Category Archives: Uncategorized

வைகுண்ட ஏகாதசி

சக்தி விகடன்: வைணவர்கள் முக்கியமாகக் கருதுவது நான்கு ஏகாதசிகள். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசியிலிருந்து ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி வரை திருமால் யோகநித்திரை செய்வதாகக் கூறப்படுகிறது.

ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு சயன ஏகாதசி என்று பெயர். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி அன்று பெருமாள் வலப்புறமாகத் திரும்பிப் படுப்பார். அந்த நாளுக்கு பரிவர்த்தனை ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத வளர்பிறை ஏதாதசியன்று அவர் துயில் கலைந்து எழுந்திருக்கும் நாள். அந்த நாளை உத்தான ஏகாதசி அல்லது பிரபோதனி ஏகாதசி என்பர். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார்.

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று _ ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

மேடை – ஜெயபாஸ்கரன்

Jayabaskaran Kavithaigal:

இதுவரை

இருபது முறைகளுக்கு மேல்

எதிரிகளை

”எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்”

என்றாய்.

சலனமற்றுக் கிடந்த

உன் ஆதரவாளர்களின்

முன்னிலையில்

”நான் சொல்லிக் கொள்வது

என்னவென்றால்”

என்பதைத் தாண்டி

எதுவுமே விளங்கவில்லை

நீ சொல்லிக் கொண்டது

எதுவும்.

”இன்னொன்றையும்

குறிப்பிட்டாக வேண்டும்” என்று

பலமுறை அறிவித்தாய்!

ஆயினும்,

ஒருமுறைகூட

குறிப்பிடவில்லை

அந்த ‘இன்னொன்றை!”

”இறுதியாக ஒன்றைச் சொல்லி”

விடைபெறுவதாக முழங்கினாய்

அந்த ஒன்றையாவது

சொல்லிவிட்டுப் போயிருக்கலாமல்லவா நீ?

நன்றி: ஆறாம்திணை

குருதிப்புனல் (நாவல்)

முன்னுரை – இந்திரா பார்த்தசாரதி

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள் மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப் படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் கநா சுப்ரமணியன்.

குருதிப்புனல் – ரூ. 85/- : கலைஞன் பதிப்பகம்

கீழ்வெண்மணி – மணா

44 உயிர்களும் அரைப்படி நெல்லும்

36 வருஷங்களாகியும் உயிர் பொசுங்கிய நெடியடிக்கிறது இந்தக் கிராமத்து மண்ணில்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில் கீழ்வெண்மணிக்குள் நுழைகிற இடத்தில் வெண்மணிச் சம்பவத்தை நினைவூட்டுகிற சிவப்பு வளைவு. உள்ளே போனால் காலனி தெரு. அதில் ரத்தசாட்சி போல சிவப்புமயமான கட்டிடம்.

1967ல் 44 உயிர்கள் விறகுகள் மாதிரி எரிக்கப்பட்ட இடம் இதுதான். ஜாலியன் வாலா பாக்கில் உள்ள நினைவுச் சின்னம் மாதிரியே வடிவமைத்திருக்கிறார்கள் இதையும். ஜோதிபாசு அடிக்கல் நாட்டி 1970ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டத்தைத் திறந்து வைத்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான பி. ராமமூர்த்தி. நினைவுத்தூண்களில் வரிசையாகப் பதிந்திருக்கின்றன சாகடிக்கப்பட்ட அந்த 44 பேர்களின் பெயர்கள்.

தஞ்சை மண்ணில் ‘பண்ணையாள் முறை’ ஆழமாக வேரூன்றியிருந்த காலம். விவசாய வேலைகளில் சற்று சுணக்கம் காட்டினாலும் உடம்பில் சவுக்கடி விழுந்து வலியுடன் ரத்தம் கசியும். அதோடு மாட்டுச் சாணியைப் பால் மாதிரி கரைத்து அந்தத் தொழிலாளர்களைக் குடிக்கச் சொல்வார்கள். கசங்கிய முகத்துடன் வேறுவழியில்லாமல் குடிப்பார்கள் விவசாயத் தொழிலாளிகள். எதிர்த்துச் சிறுவார்த்தை கூடப் பேச முடியாது.

அவர்களிடமும் வந்தது விழிப்பு. “நியாயமான கூலியைக் கேள். குருடனாக இருக்காதே… கண்ணைத் திற ஊமையாக இருக்காதே – பேசு…” என்று நரம்புகளை அதிரவைக்கிறபடி பிரச்சாரம் பண்ணினார்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் சீனிவாசராவும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். பிரச்சார பொறி பலருடைய மனசில் விழுந்து கணகணத்தது. ஒன்று சேர்ந்தார்கள். உருவானது விவசாயிகள் சங்கம். எழுந்தது தட்டிக் கேட்கிற குரல்.

அந்த ஒற்றுமையே பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டது. ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது’ என்று கண்டுபிடித்துச் சொன்னார் ராஜாஜி. நிலச்சுவான்தார்களும் கூடினார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். மஞ்சள் கொடியை ஏற்றி செங்கொடியை இறக்கச் சொன்னார்கள். அதை மறுத்து அரைலிட்டர் நெல்லைக் கூட்டி கூலியாகக் கேட்டார்கள் விவசாயிகள்.

ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. தோல்விதான். அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரப் பொறி.

1967 டிசம்பர் 25. கிறிஸ்துமஸ் தினம். நிலச்சுவான்தார்களின் அடியாட்கள் நாட்டுத் துப்பாக்கிகளுடன் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகள் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார்கள். கிராமமே ரணகளமானது. துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஒரே பீதி. வேட்டையின் தீவிரம் தாளாமல் பலர் ஓடியிருக்கிறார்கள். ஒரு தெருவின் மூலையில் ராமையனின் குடிசை. மேலே கூரை. அதற்குள் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சின்ன அறையில் அடைசலாக 48 பேர்.

கொஞ்ச நேரத்தில் கதவடைத்து தீவைத்து விட்டார்கள். வெப்பம் தகித்து ஒரே கூச்சல். நெருப்பை மீறி ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். வந்ததில் இரண்டு பேரையும், ஒரு தாய் தூக்கி வெளியே வீசிய குழந்தையையும் திருப்பி குடிசைத்தீயில் வீசியிருக்கிறது வெளியே இருந்த கும்பல். தீ வேகத்துடன் எரிய அந்தப் பிழம்பில் கசிந்தது உயிர் கருகிய நாற்றம்.

நடு இரவில் போலீஸ் வந்து கனன்று கொண்டிருந்த கனலை விலக்கிப் பார்த்தால், உள்ளே கரிக்கட்டைகளாக எரிந்து அவிந்து கிடந்தன 44 உயிர்கள். அதில் பெண்கள் 14 பேர். குழந்தைகள் 22 பேர். போஸ்ட் மார்ட்டத்திற்காக நாகப்பட்டினத்திலிருந்து வந்த டாக்டர் கைவிரித்தார். அடையாளம் சொல்ல முடியாமல் ‘விடிந்ததும் செய்தி பரவி தமிழகமே அதிர்ந்தது’. ‘நாட்டுக்கே அவமானம்’ என்று கட்டம் கட்டி வெளியிட்டன டெல்லிப் பத்திரிகைகள்.

106 பேர் கைதானார்கள். திமுக ஆட்சி நடந்த அந்த நேரத்தில் கைதானவர்களில் பலர் காங்கிரஸ்காரர்கள். தப்பிப் பிழைத்தவர்கள் சாட்சியம் சொன்னார்கள். ‘இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்’ என்று சொன்னது போலீஸ்.

‘அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…’ என்று 1973 ஏப்ரல் 6ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதும், விடுதலையானார்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சட்டரீதியாக அடங்கிப் போனது கீழ்வெண்மணிப் புகை.

நன்றி: புதிய பார்வை – செப். 1 2004

Sex Sells… but (துளி ‘ஏ’)

BBC NEWS | South Asia | CEO held over student sex video: பாஸி.காம் (Baazee.com) நிறுவனத்தின் தலைவர் அவ்னிஷ் பஜாஜ் கம்பியெண்ணப் போகிறார். ‘பாஸி’ தளத்தில் டெல்லி ஸ்கூல் செக்ஸ் வீடியோவை விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ இரண்டு நிமிடங்கள் முப்பத்தேழு விநாடிகள் ஓடக்கூடியது போன்ற தகவல்கள் சொல்கிறார்கள். மேலும் விபரங்களுக்கு.

ஐ.ஐ.டி. மாணவரும் கைதாகியுள்ளார். விசிடி போட்டு 125 ரூபாய்க்கு விற்றவனுக்கும் ஜெயில் வாசம்.

இந்தக் கைது அருமையான முன்னுதாரணமாகத் தோன்றுகிறது. டாக்டர் பிரகாஷ் போல் சொந்தமாக படம் பிடிக்காதவர் அவ்னிஷ் பஜாஜ். பலான படத்தைக் கூட தானே நேரடியாக விற்காமல், இடைத்தரகராக தொடுப்பு மட்டும் கொடுத்தவர். ஓரளவு செல்வாக்கும் பணபலமும் உடையவர். ஈ-பே (eBay).காம் என்னும் அமெரிக்க கம்பெனியின் கீழ் இயங்குபவர். அவரின் கைது பலரையும் எழுப்பும். எதையும் செய்து தப்பித்து, பதுங்கி, ஒதுங்கி, அடக்கி, ஒளிந்து விடலாம் என்று எண்ணுபவர்கள் பயப்படுவார்கள்.

கைதுகள் த்ரிஷா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அச்சத்தைக் கொடுக்கும். விற்றவனை பிடித்தால், ஒரிஜினலாக தயாரித்தவன் என்றாவது அகப்படுவான். அப்போது மானநஷ்ட வழக்குத் தொடுக்க வசதியாக இருக்கும்.

ஒருவரின் சம்மதத்தோடு எடுக்கப்படும் வீடியோக்களை விற்பதில் தவறில்லை. அது குஷ்பூ நடித்ததாக இருக்கலாம்; அல்லது ஷகீலா படமாக இருக்கலாம். இந்தப் படங்கள் அவர்களின் நிதிநிலைமையின் முன்னேற்றத்திற்காகவோ, லட்சிய வெறிக்காகவோ செய்து கொள்ளப்பட்ட சமரசங்கள். இவை செய்யும் இடங்களில் ரெய்டு செய்து, டாக்டர். பிரகாஷ் போன்றவர்களை உள்ளே தள்ளுவதை விட, பாஸி.காம், ஐ.ஐ.டி. மாணவர் போன்ற கைதுகள் முக்கியமானவை.

மின்மடலின் மூலம் ஃபார்வார்ட் செய்வது, பொதுத்தளங்களில் சுட்டி கொடுப்பது, போன்றோரை நிறுத்தினால், இந்த மாதிரி படம் எடுப்போரும் குறைந்து போவார்கள். வரைவின் மகளிரைக் கைது செய்வது தேவையா என்பதை விட, அவ்வகை சமாசாரத்திற்கு தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் சட்டத்தின் பிடியில் மாட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

வலைப்பதிவுகளில் மின்னிதழ்களில் பின்னூட்டங்களின் மூலம் பிட் நோட்டிஸ் போடுவது கூட மான நஷ்ட வழக்கிற்கு வழிவகுக்கலாம் என்கிறார் நாவி. இந்த கருத்து இந்தியாவில் உள்ளவர்களும் கவனிக்கப்பட வேண்டிய சட்ட ஆய்வு. ஏதோ ‘கண்டதை சொல்கிறேன்’ என்பது இருக்கட்டும். ஆனால், இங்கிருந்து வீடியோவை இறக்கிக் கொள்ளலாம் என்பது குற்றம். வீடியோவை இன்னொருத்தருக்குக் கொடுப்பதும் குற்றம்.

‘ஜெபர்டி’ விநாடி-வினா நிகழ்ச்சியில் முன்கூட்டியே போட்டியாளர் கென் ஜெனிங்ஸ் தோற்பார் என்பதை சொன்னதற்காக அமெரிக்க வலைத்தளம் மீது ஸோனி நிறுவனம் கேஸ் நடத்துகிறது.

அமெரிக்காவில் இருப்பவர்கள் இதற்கென காப்புரிமையும் பெற்று வைத்துக் கொள்ளலாம். மானநஷ்ட வழக்கு தொடுத்தால், அதற்கான வக்கீல் செலவுகளை, இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு விடும். யாரும் வழக்கு தொடுக்கா விட்டால், மாதா மாதம் முப்பது டாலர் பணம் செலுத்தினதுதான் செலவு. ஆனால், பிறர் மேல் வழக்கு தொடுத்தே மில்லியனராகுபவர்கள், உங்களை விட்டுவிடுவார்கள்.

யோசித்து எழுதவேண்டும். கவனித்து சுட்டி கொடுக்க வேண்டும்.

தேவதையைக் கண்டேன்

மாமா பைய்யா – ரஞ்சித் – நா முத்துக்குமார் – 3.5 / 4

நா முத்துக்குமார் சோகரசத்தை புன்முறுவலோடு எழுதியிருக்கிறார்.

‘கோயிலாண்ட வரச் சொன்னியே

வந்தேனே…

குங்குமத்தைத் தரச் சொன்னியே

தந்தேனே…

புருஷனா நான் நெனச்சேன்

என்ன பூசாரியா ஆக்கிப்புட்டியே

ஜீன்ஸ கிழிச்சுப் போடச் சொன்னியே

போட்டேனே…

ஜிம்முக்குத்தான் போகச் சொன்னியே

போனேனே…

அஜீத்துன்னு நான் நெனச்சேன்

எனக்கு அல்வ்வாவைக் கொடுத்துப்புட்டியே

ரிக்ஷா இழுத்தாலும்

ரிச்சா வாழ வைப்பேன்’

‘கிருதாவை வைக்கச் சொன்னியே

வெச்சேனே…

மீசையத்தான் எடுக்கச் சொன்னியே

எடுத்தேனே…

பந்தான்னு நான் நெனச்சேன்

என்னை பாகவதராக்கிப்புட்டியே

கையவிட்டு ஓட்டச் சொன்னியே

செஞ்சேனே…

ஸ்டைலுன்னு நான் நெனச்சேன்

என்ன ஸ்ட்ரெச்சரிலே ஏத்திப்புட்டியே’

ஒரே ஒரு தோப்பிலேசபேஷ், ஸ்ரீலேகா பார்த்தசாரதி – வேலம் சி மனோஹர் – 2 / 4

‘குன்றத்திலே கோயில் கட்டி’ மாதிரி ம்ம் கொட்ட வைக்கும் ஆங்கிலப் பாடல் ஆரம்பம். கதை சொல்கிறார்கள். இரட்டுற மொழிதல் விருப்பம் உள்ளவர்கள் பல அர்த்தங்களைக் காண்பார்கள்.

துண்டக் காணோம்அனுராதா ஸ்ரீராம், தனுஷ் – திரைவானம் – 1.5 / 4

எங்கேயோ கேட்ட இசையாய் துக்கடாக்கள் வருவதால் தேவாவின் இசை என்பதை தெளியலாம். தற்கால ஜானகியான அனுராதா ஸ்ரீராமை இசையமைப்பாளர்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாதது வருத்தமே.

விளக்க ஒண்ணுகிரேஸ், யுகேந்திரன் – பா விஜய் – 3 / 4

‘பொதுவாக என் மனசுத் தங்கம்’ கொஞ்சம். இன்னும் சில கண்டுபிடிக்க முடியாத க்ளாசிக்ஸ் கொஞ்சம். மும்தாஜுடன் ஆட்டம் கட்டுகிறார் தனுஷ்.

‘பொம்பள ஆசைதான் எரியும் கொசுபத்தி

இரவு முழுக்கவும் எரியும் எரியும்

ஆம்பிள ஆசைதான் எரியும் ஊதுபத்தி

கொஞ்ச நேரம்தான் புகையும் புகையும்’

‘என் நெஞ்சுக்குள்ள மீனம்பாக்கம் ஃப்ளைட் போறது’

அழகே பிரம்மனிடம்கங்கா, ஹரீஷ் ராகவேந்திரா – வேலம் சி மனோஹர் – 1.5 / 4

கூத்தாடும் வகுப்பில் இழுத்திப் போர்த்துக் கொண்டு odd man out. ஸ்ரீதேவிக்கு ஏற்ற சாதாரண காதல் டூயட்.

எனக்கு தேனிசைத் தென்றல் பிடிக்கும். ரீ-மிக்ஸ்கள் போல் அந்தக்கால ஹிட்களை நமக்கே தெரியாமல் கலந்துகட்டுவதும் பிடிக்கும். கவலைப்படாமல் கொஞ்ச நேரம் டப்பங்குத்த இன்னும் பிடிக்கும்.

கேட்க : musicindiaonline.com

Silappathigaram – Kanimozhi Karunanidhi – Bombay J…

Silappathigaram – Kanimozhi Karunanidhi – Bombay Jeyashree – Madhavi Intro – Dance Drama Posted by Hello

Silambu – Kanimozi Karunanidhi – Bombay Jeyasree -…

Silambu – Kanimozi Karunanidhi – Bombay Jeyasree – 2 Posted by Hello

Silappathigaaram – Kanimozhi Karunanidi – Mumbai J…

Silappathigaaram – Kanimozhi Karunanidi – Mumbai Jeyashree – Maadhavi Posted by Hello

Silappathigaram – Kanimozhi Karunanidhi – Bombay J…

Silappathigaram – Kanimozhi Karunanidhi – Bombay Jeyashree – Dance – Naattiya Naadagam Posted by Hello