Category Archives: Personal

நேற்று நாங்கள் கிளி வாங்கினோம்

ரொம்ப நாளாகவே வேண்டுகோள் பட்டியலில் இருந்தது. நேற்று நிறைவேறியது.

சக்கர வளையத்தில் சுற்றித்தீர்க்கும் வெள்ளெலி, பொசுபொசு மொசக்குட்டி, சாம்பல் நிறத்திலொரு பூனை, அடக்கி வாசித்து மிரட்டும் உம்மணாம்மூஞ்சி நாய்; எல்லாவற்றுக்கும் நடுவே ஃப்ரென்ச் கிஸ் அடுத்துக் கொண்டு கிளிக்கூண்டு.

இரண்டு கிளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒன்று மஞ்சள் கலந்த பச்சை. மற்றொன்று வெளிர் நீலம்.

அதற்குத் தேவையான உணவு; காலைக்கடன்களை மறைக்க சோள வஸ்து; விளையாட கிண்கிணிகள்; அடைத்து வைக்க கூண்டு. மேலும் சில விநோதப் பொருட்கள் வாங்கப்பட்டது.

கடையில் இருந்தவரை ‘லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்‘ பாடல் போல் ‘கீக்கீக்கீ’வென்று கத்திக் கொண்டிருந்ததாக எண்ணம். வீட்டுக்கு வந்தவுடன் ‘குயிலப் பிடிச்சு கூட்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்‘ பிரபு மாதிரி இறுக்கமாக, இல்லாத இறக்கையை படபடத்து, உணவை சீந்தாமல், தண்ணீர் பருகாமல் சத்தியாகிரக கோலம்.

நிறைய பூனை வளர்த்திருக்கிறேன். நாய் வைத்துக் கொண்ட அனுபவமும் உண்டு. ஐந்து மீனை தொட்டியில் நீந்தி மகிழ்வதைப் பார்க்க நினைத்து, நாளுக்கு இரண்டாக சாகடித்து, மீன் எலும்புகளைப் பொறுக்கியதும் நிகழ்ந்திருக்கிறது.

கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கும் பழமொழியை நான் மனைவியிடம் நினைவு கூற, அவளும் ‘என் விஷயத்தில் கிளியை வளர்த்து யானை கையில் கொடுத்துட்டாங்க’ என்கிறாள்.

சாப்பாடு புத்தம்புதுசாகப் போட்டால்தான் சீந்துகிறார்கள். ஒரு மணி நேரம் வட்டிலில் காய்ந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைக்காத பழைய சோற்றை சீந்தாத என்னுடைய அந்தக்காலத்தை நினைவுறுத்தும் பட்சிகள்.

பழியாய் பவளவாய் கண்டது போதும் என்று மின்னஞ்சல் பக்கம் பார்க்க சென்றால், நண்பரிடமிருந்து ‘கிருஷ்ணம்மாளுக்கு பணம் கொடுக்கறேன்னியே… அனுப்பியாச்சா?’ என்னும் நினைவூட்டல். ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே‘ என்று கமல் பாடும் நேரம் இது.

Hazaaron Khwaishein Aisi பார்த்தால் கூட அன்னப் பறவையாக சித்ரா சிங்கை மட்டும் பால் பிரித்து மேயும் மனப்பான்மை, சுயவிமர்சனம் செய்தவுடன் அடங்கிப் போகிறது. அதை வைத்துப் பதிவெழுதும் எண்ணம் உதிக்கிறது.

இப்போதைக்கு தீராத வினா: ’24×7 தேமேயென்று தனியே வாளாவிருக்கும் இரண்டும் என்ன யோசிக்கும்?’

  • நம்மை ஏன் கூண்டு விட்டு கூ(ண்)டு மாற்றுகிறார்கள்?
  • பழைய தோழர்(கள்) என்னவானார்?
  • பக்கத்தில் உட்கார்ந்து பார்ப்பதில் இவனுக்கு என்ன கிட்டுகிறது?
  • வெளியே போனால் சோறு கிடைக்குமா?

தொடர்பான இன்றைய நியு யார்க் டைம்ஸ் பத்தி:

Should Most Pet Owners Be Required to Neuter Their Animals? – New York Times

By VERLYN KLINKENBORG
When it comes to pets, Americans are lost in a seemingly endless act of transference.

We expect to find as much innocence in our pets as we do in newborn children, which may be one reason why so few older pets are adopted from shelters.

We want the pleasures of neoteny — the adorable sustained appearance of infancy — in part because it helps us forget how much responsibility is involved in owning and training.

Americans are consumers of pets just as we are consumers of everything else.


1. Mapping a political era2. An Ideological Reading of Hazaaron Khwaishein Aisi

3. Join the fight

4. lazygeek.net: Hazaaron Khwaishein Aisi

5. Hazaaron Khwaishein Aisi (Hindi) « One Small Voice

6. The Meltdown Chronicles: Hazaaron Khwaishein Aisi

7. Sen’s Spot: Hazaaron Khwaishein Aisi(Thousand Desires such as this) – part1

8. Ruminations of a meandering mind: Hazaaron Khwaishein Aisi

9. As you like it…: Hazaaron Khwaishein Aisi (HKA) *****

Cat Fights

பூனை குட்டி போட்டது.

குட்டிகளுக்குள் முறைத்தல்.

நீயும் நானுமா?

மெய்யாலுமா? நான் அப்படிப்பட்டவனா?


Take the 100 Acre Personality Quiz!

Your Score for The 100 Acre Personality Quiz: 33%
1,922,898 people have taken this quiz so far.
139,269 are the same charactor as you (Owl).

Advice

மகளுடன் புத்தகம் படிப்பது தினசரி விரும்பி நடக்கும் விஷயம். Charlotte’s Web கதையில் அன்றைய அத்தியாயம் முடிந்தவுடன், இளைப்பாற, அவளின் அகரமுதலியை கையில் எடுக்கிறோம்.

ஏதோவொரு பக்கத்தில் கண்ட வார்த்தையை சொல்லி, அவளுக்குத் தெரிந்த அர்த்தத்தை சொல்வாள். தெரியாவிட்டால், எடுத்துக்காட்டைக் கோருவாள்.

முதலில் அம்புட்டது அட்வான்டேஜ். அவளுக்கு பொருள் தெரியாது என்கிறாள். உயரமானவன், மாடியை சென்றடைவதில் இரண்டு படிகள் அதிகம் கொடுத்து ரேஸ் வைத்தல் என்றெல்லாம் விளக்குகிறேன். ஏதோ புரிந்தது, போதும் விட்டுவிடு என்று அடுத்த வார்த்தைக்கு தாவுகிறாள்.

அட்வைஸ். இது எனக்கே புரிந்தது என்று பொழிப்புரை கொடுத்து விடுகிறாள்.

‘அப்பா பேசுவது’

உட்பொருளோ, அபிப்பிராயமோ… நானறியேன் பராபரமே!

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா

இது கொஞ்சம் பிடித்த கதை. அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளும் கதை. ‘செல்லிடத்து சினங்காக்கான்’ மாதிரி அனுபவங்களில் மோதி அசல் நிலையை எடுத்து வைக்கும் கதை. இணையத்தில் தேடியதில் ஏற்கனவே எழுதியது ஆம்ட்டது…:

கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது.

அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்…

அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு….

துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது.

கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது.

புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்…’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ… கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்கிறார்.

  1. வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி.
  2. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி.

ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி சேவை செய்வது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது!


விஷயத்துக்கு வரேன்.

இராப்பிச்சை உண்ட களைப்போடு டிவியில் சினிமா பார்க்கலாம் என்று தேடல் துவங்கியது. பே-பெர் வ்யூ-வில் ‘பான்ஸ் லேபிரிந்த்’ ஓடியது. அப்படியே ஆகட்டும் என்று தேர்தெடுக்கப்பட்டது.

படத்தின் கதையையும் ஆஸ்கார் பரிந்துரையும் அறிந்த மனைவி ஜகா வாங்குகிறார். தனியே பார்க்க முடிவெடுக்கிறேன். ஆனந்தமாக சோபாவில் சயனம். போர்வைக்குள் புகுந்த கோலம்.

‘இந்த சொகுசு வாழ்க்கை அடுக்குமா? ஏதாவது சிக் ஃப்ளிக் போட்டா குறைஞ்சா போயிடும்’ பார்வையுடன் குட் நைட் பரிமாறல் முடிகிறது.

படம் சூடு பிடிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடம். இடி, மழை, மின்னல். படம் பணால்.

வாசலில் வைத்திருக்கும் செய்மதித்தட்டு (satellite dish) ‘திசை மாறிப் போச்சு; சமிக்ஞை கிடைக்காம போச்சு!’ என்று நரிக்கதையாக வாழ்வே மாயமானது.

நல்ல படத்தை போஷாக்கான போஸில் நடுநிசி நிம்மதியோடு விமர்சக நிப்போடு காணுறும் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட துக்கத்தோடு தூக்கம்.

காலை எழுந்தவுடன், அஷ்டகோணலாக செய்மதித்தட்டை கொட்டியதில் மீண்டும் கன்னல்களுக்கு உயிர் வருகிறது. ‘பயனர் சேவை மைய’த்தை தொடர்பு கொண்டு அர்த்த ராத்திரி படம் பார்க்க முடியாத சோகத்தை எடுத்து வைக்கிறேன். ‘அச்சச்சோ’ என்று பரிதாபமாக கேட்கிறாள். ஆனால், முடிவில் படம் பார்க்க கொடுத்த பைசா தேறாது என்று நிறுவனத்தின் மேல் பாசக்காரியாகிறாள்.

‘பார்க்காத படத்துக்கு பணமா?’

‘மழை பெய்த்தற்கு நாங்கள் பொறுப்பா’

‘பணம் வாபஸ் வேண்டாம். மீண்டும் படத்தைக் காட்டு. போதும்!’

‘அப்ப, திரும்ப நாலு டாலர் கொடுக்க ரெடியா?’

‘ஏற்கனவே கொடுத்த பணத்திற்கே படம் காட்டலை. புதுசா எதுக்கு தண்டல்?’

போராட்டத்தின் முடிவில் மாணிக் பாட்சா மாதிரி மிரட்டினாலும், வருண பகவானின் சக்தியே வென்றது.

பிசாத்து நாலு டாலர் என்று கோபத்துடன் வந்தாலும், பணிவன்புடன் பவ்யமாக, கஸ்டமர் சர்வீசுக்கு புகர் புலம்பலோடு மின்மடல் அனுப்பி வைத்தேன். ஐந்தே நிமிடத்தில் பதில் வந்தது. ‘நாலு டாலர் தள்ளுபடி செய்கிறோம்’ என்றார்கள்.

தொலைபேசியில் பொறுமையாக துளிக் கோபம் கூட எட்டிப் பார்க்காமல், என்னுடன் வாதம் செய்து நிறுவனத்தின் நிலையை விளக்கிய பயனர் மன்றத்தவள் எங்கிருந்தாலும் எளிதில் ‘பேர் சொல்லும் பிள்ளை’யாகப் பரிமளிப்பாள்.

இறைவா

பஞ்சபூதங்களிடமிருந்து என்னைக் காப்பாற்று!

படங்களை நான் பார்த்துக் கொள்வேன்!!

பக்கிபாய் 

Eight Random Facts Meme

தற்புகழ்ச்சியில் கூட தன்னடக்கத்துடன் பட்டியலிட்ட வெங்கட், என்னையும் அழைத்து இருக்கிறார். தீக்குச்சியைக் காட்டினால் கை பொத்துப்போகும் அளவு பொறாமை எழ இகாரசும் தொடர்ந்திருக்கிறார்.

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. மைலாப்பூரில் இருக்கும் வீட்டில் இருந்து 5-கே பிடித்தால் தரமணி செல்லும். அங்கேதான் சி.எஸ்.ஐ.ஆர். இருக்கிறது. இரண்டு மாச ப்ராஜெக்ட். ஊழியம் செய்பவர்களே உல்லாசமாக இருப்பதால், விருப்பபட்டதை செய்து முடித்தால் போதும். எனினும், நிறைய சாதிக்க வேண்டும் என்னும் வெறி. பெரிய நூலகம். மேல் அடுக்கில் தேவைப்படும் புத்தகத்தை எடுக்க ஐந்தடி ஐந்தங்குலத்தில் இருந்தாலும், உச்சாணிக் கொம்பில் ஏறும் மன உறுதியுடன் தாவி எடுத்ததில் பாண்ட் ‘டர்’ சத்தம் போட்டது.

பாதுகாப்பான இடத்துக்கு சென்று, ஆராய்ந்ததில் கிழிந்தது தெளிந்தது. காலை பத்து மணிக்குக் கிழிந்த கால்சட்டையுடன் மாலை ஐந்து மணி வரை நாசூக்காக, எவருக்கும் வெளிக்காட்டாமல் பணியகத்தில் காலந்தள்ளியது முதற்கட்ட சாதனை. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் கடைசியாக ஏறி, ப்ரொஃபஷனலாக சாய்ந்து அட்ஜஸ்ட் செய்து, மயிலை குளத்தில் ஸ்டைலாக இறங்கி. புத்தகத்தை பின்வாக்காக வைத்து, மறைத்து, சீட்டியடித்து வீட்டுக்கு வந்தது பெருஞ்சாதனை.

2. வீடு வாங்கினால் தோட்ட வேலை, களை பிடுங்கல், தண்ணீர் பாய்ச்சல், மராமத்து பார்த்தல், பனி நீக்கல், இலை திரட்டல் என்று வீட்டு வேலை குவியும். அதைத் தவிர்க்க டிமாண்ட் x சப்ளை, பூம் x பஸ்ட் என்று தேவையான அளவில் மேக்ரோ, மைக்ரோ பொருளாதாரத்தை வாதிட்டு மனைவியை பயமுறுத்தி, வாடகை வீட்டிலேயே அமர்த்தியது முதல் சாதனை.

நாளிதழ் படித்து, நாட்டுநடப்பு ஆராய்ந்து மனைவிக்கு பொருளியல் கொள்கைகளில் எதிர் கருத்துக்களை வைக்கத் தெரிந்தவுடன் ‘ஃப்ளாட்’ வாங்கி, எல்லாவற்றையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டு, தொடர்ந்து வலைப்பதிவதற்கு சால்ஜாப்பு கண்டுபிடிப்பது பெருஞ்சாதனை.

3. ‘இந்தியன்’ படம் பார்த்தால் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்று தெரியும். இண்டெர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் அப்படித்தான் கைக்கு கிடைத்தது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பைக் பின்னாடி உட்கார கூட பயம். சாலை விதிகள் எல்லாம் நடராஜாவாக மட்டும் அறிவேன். ஸ்டியரிங் தெரியும்; ப்ரேக் தெரியும். அதை வைத்து நியுஜெர்சியில் இருந்து, நூறு மைல் தூரம் தள்ளியுள்ள நியு யார்க் மாநகரம் வழியாக லாங் ஐஸ்லண்ட் செல்ல முடிவெடுத்தது முதல் சாதனை.

வண்டியை நெடுஞ்சாலையில் இருந்து வேகத்தைக் குறைத்து வெளியேற்றத் தெரியாமல், விளக்குக் கம்பத்தில் மோதி, டயர் பஞ்சரான பிறகும், வெறும் சக்கரத்தின் துணையோடு, தீப்பொறி பறக்க, சுற்றி ஓட்டுபவர்கள் கதிகலங்க, அஞ்சாநெஞ்சனாக, இலக்கை அடையும் வரை காரையும் உயிரையும் கையில் பிடித்து ஓட்டிசென்றது பெருஞ்சாதனை.

4. பின் லாடன் செப் 11 அரங்கேற்றி வேலை வாய்ப்பைக் குறைத்த காலம். எச்-1பி விசாவில் இருந்தேன். 9-5 என்று செக்காட்டியது போதும் என்று கழற்றி விட்டார்கள். தொலைத்தொடர்புத்துறை படுத்துக் கொண்ட நேரம். அந்தத் துறையில் இயங்கிய என் நிறுவனமும் திவால் ஆகியது. பழைய கம்பெனியில் என்னுடைய புத்தம்புதிய நிரலியின் ஐந்து நிமிட சேமிப்பினால் 9,600,000 டாலர் சேமிப்பு ஏற்பட்டது என்று கணக்கு காட்டியது சாதனை.

அதை நம்பி வேலைக்கு எடுத்துக் கொண்ட இடத்தில் இன்னும் காலந்தள்ளுவது பெ.சா.

5. லண்டனுக்கு இதுவரை சென்றதில்லை. ஹீத்ரோவில் கால் மட்டுமே பதித்திருக்கிறேன். ஹனிமூனுக்கு எங்கு செல்லலாம் என்று தோழி வினவுகிறாள். கிறிஸ்துமஸ் சமய லண்டனை விவரிக்க ஆரம்பிக்கிறேன். அவளுக்கு என்னைத் தெரியும். புதுகணவன் ‘எத்தனை முறை சென்றிருக்கீங்க?’ என்று கேட்டது சா.

இன்றளவும் ஆஸ்திரேலியா, அமேசான் என்று அனைவருக்கும் வாய்ப்பந்தலிலே திட்டம் தீட்டித் தருவது பெ.சா.

6. பேய்கள் என்றால் பயமில்லை (E – T a m i l : ஈ – தமிழ்: ஆவியுலக அனுபவங்கள்) என்று சொல்லிவிட்டு மூன்றடுக்கு வீட்டில் தன்னந்தனியாக ‘பூத்’ பார்க்க விழைகிறேன். இருபது இன்ச் டிவி ரொம்ப பயமுறுத்தவில்லை. நடுநிசி வரை நிம்மதியாகப் பார்த்து முடித்துவிட்டு, வராத ஜி-மெயில்களை மீண்டும் எதிர்நோக்கி சரிபார்த்து, தூங்கப் போவதற்கு முன் பாத்ரூமில் நுழைய கதவைத் திருகினால் ‘ஷாக்’.

கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாசற்கதவிற்கு அருகே தேவுடு காத்து, சோபாவில் இருந்திருக்கிறேன். வெலவெலத்தாலும், பூட்டை வெளியில் இருந்து திறந்து, தெரிந்த எல்லா சுலோகங்களும் முனகிக் கொண்டே, ‘காற்று பலமா அடிச்சிருக்கணும்!’ என்று அறிவியல்பூர்வமாக தெளிந்தது சா.

பாத்ரூமுக்கு வந்த காரியத்தை முடித்துவிட்டு, கண்ணாடியில் இன்னும் சிலர் தெரிவது போல் தெரியும் என்று அனுமாணித்து, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்து -5 பவர் கொண்ட் அரைக்கண்ணுடன் முகக்கண்ணாடி தரிசித்து, வீட்டிற்குள் ஏதாவது இருக்குமோ என்று பயத்தில் சிறப்பு சாமிகளை அழற்றிவிட்டு, உறங்கிப் போனது பெ.சா.

7. மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் மதியம் ஒன்றரை வரை நித்திரை பயின்றது கல்லூரி சா.

குளிர்காலத்தில், தண்ணீரை வெந்நீராக்கி, அந்த வெம்மை அரை நிமிடத்தில் காற்றில் கரைவதற்குள் குளிக்கப் பொறுமையின்று பதினேழு நாள் முழுகாமல் இருந்து, ஆஃப்டர் ஷேவ் மட்டும் ப்ரோஷணம் செய்து மணம் பரப்பியது பெ.சா.

8. எண்ணி ஒரு குறிப்பிடத்தக்க செயலை விளையாட்டிலோ, சமூகத்திலோ, படிப்பிலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ பாடல் பெறுமளவு சாதனை செய்யாமலே எட்டைப் பட்டியலிடுவது சா.

‘இவன் இயல்பாகவே அவையடக்கமும் கூச்சமும் கொண்டவன் போல’ என்னும் இமேஜை பாதுகாப்பது பெ.சா.

இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

1. இலவசகொத்தனார்
2. ஜி
3. பொன்ஸ்
4. பத்மா அர்விந்த்
5. சோடா பாட்டில்
6. நிர்மல்
7. கப்பி
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

The Language of Puke

மொழி – வாந்தி‘ என்பதன் தூய ஆங்கிலமாக்கத்தை தலைப்பில் காணலாம்.

மொழி திரைப்படத்தில் குடிபோதை மீறிய பிரகாஷ்ராஜ் இன்னொருவரின் வீட்டு வாயிலில் வாந்தியெடுக்கத் தொடங்கி விடுவார். அவரை வீட்டுக்குள் இட்டு, கதவை சாத்தி, பாத்ரூமை பயன்படுத்துமாறு சொன்னபிறகும், மிகத் தெளிவாக மீண்டும் அதே வீட்டு வாயிலுக்கு பிழறாமல் வந்து மீத வாந்தியையும் முடித்து விட்டு உறங்க சென்றுவிடுவார்.

யதார்த்தமான பல காட்சிகள் நிறைந்த படம் என்பதற்கு வசனம் மட்டுமே கொண்ட முதல் காட்சியே ஒரு சோறு பதம். ஆனால், குடிகாரனின் குணாதிசயத்தை சொல்லும் இந்தக் காட்சி இயல்பாக நிகழ்வது.

கல்லூரி முதலாமாண்டு. ‘இந்தியன் ஓசியன்‘ கச்சேரிக்கு புதிய வலைப்பதிவர் ஆசை ஆசையாய் தமிழ் திரட்டியில் சேர்ந்துகொள்வது போல், கிறக்கத்துடன் சீக்கிரமே போய் சீட் பிடித்து உட்கார்கிறோம். பெருங்கூட்டத்தில் ஒருத்தி பாப்கார்ன் பிரியப்பட, வாங்க வெளியே வந்தபோதுதான் பிரகாஷ்ராஜ் ஸ்டைல் அபிஷேகம், மட்டுறுத்தப்படாத பின்னூட்டமாக கிடைத்தது.

‘எப்படி இப்படி தன்னையறியாமல் மூழ்கி நாசமாகிறார்கள்’ என்னும் சினம் கலந்த அறியாமை சீனியரிடம் பயமாக வெளிப்படும்.

கல்லூரி இரண்டாமாண்டு. திட்டமிட்டு நிகழவில்லை. ஆனால், எவர் மீதோ நானே நிறைவேற்றுகிறேன். வினை விதைத்தவன் வாந்தி கொடுப்பான்.

இருபத்தைந்து ரூபாய்க்குள் நிறைவான கிக் வேண்டிய தருணம். 47 ரூபாய்க்கு விஸ்கி வாங்கி இருவர் பகிர்வதாக திட்டம். ‘First come first served’ என்னும் கொள்கையில் இயங்கியதால் கடகடவென்று குடிப்பது சாலச் சிறந்தது. பெப்சியோ, தண்ணீரோ சேர்ப்பதால் அளவும் பெருகும். கிளாஸை அருந்தி முடித்து, அடுத்த பெக் அடிப்பதற்கான நேரமும் செலவாகும். பனிக்கட்டி மட்டும் இட்டு ஈரல் எரிவதை உணர்ந்து சிலாகிப்பது பொருத்தம்.

Oasis‘ கலைவிழாவின் இறுதி நாளில் dutch courage உடன் ‘டேய்… உனக்கு சொல்ல தைரியமில்லேன்னா போடா! உனக்காக நான் போறேன்!’ என்று வீராப்புடன் நண்பனின் தோழிகளிடம் சென்று காதலை வெளிப்படுத்துகிறேன் என்று நட்பை முறித்து சந்தோஷிக்க வைக்கும். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. காலையில் ‘அப்படியா? நானா… இருக்காது… நம்பமுடியவில்லை!’ என்று சத்தியம் செய்யலாம்.

கல்லூரி முடிந்தவுடன் பொறுப்பு பெறவேண்டும். ‘எவ்வளவு ஏறினாலும் ஸ்டெடியாக இருப்பேன்’ என்று வாக்களித்து, நண்பன் வீட்டில் ஆற அமர திளைத்து, தூக்கத்தில் எழுந்து, மிகச்சரியாக லெட்ரீனுக்கு சென்று குறி பார்த்து வாய் வெளிப்பாடு நிறைவேறுகிறது.

காலை எழுந்தவுடன்தான் சொல்கிறார்கள். அலமாரியை இடம் மாற்றி கட்டியிருந்தார்கள்.

இதே மாதிரி ஃப்ரிட்ஜை, வாஸ்துப் பிரகாரம் ஓவர்நைட்டில் பெயர்த்துவிட்டாய் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்வதற்காக, வேறொருவன் எனக்குக் கிடைத்தான்.

அளவுக்கு மிஞ்சினால் ஆல்கஹாலும் ஆஃப் பாயில்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இருந்து:
The health benefits of alcohol disappear and risk increases when you drink more than a few servings a day…. Pouring too much clearly adds calories….  But the bigger worry is that the maximum health benefits of alcohol come with just less than one serving a day for women and up to two servings for men.

Home Alone

அக்கம்பக்கம் பாரடா சின்னராசா

ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

New Jersey Bloggers Meet – Tamil Blog Attendant

The test of a first-rate intelligence is the ability to hold two opposing ideas in the mind at the same time and still retain the ability to function. One should, for example, be able to see that things are hopeless yet be determined to make them otherwise.
– F. Scott Fitzgerald

நியூ ஜெர்சி சந்திப்பு – சில நினைவுகள்

  • ரசோய்‘ உணவகத்தில் பஃபே பிரமாதம். அதுவும் ‘பன்னீர் புருஜி‘ செய்திருந்தார்கள். ரொம்பவே yummy.
  • பன்னீர் புரிஜி தவிர பாவ் பாஜி, ஆலு டிக்கி சாட், மலாய் சிக்கன் ஆகியவையும் ருசிகரம்.
  • சனிக்கிழமையில் போக்குவரத்து ‘மாமா’க்கள் கார்-ஆட்டம் அதிகம் இல்லை. தைரியமாக 80+ ஓட்டலாம்; அபராத டிக்கெட் கிடைக்காது.
  • ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் எந்த பொழுதில் சென்றாலும் கூட்டம் நெக்கும். தவிர்த்தல் நலம்.
  • கனெக்டிகட்-இல் பெட்ரோல் விலை அதிகம்; நியூ ஜெர்சியில் காரில் உட்கார்ந்தவாறே சொகுசாக கேஸ் போட்டு விடுகிறார்கள்; விலையும் குறைச்சல்.
  • இரவில் வண்டி ஓட்டினால் தூக்கம் வரும். பக்கத்தில் வெட்டிப்பயல், தென்றல் போல் எவராவது நகைக்க வைத்தார்களோ… பிழைத்தோமோ 😉
  • 80 ஜிபி ஐ-பாட்-இல் பாடல்கள் ரொப்ப வேண்டாம். மூன்றரை ஜிபி நிரப்பினாலே பத்து மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும்.
  • ஆஸி-இலங்கை ஆட்டம் ஒளிபரப்பாகும் என்று தெரிந்திருந்தால் சீக்கிரமே போய் சேர்ந்திருக்கலாம்.
  • சென்னையில் ஒரு பெண் பதிவர். இங்கே இருவர்.
  • (வீ)எஸ்.கே. மைசூர்பாகு, முறுக்கு, ராஜாவின் திருவாசகம் கொடுத்தார்.
  • சென்னப்பட்டணம் ‘சாகரன் அஞ்சலி மலர்’ வழங்கியது.
  • சூடான பாப்-கார்ன், சல்சாவுடன் சிப்ஸ், குளிர்ந்த பெப்சி, தாகத்துக்கு தண்ணீர் – நொறுக்ஸ் ஏராளம்.
  • அண்டத்திலேயே முதன்முறையாக பவர்பாயிண்ட் புல்லட் போட்ட முதல் பதிவர் அரங்கு.
  • அகில லோகத்திலேயே தென்றல் முதல்முதலாக கலந்துகொண்ட சந்திப்பு.
  • சேரியமாகப் கதைத்ததை, பதிவாக்க கேயாரெஸ் ரவி அல்லது வெட்டிப்பயல் பாலாஜி, இணையத் தமிழின் முதன்முதலாக minutes எழுதுவதாக வாக்களித்த சந்திப்பு.

The measure of success is not whether you have a tough problem to deal with, but whether it’s the same problem you had last year.
– John Foster Dulles

Boston Tamil Bloggers Meet – Minutes, Agenda, Talk, Notes

பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்

இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்

பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.

பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.

யாரெல்லாம் வந்திருந்தார்கள்?

1. தேன் துளி பத்மா அரவிந்த்

2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்

3. வெயிலில் மழை ஜி

4. வெட்டிப்பயல் பாலாஜி

5. பாடும் நிலா பாலு! சுந்தர்

6. Navan’s weblog நவன்

7. பார்வை மெய்யப்பன்

8. வேல்முருகன்

9. ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர்

10. அரை பிளேடு

கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:

1. Blogger: User Profile: சனியன்

2. வெற்றியின் பக்கம் வெற்றி

ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.

என்ன பேசினோம்?

மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.

எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.

சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.

ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். ‘இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே… இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்’ என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.

பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.

‘தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.

‘ஆம்’

‘மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?’ மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.

சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.

வலைப்பதிவுகள்

பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?

வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?

பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.

பத்மா அரவிந்த்

சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.

கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.

பிரக்ஞை ரவி

தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.

‘எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை’ என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.

கண்ணபிரான் ரவி கேயாரெஸ்

விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.

  • ‘பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?’;
  • ‘பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?’
  • ‘ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?’

    என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.

    மற்றவர்கள்

    ‘வெயிலில் மழை’ ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ‘பார்வை’ மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.

    கேட்க மறந்த கேள்விகள்

    ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?

    அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்

    விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.

    மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?

    கடைசியாக…

    என் மனைவிக்கு நன்றி.

    எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே ‘அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?’ என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!

    அடுத்து…

    விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.

    – பாலாஜி
    பாஸ்டன்