Eight Random Facts Meme


தற்புகழ்ச்சியில் கூட தன்னடக்கத்துடன் பட்டியலிட்ட வெங்கட், என்னையும் அழைத்து இருக்கிறார். தீக்குச்சியைக் காட்டினால் கை பொத்துப்போகும் அளவு பொறாமை எழ இகாரசும் தொடர்ந்திருக்கிறார்.

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. மைலாப்பூரில் இருக்கும் வீட்டில் இருந்து 5-கே பிடித்தால் தரமணி செல்லும். அங்கேதான் சி.எஸ்.ஐ.ஆர். இருக்கிறது. இரண்டு மாச ப்ராஜெக்ட். ஊழியம் செய்பவர்களே உல்லாசமாக இருப்பதால், விருப்பபட்டதை செய்து முடித்தால் போதும். எனினும், நிறைய சாதிக்க வேண்டும் என்னும் வெறி. பெரிய நூலகம். மேல் அடுக்கில் தேவைப்படும் புத்தகத்தை எடுக்க ஐந்தடி ஐந்தங்குலத்தில் இருந்தாலும், உச்சாணிக் கொம்பில் ஏறும் மன உறுதியுடன் தாவி எடுத்ததில் பாண்ட் ‘டர்’ சத்தம் போட்டது.

பாதுகாப்பான இடத்துக்கு சென்று, ஆராய்ந்ததில் கிழிந்தது தெளிந்தது. காலை பத்து மணிக்குக் கிழிந்த கால்சட்டையுடன் மாலை ஐந்து மணி வரை நாசூக்காக, எவருக்கும் வெளிக்காட்டாமல் பணியகத்தில் காலந்தள்ளியது முதற்கட்ட சாதனை. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் கடைசியாக ஏறி, ப்ரொஃபஷனலாக சாய்ந்து அட்ஜஸ்ட் செய்து, மயிலை குளத்தில் ஸ்டைலாக இறங்கி. புத்தகத்தை பின்வாக்காக வைத்து, மறைத்து, சீட்டியடித்து வீட்டுக்கு வந்தது பெருஞ்சாதனை.

2. வீடு வாங்கினால் தோட்ட வேலை, களை பிடுங்கல், தண்ணீர் பாய்ச்சல், மராமத்து பார்த்தல், பனி நீக்கல், இலை திரட்டல் என்று வீட்டு வேலை குவியும். அதைத் தவிர்க்க டிமாண்ட் x சப்ளை, பூம் x பஸ்ட் என்று தேவையான அளவில் மேக்ரோ, மைக்ரோ பொருளாதாரத்தை வாதிட்டு மனைவியை பயமுறுத்தி, வாடகை வீட்டிலேயே அமர்த்தியது முதல் சாதனை.

நாளிதழ் படித்து, நாட்டுநடப்பு ஆராய்ந்து மனைவிக்கு பொருளியல் கொள்கைகளில் எதிர் கருத்துக்களை வைக்கத் தெரிந்தவுடன் ‘ஃப்ளாட்’ வாங்கி, எல்லாவற்றையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டு, தொடர்ந்து வலைப்பதிவதற்கு சால்ஜாப்பு கண்டுபிடிப்பது பெருஞ்சாதனை.

3. ‘இந்தியன்’ படம் பார்த்தால் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்று தெரியும். இண்டெர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் அப்படித்தான் கைக்கு கிடைத்தது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பைக் பின்னாடி உட்கார கூட பயம். சாலை விதிகள் எல்லாம் நடராஜாவாக மட்டும் அறிவேன். ஸ்டியரிங் தெரியும்; ப்ரேக் தெரியும். அதை வைத்து நியுஜெர்சியில் இருந்து, நூறு மைல் தூரம் தள்ளியுள்ள நியு யார்க் மாநகரம் வழியாக லாங் ஐஸ்லண்ட் செல்ல முடிவெடுத்தது முதல் சாதனை.

வண்டியை நெடுஞ்சாலையில் இருந்து வேகத்தைக் குறைத்து வெளியேற்றத் தெரியாமல், விளக்குக் கம்பத்தில் மோதி, டயர் பஞ்சரான பிறகும், வெறும் சக்கரத்தின் துணையோடு, தீப்பொறி பறக்க, சுற்றி ஓட்டுபவர்கள் கதிகலங்க, அஞ்சாநெஞ்சனாக, இலக்கை அடையும் வரை காரையும் உயிரையும் கையில் பிடித்து ஓட்டிசென்றது பெருஞ்சாதனை.

4. பின் லாடன் செப் 11 அரங்கேற்றி வேலை வாய்ப்பைக் குறைத்த காலம். எச்-1பி விசாவில் இருந்தேன். 9-5 என்று செக்காட்டியது போதும் என்று கழற்றி விட்டார்கள். தொலைத்தொடர்புத்துறை படுத்துக் கொண்ட நேரம். அந்தத் துறையில் இயங்கிய என் நிறுவனமும் திவால் ஆகியது. பழைய கம்பெனியில் என்னுடைய புத்தம்புதிய நிரலியின் ஐந்து நிமிட சேமிப்பினால் 9,600,000 டாலர் சேமிப்பு ஏற்பட்டது என்று கணக்கு காட்டியது சாதனை.

அதை நம்பி வேலைக்கு எடுத்துக் கொண்ட இடத்தில் இன்னும் காலந்தள்ளுவது பெ.சா.

5. லண்டனுக்கு இதுவரை சென்றதில்லை. ஹீத்ரோவில் கால் மட்டுமே பதித்திருக்கிறேன். ஹனிமூனுக்கு எங்கு செல்லலாம் என்று தோழி வினவுகிறாள். கிறிஸ்துமஸ் சமய லண்டனை விவரிக்க ஆரம்பிக்கிறேன். அவளுக்கு என்னைத் தெரியும். புதுகணவன் ‘எத்தனை முறை சென்றிருக்கீங்க?’ என்று கேட்டது சா.

இன்றளவும் ஆஸ்திரேலியா, அமேசான் என்று அனைவருக்கும் வாய்ப்பந்தலிலே திட்டம் தீட்டித் தருவது பெ.சா.

6. பேய்கள் என்றால் பயமில்லை (E – T a m i l : ஈ – தமிழ்: ஆவியுலக அனுபவங்கள்) என்று சொல்லிவிட்டு மூன்றடுக்கு வீட்டில் தன்னந்தனியாக ‘பூத்’ பார்க்க விழைகிறேன். இருபது இன்ச் டிவி ரொம்ப பயமுறுத்தவில்லை. நடுநிசி வரை நிம்மதியாகப் பார்த்து முடித்துவிட்டு, வராத ஜி-மெயில்களை மீண்டும் எதிர்நோக்கி சரிபார்த்து, தூங்கப் போவதற்கு முன் பாத்ரூமில் நுழைய கதவைத் திருகினால் ‘ஷாக்’.

கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாசற்கதவிற்கு அருகே தேவுடு காத்து, சோபாவில் இருந்திருக்கிறேன். வெலவெலத்தாலும், பூட்டை வெளியில் இருந்து திறந்து, தெரிந்த எல்லா சுலோகங்களும் முனகிக் கொண்டே, ‘காற்று பலமா அடிச்சிருக்கணும்!’ என்று அறிவியல்பூர்வமாக தெளிந்தது சா.

பாத்ரூமுக்கு வந்த காரியத்தை முடித்துவிட்டு, கண்ணாடியில் இன்னும் சிலர் தெரிவது போல் தெரியும் என்று அனுமாணித்து, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்து -5 பவர் கொண்ட் அரைக்கண்ணுடன் முகக்கண்ணாடி தரிசித்து, வீட்டிற்குள் ஏதாவது இருக்குமோ என்று பயத்தில் சிறப்பு சாமிகளை அழற்றிவிட்டு, உறங்கிப் போனது பெ.சா.

7. மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் மதியம் ஒன்றரை வரை நித்திரை பயின்றது கல்லூரி சா.

குளிர்காலத்தில், தண்ணீரை வெந்நீராக்கி, அந்த வெம்மை அரை நிமிடத்தில் காற்றில் கரைவதற்குள் குளிக்கப் பொறுமையின்று பதினேழு நாள் முழுகாமல் இருந்து, ஆஃப்டர் ஷேவ் மட்டும் ப்ரோஷணம் செய்து மணம் பரப்பியது பெ.சா.

8. எண்ணி ஒரு குறிப்பிடத்தக்க செயலை விளையாட்டிலோ, சமூகத்திலோ, படிப்பிலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ பாடல் பெறுமளவு சாதனை செய்யாமலே எட்டைப் பட்டியலிடுவது சா.

‘இவன் இயல்பாகவே அவையடக்கமும் கூச்சமும் கொண்டவன் போல’ என்னும் இமேஜை பாதுகாப்பது பெ.சா.

இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

1. இலவசகொத்தனார்
2. ஜி
3. பொன்ஸ்
4. பத்மா அர்விந்த்
5. சோடா பாட்டில்
6. நிர்மல்
7. கப்பி
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

15 responses to “Eight Random Facts Meme

 1. சாதனையும் பெரும் சாதனையும் அழகாக எழுதியது இன்னும் ஒரு சாதனை:)
  நம்ம பதிவெல்லாமே தற்புகழ்ச்சிதானே அப்படின்னு ஒரு யோசனை. சீக்கிரமே நம்ம புகழ் பரப்பிடுவோம். நன்றி

 2. பாபா,

  வலைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை அதை சொல்லாத இந்த பதிவு பெரும் சோதனை!! :))

  என்னென்னமோ சாதனை எல்லாம் பண்ணி இருக்கீங்க. பழைய கம்பெனி சேமிச்ச பணத்தில் ஒரு % வாங்கி இருக்கலாமுல்ல.

  நம்மளையும் கூப்பிட்டுட்டீங்களே. விரைவில் எழுதறேன்.

 3. ஆஹா, தன்னடக்கமோ தன்னடக்கம்.

  பேய்-விசயம் – நானும் அதே. 🙂

 4. ஏண்ணே, விநோதங்கள், பெருமைகள்னே எல்லாரும் அடுக்குறீங்களே, சொன்னதுலயே மோசமான பொய், செஞ்சதுலயே மோசமான தவறுகள், பலவீனங்கள்… இந்த ரேஞ்சுல tag பண்ணலாமே.

 5. ஐயா, தங்கள் உத்தரவின் படி பதிவு போட்டாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள், காத்திருக்கிறேன். :))

 6. என்ன பாபா, உலக மகா பதிவாளர் மாநாடு நடத்துனீங்களே.. அந்தச் சாதனையப் பத்தி ஒன்னுமே சொல்லல??

  சரி.. இதுல நம்மள பத்துன எட்டு தகவல்னுதானே போட்டிருக்குது. நீங்க சாதனை மட்டும்தான் போட்டிருக்கீங்க. ஏன்னா சாதனைன்னு யோசிச்சா ஒன்னுமே தோண மாட்டேங்குது :((

  இதுக்கு மட்டும் விளக்கம் குடுங்க. கும்முன்னு நானும் போட்டுடுறேன் :))

 7. —நம்மள பத்துன எட்டு தகவல்னுதானே போட்டிருக்குது. நீங்க சாதனை மட்டும்தான் போட்டிருக்கீங்க. —

  நம்மப் பத்தின எல்லா தகவல்களுமே சாதனைதானே 🙂

  சில சமயம் சோதனையா இருந்தாலும், அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறோம் என்பதால் சாதனை.

  சில சமயம் நம்மைப் பார்த்து சுத்தி இருக்கறவங்க வியந்து பாராட்டுவதால், சாதனை!

 8. //பதினேழு நாள் முழுகாமல் இருந்து, ஆஃப்டர் ஷேவ் மட்டும் ப்ரோஷணம் செய்து மணம் பரப்பியது பெ.சா.
  //

  உங்க பக்கத்துல இருந்தவங்களுக்கு தானே சாதனைனு சொல்றீங்க? 😉

  கண்டுக்கனதுக்கு டாங்க்ஸ் தல.. 🙂

  //சாதனை செய்யாமலே எட்டைப் பட்டியலிடுவது சா.

  ‘இவன் இயல்பாகவே அவையடக்கமும் கூச்சமும் கொண்டவன் போல’ என்னும் இமேஜை பாதுகாப்பது பெ.சா.

  //

  இதை நானும் யூஸ் பண்ணிக்கலாமா? இல்லைனா ஒரு எட்டு நாள் டைம் கொடுத்தா ஏதாவது எட்டு சாதனைகளை அரும்பாடுபட்டாவது சாதிச்சுட்டு வந்துடறேன் :)))

 9. Pingback: சுயதம்பட்டம் « கோம்பை

 10. பாலா,

  நன்றி

  இங்கன பாருங்க

 11. என்ன வெகெஷனா? ஒன்னும் புதுசா பதியலையே. பாலா பதிவிடாம இருக்கலாமா?

 12. பத்மா…
  கொலராடோ சென்றிருந்தேன். பயணக்கட்டுரையோடு வருகிறேன் 🙂

 13. Pingback: pookri.com » எட்டு ஒன்பது பத்து

 14. Pingback: பிரச்சாரப் படங்களும் பிராபல்ய பித்துக்குளிகளும் « Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.