1. ‘அடுத்த வீட்டுக்கு ஆலோசனை திட்டம்‘: தம்பி கொசொவோ சுதந்திரம் அறிவித்ததை, அண்ணன் துருக்கி வரவேற்றிருக்கிறது. சூட்டோடு சூடாக, துருக்கிக்குள் இருந்து விடுதலை கோரும் குர்துக்களை தீர்த்துக் கட்ட, சுதந்திர நாடான இராக்கிற்குள் புகுந்து, தன்னாட்சி உரிமை கொண்ட குர்துக்களை ஓட ஓட அடித்துக் கொல்கிறது.
வாக்களிப்பதற்கு முன் படிக்க வேண்டிய பத்திகள்:
- Gary Leupp: The Independence of Kosovo
- Jeremy Scahill: The Real Story Behind Kosovo’s Independence
- George Szamuely: The Absurdity of “Independent” Kosovo
2. ‘பெரியவர்கள் சொற்படி நட‘: இராஜீவ் காந்தியின் சார்க் நாடுகள் கூட்டமைப்பு பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், ஈழ விடுதலைக்கு இந்தியா இன்னும் பெரிய அளவில் உதவியிருக்கும். தான் உள்ளிருக்கும் நாட்டை விட, ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பினால் போதும்; நாடோ-வில் நம்பிக்கை வைத்தோர் தனி நாடாக்கப் படுவார்.
3. ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா‘ – முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், அதே தாடியை வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டார்.
4. ‘வெற்றித்தலைவர் ≡ தலைசிறந்த நடிகர்‘: குருதிப்புனல் திரைப்பட வசனத்தில் வரும் ‘‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது’, எனபதற்கேற்ப நடந்த முதல் நடவடிக்கை.
- இணையமே எங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் நடித்ததை நம்பி, கிட்டத்தட்ட மொத்த உலகத்திற்கும் யூ-ட்யூப் எட்டாதவாறு செய்து காட்டியது. இந்தியர்களும் சில வலையகங்களை சென்சார் செய்ய முயற்சித்தார்கள்; பாக்கிஸ்தானும் முயற்சித்திருக்கிறது. என்னவாக இருந்தாலும், பக்கத்து நாட்டுக்காரர்கள் அதிபுத்திசாலிகள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- அலபாமா: தணிக்கை செய்வதாக சொல்லி செய்தால்தானே பிரச்சினை… ‘சிலபல தொழில்நுட்பக் காரணங்களால் உங்களின் வாய் இறுக்கக்கட்டப்படுகிறது’ என்று மென்மையாக, நாகரிகமாக சொல்லத் தெரிந்தால், அவர்களுக்குப் பெயர் அமெரிக்கா. குடியரசுக் கட்சிகளின் சேட்டையையும், ஜனாதிபதி புஷ் பரிவாரத்தின் எதிர்க்கட்சி அடக்குமுறைகளையும் ஒளிபரப்ப, உள்ளூர் கேபிள் கன்னல் இப்படித்தான் நாசூக்காக இருட்டடிப்பு நடத்தியிருக்கிறது. இந்த மாதிரி ஒரு மாநிலத்தின் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் குடியரசு நாயகர்களிடமே கைவசம் இருப்பதற்கு ஜான் மெகெயின் போராடி வருகிறார்.