அவர் பேச்சு முடிந்தபிறகு, காலி கப்-சாஸர்கள், தட்டுகள் அகற்றப்பட்ட பிறகு விருந்தினர் பார்ப்பதற்காகவென்று முந்தைய ஆண்டு ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம் பெற்று, சினிமா விசிறிகள் சங்கம் (ரிஜிஸ்டர்), தலை சிறந்த படம் என்று நற்சான்றிதழ் வழங்கிய தமிழ்ப்படம் ஆரம்பித்தது.
…..
ராம்சிங் அந்தப் பாராட்டை அப்படியே அங்கீகரித்துக் கொண்டான்.
‘சோக அம்சம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது’ என்று செக்காரர் சேர்த்துக் கொண்டார்.
இப்போது ராம்சிங்குக்கும் சிறிது சந்தேகம் வந்தது. ஜகன்னாத்ராவ் கண்களில் ஓரளவு தெரியுமளவுக்கு விஷமம் தென்பட்டது. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக் கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கைபோய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
‘வாழ்க்கையே சோகம்தானே’, என்று ராம்சிங் சொன்னான்.
‘எங்களுக்கு (நாஜி) ஆக்கிரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாகத்தான் இருக்கிறது.’
திரவியம் ஏனிந்தப் பேச்சைத் தொடங்கினோம் என்ற சங்கடம் தெரிய நின்றுகொண்டிருந்தார்.
செக்காரர் இறுதியாக ஒன்று கூறி முடித்தார். ‘நானும் மூன்று இந்தியப் படங்களைப் பார்த்து விட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுது விடுகிறார்.’
எல்லோரும் லேசாகச் சிரித்தார்கள். உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டில் ஒரு சிலரால் கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் பெற்றவர்.
நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்










