புத்தகத்தை கிடுகிடுவென படித்துவிட முடிகிறது. ஏற்கனவே அரைத்த மசாலாவைப் போட்டு தமிழ் சினிமா எடுப்பது போல் சுவையாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் வாசித்து, புதிய தரிசனங்களை, காலந்தோறும் சேமித்து வைக்கும் இரகசியங்களை எல்லாம் சொல்வதில்லை. மாலை நேரத்தில் சமீபத்தில் எம்.பி.ஏ முடித்த நண்பர் ஒருவருடன் நேர்ப்பேச்சு உரையாடல் போல் இலகுவான, ஆழ்ந்து பத்தி பத்தியாக வாசிக்க வேண்டாத நடை.
இந்தியாவின் பிக் பஜார் போல் அமெரிக்காவில் டார்கெட். தான் கருவுற்று இருக்கிறோமா என்பதை சோதிக்கும் சாதனத்தை பெற்றொருக்குத் தெரியாமல் பதின்ம வயது மகள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகிறாள். இரண்டே நாளில் அவருக்கு “தாய்மை”, “குழந்தை வளர்ப்பு” போன்ற பத்திரிகைகளுக்கு இலவச சந்தா கொடுக்கும் விளம்பரங்கள் முதல் ஆரோக்கியமான குழந்தை பிறக்க என்ன உட்கொள்ள வேண்டும் என்பதற்கான மாதிரி மருந்துகள் வரை, வந்து கொண்டேயிருக்கின்றன. பெற்றொருக்கும் பெண்ணின் இரகசிய கர்ப்பம் அம்பலமாகிறது.
அது போல் கூகுள் தேடலின் மூலம் ஜுரம் பரவுவதைக் கண்டுபிடிப்பது போன்ற பரவலாகப் பேசப்பட்ட தகவல்களையும் ஆராய்ச்சிகளையும்தான் புத்தகம் பேசுகிறது.
இளை தளபதி விஜய் பாஷையில் சொல்ல வேண்டுமானால், ‘இதயத்தை நம்பி முடிவெடுக்காமல், தகவலையும் அதன் மேற்சென்ற ஆய்வையும் வைத்து முடிவெடுப்பது என் விருப்பம்.’ இப்படிச் செய்தால் “நன்றாக அமையும்” என்று குருட்டாம் போக்கில் கடவுளை நம்பி காலை விடக் கூடாது. விரிவான தரவுகளை சேமிப்பது; அந்தத் தரவுகளின் நம்பகத்தன்மையை கூடிய மட்டும் அலசுவது; அந்தத் தரவுகளைக் கொண்டு தெளிவு அடைவது; தெளிந்த போக்குகளைக் கண்டு கொண்டு அறுவிதி அடைவது – இதுவே முறைமை.
1854ஆம் வருடம். லண்டனில் எங்கு பார்த்தாலும் காலரா நோய். இப்பொழுது எபோலா பரவி ஒபாமாவையும் அவருடைய டெமொகிராட் கட்சியையும் வீழ்த்த பயன்பட்டது மாதிரி, ஏதேனும் அரசியல் சதி இருக்குமோ என எல்லோரும் ஆராய்கிறார்கள். ஜான் மட்டும் வேறு மாதிரி ஆராய்கிறார். “நோய் எங்கே அதிகமாக காணப்படுகிறது?” கேம்ப்ரிட்ஜ் தெரு முக்கில் இருந்துதான் பெரும்பாலானோருக்கு நோய் வந்திருக்க வேண்டும் என அவருக்கு தரவுகள் தெரிவிக்கிறது.
ஆனால், அதே தெரு முக்கில் சிறைச்சாலை இருக்கிறது. அங்கிருக்கும் கைதிகளுக்கு காலெரா வரவில்லை. சாராயக்கடை உபாசகர்களுக்கும் காலரா வரவே இல்லை. ஏன்? மேலும் உள்ளே சென்று தீவிரமாக ஆராய்கிறார். சாராயக்கடையே கதியென இருப்பவர்கள், வேறு நீரை உட்கொள்ளவே இல்லை. அதே போல் ஜெயிலுக்கென்று பிரத்தியேகமாக கிணறு இருக்கிறது. அதனால்தான் அந்த இரு குழுக்களும் பாதுகாப்பாக காலரா நோயை தடுத்துவிட்டார்கள். அதே தெரு மக்களின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலும், நோய் தீண்டவே இல்லை.
இது போல் சுவாரசியமான விஷயங்களும் தற்கால ஆராய்ச்சிகளும் காதலில் விழுவதற்கான அட்டவணைகளும் இனக்கவர்ச்சிக்கான சூட்சுமங்களும் இதில் கிடைக்கிறது. உங்கள் மேலாளர் gut-feeling கொண்டு முடிவெடுப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்கலாம்.