள் பதிவு செய்துகொண்டன.
  • 1981 இல் இருந்து 1990 வரை காலத்தில் 5.52 லட்சம் பதிவானார்கள்.
  • 1991 இல் இருந்து 2000 வரையிலான காலத்தில் 11.22 லட்சம் பதிவு பெற்றார்கள்.
  • 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு மட்டும் 11.35 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செயல்படாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய எந்த ஷரத்தும் இல்லை. எனவே முதல் கட்ட கணிப்பில் சங்கங்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கின்ற பதிவேடுகள் அடிப்படையில் ஆய்வு அமைகிறது.

18 லட்சம் சங்கங்களை இரண்டாம் கட்ட ஆய்வில் விஜயம் செய்தோம். இந்தத் தொகை பதிவு செய்தவர்களில் 57.6% சதவிகித சங்கங்கள் ஆகும். இவற்றில், 4.65 லட்சம் சங்கங்களுக்கு தகவல் கிடைக்கும். அவர்கள் பின்வரும் தலை மூன்று துறைகளில் ஈடுபட்டனர்:

  • சமூக சேவைகள் (35%)
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி (21%)
  • கலாச்சாரம் & உல்லாசம் (15%).

முதல் மூன்று நடவடிக்கைகளில் மட்டும் 71% பதிவு செய்த சங்கங்கள் பங்களிக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் மொத்த ஜனசக்தியில் தொண்டர்களும் இருக்கிறார்கள்;  சம்பளத்திற்கு அமர்த்தும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். மொத்தம் 144 லட்சம் பேர் உழைக்கிறார்கள். இவர்களில் 11 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது.  சி.எஸ்.ஓ. கணக்குப்படி அவர்களின் செயல்பாட்டு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் தொகையைக் கொண்டு பொருளாதார உற்பத்தியை மதிப்பிட்டால் ரூ. 41, 292 கோடி அளவிற்கு வரும்!

லாபம் ஈட்டா நிறுவனங்களை இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956 கீழும் பதியலாம். நிறுவன விவகார அமைச்சகத்தினால் பட்டியலிடப்பட்ட 2,595 நிறுவனங்கள் தொடர்பான நிதி தரவுகள் பெறப்பட்டு, அவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டது. எனினும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் எத்தனை  தொழிலாளர் ஈடுபட்டனர் என்ற தகவலையும் அந்த அமைப்புகளின் நோக்கங்களுக்காக எவ்வளவு ஊதியம் கிடைத்தது போன்றவற்றையும் அறிய முடிவதில்லை.

சங்கங்கள் பதிவு சட்டம் 1860 , மும்பை டிரஸ்ட் சட்டம் மற்றும் இந்திய நிறுவனங்கள் சட்டம் (பிரிவு 25), 1956 கீழ் இயங்கும் சங்கங்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்த  சி.எஸ்.ஓ.  முடிவு செய்தது. பெரும்பாலான NPIகள் சங்கங்கள் பதிவு சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்படுவதுதான் இதற்கு காரணம். பல்வேறு மத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என்னும் குடையின் அடியில் இருக்கும் என்.ஜீ.ஓ.க்களை இந்த ஆய்வில் சேர்க்கவில்லை. அவர்கள் தொகை பூதாகரமானது.

நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை பெரும்பாலான மாநிலங்கள், ஒழுங்காக அமலாக்குவதில்லை என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. சங்கங்களே பதிவாளர் அலுவலகத்தில் நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தாலும் கூட, அந்த தகவல்களை பராமரிக்க எந்த நடைமுறையும் கிடையாது.

அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்:

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒரு வகையினர் உள்துறை அமைச்சகத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டு பங்களிப்பு விதிமுறைகள் விவகார சட்டம் [FCRA] கீழ் இந்த தனியார் அறக்கட்டளைகள் வரும்.  அதே போல் வெளிநாட்டு அரசு நிறுவனங்களின் நிதி கிடைக்கும் என்.ஜி.ஓ.க்களை யூரோ அல்லது டாலர் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கிறார்கள்.
2011-2012 ஆம் சிறப்பம்சங்கள்:

1. FCRAவின் கீழ் 31 மார்ச் 2012 வரை மொத்தம் 43,527 சங்கங்கள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011-12 ம் நிதியாண்டில், இரண்டாயிரத்திற்கும் மேலான கூட்டமைப்புகள் பதிவு பெற்றன. 304 நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளை பெற முன் அனுமதி வழங்கப்பட்டது.

2.  22,702 அமைப்புகளில் இருந்து  ரூ. 11,546.29 கோடிகளுக்கு வெளிநாட்டு பங்களிப்பு என  மொத்தம் ரசீது பதிவாயின. [இவற்றில் கணக்கில் வராமலும் குறைவாகக் கணக்கு காட்டும் நோக்கும் பொதுவானது]

கடந்த பத்தாண்டு போக்கு:

வருடம்

பதிவு செய்த அமைப்புகள்

அறிவிக்கும் அமைப்புகள்

வெளிநாட்டு வருமானம்

[ரூ.  ₹ கோடிகளில்]

2002-2003

26404

16590

5,046.51

2003-2004

28351

17145

5,105.46

2004-2005

30321

18540

6,256.68

2005-2006

32144

18,570

7,877.57

2006-2007

33937

18,996

11,007.43

2007-2008

34803

18796

9,663.46

2008-2009

36414

20088

10,802.67

2009-2010

38,436

21,508

10,337.59

2010-2011

40,575

22,735

10,334.12

2011-2012

43,527

22,702

11,546.29

மொத்தமாக

2002 -2012

97,383.53

 

ஆதாரம்: உள்துறை அமைச்சகம் –வெளிநாட்டினர் துறை, FCRA பிரிவு

3. அயல்நாட்டு நிதியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • தில்லிக்கு வந்தன – ரூ. 2,285.75 கோடி
  • தமிழ்நாடு (ரூ. 1, 704,76 கோடி)
  • ஆந்திர பிரதேசம் (ரூ. 1, 258,52 கோடி)

4. மாவட்டங்களுக்கு மத்தியில் மிக அதிகமான நன்கொடைகள்

  • சென்னை – ரூ. 889.99 கோடி
  • மும்பை (ரூ. 825.40 கோடி)
  • பெங்களூர் (ரூ. 812.48 கோடி)

5. கொடை நாடுகளின் பட்டியலில்

  • அமெரிக்கா (ரூ. 3, 838.23 கோடி)
  • இங்கிலாந்து (ரூ. 1, 219,02 கோடி)
  • ஜெர்மனி (ரூ. 1, 096,01 கோடி).

6. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பட்டியலில்

  • Compassion International, அமெரிக்கா (ரூ. 183.83 கோடி),
  • Church of Jesus Christ of Latter day Saints, பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை (எல்.டி. சர்ச்), அமெரிக்கா (ரூ. 130.77 கோடி)
  • Kinder Not Hilfe (KNH), ஜெர்மனி (ரூ. 51.76 கோடி).

7. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ.) மத்தியில் அதிக அளவு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றவர்கள்

  • இந்திய உலக பார்வை, சென்னை, தமிழ்நாடு, (ரூ. 233.38 கோடி)
  • நம்பிக்கை சர்ச் இந்தியா பத்தனம்திட்டா, கேரளா (ரூ. 190.05 கோடி)
  • கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை, அனந்தப்பூர், ஆந்திரா (ரூ. 144.39 கோடி)

8. வெளிநாட்டு பங்களிப்பு பெற்ற துறைகளில்

  • ஊரக வளர்ச்சி (ரூ. 945.77 கோடி)
  • குழந்தைகள் நலன் (ரூ. 929.22 கோடி)
  • கட்டுமானம் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் பராமரிப்பு (ரூ. 824.11 கோடி)
  • ஆராய்ச்சி (ரூ. 539.14 கோடி)
  • மேலே குறிப்பிட்டுள்ளதை விட மற்ற செயல்பாடுகள் – ரூ. 2, 253,61 கோடி

நடைமுறை செலவுகளுக்குத்தான் [கட்டிடம் / கார்கள் / ஜீப்புகள் / கணினி / கேமராக்கள் முதலியன] தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிகவும் செலவு செய்கின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய தகவல்.

காலத்தின் தேவை:

வெளிநாட்டு நிதி பெறும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலனாய்வு பணியகம் (IB) அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பின்னணியில், இந்தத் துறையை  முழுமையான அலசலுக்குள்ளாக்க அறிஞர் சபை தேவை. இந்த நிபுணர்கள் குழுவில் IBயைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க போன்ற பிற நாடுகளின் அனுபவங்களை பயன்படுத்தலாம். என்.ஜி.ஒ.க்களுக்கான ஆட்சி கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். இந்திய நிறுவனங்களுக்காக 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய சமூக பொறுப்புணர்வு பங்களிப்புகளின் பின்னணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மீள்பார்வை நோக்கலாம். வெள்ளையனின் சுமையாக இல்லாமல் இருப்போம்!

 

(ஆசிரியர் ஐஐஎம் பி  நிதி பேராசிரியர் – கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்து)

(ஆர் வைத்தியநாதன், நிதி மற்றும் ஆளுகை பேராசிரியர், மூன்று தசாப்தங்களாக ஐ.ஐ. எம் பெங்களூர் பல்கலையில் கற்றுத்தருகிறார். தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான ஆசிரியர்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறார். இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கமாக சிறிய தொழில் முனைவோர்களும் குடும்பங்களும் அடங்கியிருப்பதைக் கொண்டு,  பேராசிரியர் வைத்தியநாதன் இந்தியா Uninc என்னும் கூற்றை உருவாக்கினார். பேராசிரியர் வைத்தியநாதன் செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனை பலகைகளில் அமர்ந்திருக்கிறார்.)

Uncharted: Big Data as a Lens on Human Culture by Erez Aiden, Jean-Baptiste Michel

kim-kardashian-donut-Glazed_Break_The_Internet

ரஜினிகாந்த் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும்! என் பாட்டனார் தலைமுறையில் ஆரம்பித்து என்னுடைய பேத்தி தலைமுறை வரை எல்லோருக்குமே அறிமுகமான பெயர் – ரஜினி. ஆனால், திருவள்ளுவர் என்று சொன்னால், என் மகளுக்கே தட்டித் தடுமாறி, “இந்த வசனமாகப் பேசித் தள்ளும் சீரியல் படம் எல்லாம் எடுப்பாரே? ரெண்டு பொண்டாட்டி ‘ஒகே’ என்பாரே! அவரின் படத்தில் வருபவர்தானே?” என்பாள். திருவள்ளுவரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்? சூப்பர் ஸ்டாரைக் குறித்து எத்தனை புத்தகம் இருக்கும்?

எவர் காலத்தினால் அழியாமல் இருக்கிறார்? எப்படி ஆராயப்படுகிறார்? எவ்வாறு அந்தந்தக் காலத்தில் முக்கியமானவர் அறியப்படுகிறார்? எங்ஙனம் இவற்றை தெரிந்துகொள்வது?

இதுதான் இந்தப் புத்தகத்தின் மூலக்கரு. 1800களில் ஆரம்பித்து இதுகாறும் 130 மில்லியன் புத்தகங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. தூரத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் இருக்கிறது. கிட்ட இருப்பதை நுண்மையாக நோக்குவதற்கு மைக்ரோஸ்கோப் இருக்கிறது. அதே போல் இந்த பதின்மூன்று கோடி நூல்களை எப்படி ஆராயலாம்? அவற்றில் சொல்லி இருக்கும் கலாச்சாரக் குறியீடுகளையும், அரசியல் நிலைப்பாடுகளையும், சரித்திர தகவல்களையும், பொருளாதார ஆராய்ச்சிகளையும் எப்படி வரலாற்றுப் பார்வையோடு கணினி துணையோடு அணுகுவது?

கூகுள் ஸ்காலர் நுழைகிறார். உலகின் மிகப் பெரிய நூலகமான ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸி’ல் முப்பத்தி ஆறு மில்லியன் புத்தகம் இருக்கிறது. ஹார்வார்டு பல்கலை வாசகசாலையில் பதினேழு மில்லியன் புத்தகங்கள். இவற்றில் கிட்டத்தட்ட முப்பது மில்லியன் நூல்களை கூகிள், கணினி மூலம் கிடைக்க வகை செய்கிறது. இவற்றைக் கொண்டு, அதில் இருக்கும் வார்த்தைகளை அளக்க என் – கிராம் வசதியை கூகுள் தருகிறது.

அடக்குமுறையாக சமூகத்தில் சத்தமாகப் பேசுவோரின் குரல் மட்டுமே ஒலிக்குமா? நாஜி ஜெர்மனியில் மார்க் ஷகால் ஓவியங்களையும் பால் க்ளீ வரைபடங்களையும் பேசவிடாமால் வைத்திருந்தார்கள். கருத்துகளை மொத்தமாக ஜடமாக்கமுடிகிறது. ஒரே ஒரு சித்தாந்தத்தை மட்டுமே முழங்குபவர்களை கல்லூரிகளிலும் ஆட்சி பீடங்களிலும் வைத்திருந்தால் என்ன ஆகும் – என்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால், ஹிட்லர் வீழ்ந்த பின் இவர்களின் புகழ் பன்மடங்கு உயர்வதையும் பார்க்க முடிகிறது.

ரஷியாவின் ஸ்டாலின் ராஜாங்கம் இன்னும் மோசம். ஸ்டாலின் வீழ்ந்தபின்னும், அவரால் கொன்று குவிக்கப்பட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் சிந்தனாவதிகளின் சித்தாந்தங்களும் வெளிவரவே இல்லை. 1980களில் கம்யூனிசம் மொத்தமாக நொறுங்கிய பிறகே, அந்த மனிதர்களின் வாழ்க்கையையும் செயல்பாட்டையும் அறிய முடிகிறது.

அப்படியானால்… புத்தகங்களில் பிழையே இருக்காதா? ஒட்டுமொத்தமாக அலசினால் கூட ஆட்டுமந்தை சிந்தை வெளிப்படுவதை தடுக்க இயலாதா?

புகழ்பெற்ற ஜப்பானிய பழமொழியை எடுத்துக் கொள்வோம்: “ஓராயிரம் வார்த்தைகளால் சொல்வதை ஒரேயொரு படம் உணர்த்திவிடும்!” – இது ஜப்பானில் உதித்ததே அல்ல! அமெரிக்காவின் செய்தி ஆசிரியர் ஆர்த்தர் ப்ரிஸ்பேன் 1911ல் சொன்னது. இந்த மாதிரி மூல ஆராய்ச்சிகளை செய்யவும் எந்த வார்த்தை எப்பொழுது புழக்கத்திற்கு வந்தது என்பதை ஆராயவும் கூகுள் என்-கிராம் தேடுபொறி உதவுகிறது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்னும் சிந்தனையை விசாலமாக்க இந்தப் புத்தகம் உதவுகிறது.

சரி… இவ்வளவு சொல்லியாகி விட்டது. கடந்த இரு நூற்றாண்டுகளின் அதிநாயகர்கள் எவர்?

  1. அடால்ஃப் ஹிட்லர்
  2. காரல் மார்க்ஸ்
  3. சிக்மன்ட் ப்ராய்ட்
  4. ரொனாலடு ரேகன்
  5. ஜோசஃப் ஸ்டாலின்
  6. விளாடிமிர் லெனின்
  7. ட்வைட் ஐஸனோவர்
  8. சார்லஸ் டிக்கன்ஸ்
  9. பெனிடோ முஸோலினி
  10. ரிச்சர்டு வாக்னர்

Fame is a bee.
It has a song—
It has a sting—
Ah, too, it has a wing.
– by Emily Dickinson

Uncharted_Big_data_As_lens_On_Human_Culture

Dataclysm: Who We Are (When We Think No One’s Looking) by Christian Rudder

Dataclysm Who We Are When We Think No Ones Looking Hardcover

புத்தகத்தை கிடுகிடுவென படித்துவிட முடிகிறது. ஏற்கனவே அரைத்த மசாலாவைப் போட்டு தமிழ் சினிமா எடுப்பது போல் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து, புதிய தரிசனங்களை, காலந்தோறும் சேமித்து வைக்கும் இரகசியங்களை எல்லாம் சொல்வதில்லை. மாலை நேரத்தில் சமீபத்தில் எம்.பி.ஏ முடித்த நண்பர் ஒருவருடன் நேர்ப்பேச்சு உரையாடல் போல் இலகுவான, ஆழ்ந்து பத்தி பத்தியாக வாசிக்க வேண்டாத நடை.

இந்தியாவின் பிக் பஜார் போல் அமெரிக்காவில் டார்கெட். தான் கருவுற்று இருக்கிறோமா என்பதை சோதிக்கும் சாதனத்தை பெற்றொருக்குத் தெரியாமல் பதின்ம வயது மகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகிறாள். இரண்டே நாளில் அவருக்கு “தாய்மை”, “குழந்தை வளர்ப்பு” போன்ற பத்திரிகைகளுக்கு இலவச சந்தா கொடுக்கும் விளம்பரங்கள் முதல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன உட்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரி மருந்துகள் வரை, வந்து கொண்டேயிருக்கின்றன. பெற்றொருக்கும் பெண்ணின் இரகசிய கர்ப்பம் அம்பலமாகிறது.

அது போல் கூகுள் தேடலின் மூலம் ஜுரம் பரவுவதைக் கண்டுபிடிப்பது போன்ற பரவலாகப் பேசப்பட்ட தகவல்களையும் ஆராய்ச்சிகளையும்தான் புத்தகம் பேசுகிறது.

இளை தளபதி விஜய் பாஷையில் சொல்ல வேண்டுமானால், ‘இதயத்தை நம்பி முடிவெடுக்காமல், தகவலையும் அதன் மேற்சென்ற ஆய்வையும் வைத்து முடிவெடுப்பது என் விருப்பம்.’ இப்படிச் செய்தால் “நன்றாக அமையும்” என்று குருட்டாம் போக்கில் கடவுளை நம்பி காலை விடக் கூடாது. விரிவான தரவுகளை சேமிப்பது; அந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை கூடிய மட்டும் அலசுவது; அந்தத் தரவுகளைக் கொண்டு தெளிவு அடைவது; தெளிந்த போக்குகளைக் கண்டு கொண்டு அறுவிதி அடைவது – இதுவே முறைமை.

1854ஆம் வருடம். லண்டனில் எங்கு பார்த்தாலும் காலரா நோய். இப்பொழுது எபோலா பரவி ஒபாமாவையும் அவருடைய டெமொகிராட் கட்சியையும் வீழ்த்த பயன்பட்டது மாதிரி, ஏதேனும் அரசியல் சதி இருக்குமோ என எல்லோரும் ஆராய்கிறார்கள். ஜான் மட்டும் வேறு மாதிரி ஆராய்கிறார். “நோய் எங்கே அதிகமாக காணப்படுகிறது?” கேம்ப்ரிட்ஜ் தெரு முக்கில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு நோய் வந்திருக்க வேண்டும் என அவருக்கு தரவுகள் தெரிவிக்கிறது.

ஆனால், அதே தெரு முக்கில் சிறைச்சாலை இருக்கிறது. அங்கிருக்கும் கைதிகளுக்கு காலெரா வரவில்லை. சாராயக்கடை உபாசகர்களுக்கும் காலரா வரவே இல்லை. ஏன்? மேலும் உள்ளே சென்று தீவிரமாக ஆராய்கிறார். சாராயக்கடையே கதியென இருப்பவர்கள், வேறு நீரை உட்கொள்ளவே இல்லை. அதே போல் ஜெயிலுக்கென்று பிரத்தியேகமாக கிணறு இருக்கிறது. அதனால்தான் அந்த இரு குழுக்களும் பாதுகாப்பாக காலரா நோயை தடுத்துவிட்டார்கள். அதே தெரு மக்களின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலும், நோய் தீண்டவே இல்லை.

இது போல் சுவாரசியமான விஷயங்களும் தற்கால ஆராய்ச்சிகளும் காதலில் விழுவதற்கான அட்டவணைகளும் இனக்கவர்ச்சிக்கான சூட்சுமங்களும் இதில் கிடைக்கிறது. உங்கள் மேலாளர் gut-feeling கொண்டு முடிவெடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.

அனுராகமாலை எடுத்தேற்றம்

மேலாளர் கனவில் வருவது அவ்வளவு சிலாக்கியமில்லை. எனினும் வந்திருந்தார்.

“போன ப்ராஜெக்ட் நன்றாக செய்திருக்கிறாய்!”

“இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கலக்கிறீர்கள். இலவசகொத்தனார் பார்த்தால் பிலுபிலுவென்று ஆடி மாச சாமியாடுவார் சார்!”

”உனக்கு அடுத்த வேலை தயார். நம் தலைநகரமாம் வாஷிங்டன் டிசி செல்கிறாய். அங்கே படு ரகசியமான அடுத்தகட்ட ஆளில்லா விமானத்திற்கு நீதான் பொறுப்பு.”

காட்சி அப்படியே கட் ஆகிறது. நாலு பேர் தீவிரமான கலந்தாலோசனையில் இருக்கிறோம். ஒருத்தரைப் பார்த்தால் திருவள்ளுவர் போல் குருலட்சணம். இன்னும் இருவர் சிவகார்த்திகேயனின் நாயகிக்கான தேர்ந்தெடுப்பிற்காக வந்தவர்கள் போல் துள்ளலாக விளம்பர அழகி போல் காணப்படுகிறார்கள். கிட்டத்தட்ட வடிவமைப்பை முடித்து விட்டோம். பரிசோதனைக்குத் தயார்நிலையில் இருக்கிறோம்.

பணிகளைத்தான் எவ்வளவு சீக்கிரமாக கனவு முடித்துக் காட்டுகிறது. இதைத்தான் ’கனவு காணச்சொனார்!’ கலாம்.

செய்தவற்றை சொல்லிக்காட்ட மேலிடத்திடம் செல்கிறோம். அவர்களோ, சோதனை மாந்தர்களாக எங்களையேத் தேர்ந்தெடுத்து தானியங்கி விமானிகளை ஏவுகிறார்கள். சைதாப்பேட்டை கொசுவிடமிருந்தும் மந்தைவெளி மாடுகளிடமிருந்தும் ஓடி ஒளிந்தவனுக்கு drone எம்மாத்திரம். விமானியில்லா விமானத்திற்கு மாற்றாக ஏவுகணைகளை அனுப்புகிறேன். பயனில்லை. திடீரென்று எட்வர்டு ஸ்னோடென் கூட பறந்து பறந்து தாக்குகிறார். பின்னர் அவரும் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டார்.

“நியாயமாப் பார்த்தா என்னை பார்த்துதான் இந்த டிரோன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கணும்!” என்று சாரு நிவேதிதா சொல்கிறார். “நீங்க லத்தீன் அமெரிக்க கதைதானே மொழிபெயர்க்கறீங்க! இனிமேல் இரானிய கட்டுரைகளை கொண்டாங்கனு” சொல்லிட்டு அவரிடமிருந்து தப்பிக்கிறேன்.

“நீங்க இப்போ கண்விழிக்கலாம்! உங்க சாதனம் ஒழுங்கா வேலை செய்யுது. எல்லாவிதமான இடர்களிடமிருந்தும் அதற்கு தப்பிக்கத் தெரிஞ்சிருக்கு! ஆனா”.

”தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை… ’ஆனா’”.

“சரி… அபப்டினா, But போட்டுக்கறேன். உங்களுக்கு உடற்பயிற்சி போதாது. உங்க விமானம் ஓடற மாதிரி நீங்க ஓட மாட்டேங்கறீங்க. உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கிடையாது.”

இதைத்தான் Rice Ceiling என்கிறார்களா!?

நேற்றைய கதைக்கு செம வரவேற்பு.

சொல்புதிது குழுமத்தினர் Show, don’t tell என்றார்கள். இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த யுவகிருஷ்ணா “அப்படியானால், உங்க கூட வேலை செஞ்ச அந்த இளம்பெண்களின் கவர்ச்சிப் படங்களை ப்ளோ-அப் ஆக போட்டிருக்கணும்.” என்றார்.

“மழையில் நனையலாம். அணைக்கட்டில் தண்ணீர் தேக்கி வைப்பதை போல் காட்ட முடியாத சொல்லில் வடிக்க முடியாத அனுபவம். அது போல் கனவு தேவதை ஸ்டரக்சரா ஆப்ஜெக்டா என்பதை C# தான் சொல்லணும்.”

நக்கீரர் எட்டிப் பார்த்தார். “உமக்கு நேர்ந்த அனுபவத்தை மட்டுமே நீங்கள் எழுத முடியும். அது மட்டுமே அகத்திறப்பை தரும். உங்களுக்கு டிரோன் உண்டா? அது துரத்தியதா? எப்படி பிழைத்தீர்கள்? என்பது இல்லாத பதிவு பொருட்குற்றம் கொண்டது!”

“ஏன்யா… உம்மை கொசு கடிச்சதே இல்லியா? எண்பது கோடி ஆண்டுகள் முன்பே கல் தோன்றி முன் தோன்றா தமிழகத்தில் டிரோன் கொண்டு சோழனும் பாண்டியனும் சண்டையிட்டது சரித்திரம்!”

இப்பொழுது ஹரிகிருஷ்ணன் முறை. “என்ன ஹரியண்ணான்னு சொன்னால் போதும். ’இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன் உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்’ என்கிறான் கம்பன். இதன் தாத்பர்யமாவது என்னவென்றால், பட்டாம்பூச்சி விளைவைக் கண்டு பயப்பட்டு தோட்டத்தையே உருவாக்காமல் விடக்கூடாது. மைரோசாஃப்ட் முதல் அப்பிள் வரை பிழை இல்லாத மென்பொருளை உருவாக்குவதில்லை. உலங்கைக் கண்டு அஞ்சேல்!”

“இதுதான் இன்றைய தமிழ் உலகமா?” என்றபடி இராம.கி அய்யா புகுகிறார். “Malinga என்பதில் இருந்து வந்ததுதான் உலங்கு. மளிங்கா தலைமுடியில் கொசு மாட்டிக் கொண்டுவிடும். உள்ளங்கையில் அடிப்பதால் உலங்கு என்றும் ஆனதாக சொல்வோர் உண்டு. அது பிழையான கருத்து. எல்லோரும் கொசு வந்தால் ’மளிங்க’ என விளித்தனர். இது மளிங்க > அடிங்க் > உலங்கு என்றானது.”

தமிழ் என்றவுடன் ஃபெட்னா நச்சுநிரல் விழித்து தானியங்கியாக பதிலிடத் துவங்கியது. ”அமெரிக்காவில் தமிழ் உலகம் என்றால் ஃபெட்னா. நாங்கள் கோத்திரம் பார்த்து செவ்வாய் தோஷம் நீக்கி ஒரே சாதியில் ஜாதகக பரிவர்த்தனத்தை வருடா வருடம் ஜூலை நான்கு நடத்துகிறோம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ‘நாம் தமிழர்’. நியு யார்க்கில் கொசுத் தொல்லை அதிகம். பிரகாஷ் எம் சுவாமி என்னும் கொசு எங்களைக் கடித்ததுண்டு.”

ஆட்டத்தை தவறவிடாத மனுஷ்யபுத்திரன், “அமெரிக்கரின் காதல் என்பது சிற்றோடை போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது காவிரி போல… கர்னாடகா திறந்தால் மட்டுமே வளரும். தமிழச்சியின் காதல் என்பது பாக்கெட் தண்ணீர் போல் காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.”

சொம்படி சித்தர் விடுவாரா… “அமெரிக்கரின் காதல் என்பது RAM போன்றது. சமயத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, பருவத்திற்கேற்ப, முக்கியத்துவத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். தமிழனின் காதல் என்பது hard disk போல. சூடாகும்… தமிழச்சியின் காதல் என்பது cloud storage போல் எவருக்கு வேண்டுமானாலும் திறக்கும்.”

நொந்து போன வேல்முருகன் சொன்னார். “இதற்கு பெயரிலி சமஸ்தானமே பெட்டர் அப்பா!”

யாருக்கு வாக்களிப்பது? பத்திரிகைகளின் பரிந்துரை

இந்தியன் எக்ஸ்பிரெஸ், தினமணி, ஹிந்து போன்ற பத்திரிகைகள், தலையங்கங்கள் வெளியிடும். தேர்தல் நாளன்று வாக்கு சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து அவசியம் வாக்களிக்க சொல்லும். ஆனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லமாட்டார்கள்.

இங்கே ‘இவருக்கு வாக்களியுங்கள்’ என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள். உள்ளூர் கவுன்சில் தேர்தலில் துவங்கி, அமெரிக்க ஜனாதிபதி வரை எல்லோருக்குமே பரிந்துரை வழங்குகிறார்கள். நாளிதழ்கள் ஆதரவு தருபவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஆனால், மதில் மேல் பூனைகளை ஒரு பக்கமாக சாய்க்க, இந்த பத்திரிகை பரிந்துரை உதவுகிறது.

பெரிய அதிபர் தேர்தல்களில் இன்ன பத்திரிகை இன்ன கட்சி ஆளை தேர்ந்தெடுக்கும் என்பதை கணித்து விட முடிகிறது. ஆனால், உள்கட்சி தேர்தல்களிலும், எம்.எல்.சி. போட்டிகளிலும் யாரை சொல்வார்கள் என்பதை வாசகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறார்கள்.

இதிலும் மேலிடத்து ஊடுருவல் இருக்கிறது. பதிப்பாளருக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. ஆசிரியருக்கு இன்னொருவரைப் பிடிக்கிறது. நிருபர்கள் மூன்றாமவரை விரும்புகிறார்கள். எடிட்டரை விடுமுறையில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, சந்தடி வெளியே தெரியாமல், சந்தில் தன்னுடைய விருப்பமான வேட்பாளரை ஆதரித்து தலையங்கம் வெளியிடுகிறார்கள் பத்திரிகை முதலாளிகள்.

நியு யார்க் மேயருக்கு டைம்ஸ் யாரை தேர்ந்தெடுக்கும் என்பது குறித்த கட்டுரை.

முகவிழி சபைகள்: சேட்படுத்துதல்

Meetup_Eventbrite_Mixer_Pizza_Beer_Software_Demo_Pitch_Forums_Events_Talks_Chat_Discussions
சாயங்காலம் ஆனால், கால்கள் தானாக அந்தப் பக்கம் சென்றுவிடுகிறது. மனைவி இல் நானும் இருப்பது ஒரு காரணம். இலவசமாக பீட்சா பரிமாறுகிறார்கள் என்பது இன்னொரு காரணம்.

என்ன இலவசம்? காரை நிறுத்த முப்பது சொச்சம் டாலர் செலவு. அந்தி மயங்கும் வேளையில் வீடு திரும்பும் எண்ணற்ற ஜனத்திரளில் ஊர்ந்து ஊர்ந்து செல்ல பெட்ரோல் செலவு. நியு யார்க்கை விட மோசமாக ஓட்டும் பாஸ்டன் நகர கட்டுமானத்திற்கு இடையே நுழைந்து வளைத்து இடிபடாமல் செல்லும் இதய நோய் உண்டாக்கம் கூட செலவு.

புற்றுநோய் வந்தவர்களுக்கான ஆதரவுக் குழு; மதுவின் பிடிக்குள் சிக்கினவருக்கான வாராந்திர சந்திப்புகள்; பொதுமேடையில் பேசுவதற்கான அச்சம் நீக்கும் டோஸ்ட்மாஸ்டர் கூட்டங்கள்… போல், இதுவும் ஒத்த பயனீட்டாளர்களின் ஊற்றுக்களம். ஒரு சிந்தனையாளரை அழைத்து, அவரைப் பேசவிட்டு, அவரின் வாயும் பவர்பாயின்ட்டும் பார்க்கும் களம்.

செவ்வாய் என்றால் ஜாவா; புதன் அன்று நோ சீக்வல்; வியாழன்தோறும் பத்தாண்டுகளுக்கு மேலாக புத்தம்புதியதாக மிளிரும் அதிவிரைவு மென்பொருள் உருவாக்கம் (agile software development). வாரத்தின் முதல் நாள் என்பதால் திங்கள் கிடையாது; இளவயதினர் ஜோடிப் பொருத்தத்திற்காக கிளப் விட்டு கிளப் மேய்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை.

வாரயிறுதிகளில் இன்னும் பெரிய ஜமா கூடும். முழுவதுமாக ஆழ்ந்து பயிற்சிப் பெறும் செய்முறை விளக்கக் காட்சிகள் உண்டு; சொந்தக் கணினி எடுத்துக் கொண்டு போனால், புதிய நிரலிகளை உருவாக்குவதில் சரிசமமாக அனைவரும் பங்குப் பெற்று, முழுவதாக தயார் ஆன புத்தம்புதிய பயன்பாட்டை உலகிற்கே உடனடியாக உலவ விட சனியும் ஞாயிறும் போதுமானது.

ஆனால்… உங்களுக்குத்தான் பரிசிலோ பங்கோ சன்மானமோ கிடைக்காது. சொவ்வறை எழுதினோம்; அது நாளைய கூகிளிலோ, வருங்கால யாஹூவிலோ ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்னும் மனத்திருப்தி மட்டுமே வாய்க்கப் பெறும்.

ஃபைட் கிளப் போல் இப்படி மன்றம் மன்றமாக சென்று வருவதும் மாலையானால் ‘என்ன கச்சேரி’ என்று தி ஹிந்துவில் எங்கேஜ்மென்ட் பார்ப்பதும் ஒன்றா என்பதை ஆராய தீஸிஸ் பரிந்துரை இட்டிருக்கிறேன்.

A Novelist Who Made Crime an Art, and His Bad Guys ‘Fun’

புகழ்பெற்ற குற்றப்புனைவு எழுத்தாளரான எல்மோர் லெனார்ட் மறைந்தார். திரைப்படங்களான இவருடைய கதைகள் Get Shorty, Be Cool, Out of Sight, Jackie Brown போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.

எழுத்தாளர்களுக்கான அவரின் பத்து கட்டளைகள்:
1. தட்ப வெப்ப நிலையை எழுதி கதையைத் துவங்காதே
2. முன்னுரையைத் தவிர்
3. ’சொன்னார்’ என்பதைத் தவிர மற்ற வினைச்சொற்களை உபயோகிக்காதே

கதையில் யார் கையை வேண்டுமானாலும் பிடித்திழுக்கலாம்; புனைவில் எவரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம்… ஆனால், கட்டுரையில் கவனமாக இருக்கவேண்டும் போன்ற உபதேசங்களை அவர் சொன்னாரா என்பதை அறிய பாக்கியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

Collectors – Daniel Alarcón – New Yorker

நியு யார்க்கரில் டேனியல் அலர்க்கான் (Daniel Alarcón) எழுதிய Collectors வாசித்தேன்.

தற்கால தலைமுறையில் டேனியல் முக்கியமான எழுத்தாளர். கிரந்தா போன்ற ஆங்கில சிறுபத்திரிகைகளால் கண்டெடுக்கப்பட்டு, ஹார்ப்பர்ஸ் போன்ற நடுவாந்தர சஞ்சிகைகளுக்கு முன்னேறி, இப்பொழுது வெகுஜன இதழ்களுக்கு வந்தடைந்திருக்கிறார். தெற்கு அமெரிக்க நாடான பெரு-வில் பிறந்திருந்தாலும், பெரும்பாலும் அமெரிக்காவில் வளர்ந்தவர். லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் இரத்தமும் சதையும் கொண்டு அமெரிக்கர்களுக்கு உவந்த மாதிரி கதை புனைகிறார்.

கொட்டடிக்காரர்கள் (Collectors) கதை இருவரைப் பற்றியது. இருவரும் சிறைக்கு எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியது. சிறைக்கைதிகளானவர்களின் வாழ்க்கையை பற்றியது. சிறைக்கு வரக் காரணமானவர்களைப் பற்றியது. கூண்டுக்குளே போவதற்கு முன் இருந்த குடும்ப சூழலைப் பற்றியது.

ரொஜீலியோ (Rogelio) பிறப்பிலே ஏழை. மாற்றுத் திறனாளி. அதனால், பள்ளியில் ஏச்சுக்குள்ளாகுபவன். அண்ணன் வழியில் சில்லறைக் கடத்தலில் ஈடுபடுகிறான். லஞ்சம் தராமல் மாட்டிக் கொள்கிறான். வெளி உலகில் ஜீவனம் நடத்தத் தெரியாதவன், ஜெயிலில் பிழைக்கக் கற்றுக் கொள்கிறான்.

காவற்கூடத்தில் அவனுடைய நண்பனாக ஹென்றி அறிமுகமாகிறான். புரட்சிக்காரன். இடதுசாரி. ’அசட்டு ஜனாதிபதி’ நாடகம் போடுகிறான். தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளே வைக்கப்படுகிறான். அவனை வெளியே எடுப்பதில் அக்காகாரி உட்பட ஊடகங்களும் பங்கு வகிக்கின்றன.

சிறைவாசிகளை மனிதர்களாக உலவவிடுகிறார் டேனியல். அச்சமுறும் செய்கை புரிந்தவர்களின் குணாதிசயங்களையும் நடவடிக்கைகளையும் விவரிக்கிறார். கதாநாயகர்களுக்கிடையே நட்பினால் விளைந்த காமத்தையும் சொல்கிறார். இலட்சியவாதியின் சமரசங்களையும் சாமானியனின் இலட்சியங்களையும் போகிற போக்கில் உணர்த்துவது பிடித்திருந்தது. கிராமத்துக்காரனின் எல்லைகளில்லா பயணமும் கொள்கைவாதியின் குறுகல்களும் பிரச்சாரமாக நெடி அடிக்காதது பிடித்திருந்தது. இருபதிற்கு மேற்பட்ட பக்கங்களை இலயிக்க வைத்தது பிடித்திருந்தது.

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

That Girl In Yellow Boots: திரைப்பட விமர்சனம்

That Girl In Yellow Boots_Kalki_Anurag_Kashyap_Movies_Films_Cinema
’கற்றது தமிழ் எம்.ஏ.’ இயக்குநர் ராமின் ’தங்க மீன்கள்’ இன்று வரவில்லை. எனவே, அதற்கு மாற்றாக That Girl In Yellow Boots படத்தைப் பார்த்தேன். இதுவும் தந்தைக்கும் மகளுக்குமான கதை.

ஸ்மிதா பட்டீலையும் ஷபனா ஆஸ்மியையும் எண்பதுகளில் கொண்டாடினால், கொன்கொனா சென்னையும் நந்திதா தாஸையும் இப்பொழுது இவர்கள் நடித்த படங்களை, ”இன்னார் இருக்கிறார்கள்… ஏமாற்ற மாட்டார்கள்” என்னும் நம்பிக்கையுடன் பார்க்க முடிகிறது. இருவரையும் அலேக்காக சாப்பிடுகிற மாதிரி வந்திருக்கிறார் கல்கி கோச்லின். அவரே கதை, வசனம் என்று சகல துறைகளிலும் நுழைந்திருக்கிறார்.

இயக்கத்தை மட்டும் Black Friday & தேவ் டி புகழ் புருஷன் அனுராக் கஷ்யபிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சப்பை மேட்டரை எடுத்துக் கொண்டு எப்படி படம் பண்ணுவது என்பதை அறிய வைக்கிறார். கல்கியின் ரூத் தசை பிடித்து விடுபவர். உடலுக்கு மட்டும் ஒத்தடம் கொடுக்காமல் சகலமும் கை வேலையாக செய்கிறார். ”உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி” பாடல் சொல்கிறது. ரூத் முகபாவத்திலேயே அருவறுப்பும் அசிரத்தையும் பதற்றமும் ஏக்கமும் திரைக்கதையை நகர்த்துகிறது.

முடிவை முன்பே யூகிக்க முடிகிறது. ஆனால், அதனூடாக சுவாரசியமான கதாபாத்திரங்களின் போக்கை ஊகிக்க முடியவில்லை. போதைக்கு அடிமையான காதலன் எப்படி எதில் இருந்து மீள்கிறான்? கண்டபடி மிரட்டி பணம் கறக்கும் கன்னட மாஃபியா தாதா-விடம் இருந்து எப்படி தப்பிப்பது?

மும்பையும் முக்கிய நடிகராக ஈடு கொடுத்திருக்கிறது. பணக்காரர்களின் வெர்ஸொவா, கப்பல் உடைக்கும் சேரி துறைமுகம், ஆட்டோவும் டாக்ஸியும் ஓடும் சந்துக்கள், ஆற அமர ஊழியம் செய்யும் அரசாங்கத்தின் முகம் எல்லாம் துணை நடிகர்கள். அன்னிய நகரத்தில் முகம் தெரியாத அப்பாவை தேடும் மகளின் துப்பறிதல் நடுவே ஓஷோ வருகிறார். மகளிரின் நிலை பேசப்படுகிறது. பதின்ம வயதின் குழப்பங்கள் உணர்த்தப்படுகின்றன.

நேர்க்கோட்டில் பிரசங்கம் கலந்த பிரச்சாரம் மட்டும் காணவில்லை.