Category Archives: மெக்கெய்ன்

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain

வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் – செல்வன்

செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:

3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?

கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.

உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.

பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.

அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.

நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.

4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?

நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.

இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.

5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?

ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.

பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.

மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.

நன்றி: செல்வன்.

தேர்தல் வாரம்: பொருளாதாரம் – இரண்டாம் விருந்தினர்

தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.

1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா?

சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..

முதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.

ஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.

  • டாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.
  • நாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.
  • லாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.

தனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.

2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.

வருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்

  • ஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.
  • டாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.

ஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது

தென்றல்: அமெரிக்க பங்குசந்தை – இறுதிப் பகுதி

முந்தைய பதிவுதென்றல்

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

Consumer Market ‘நல்ல படியாக’ வைத்துக் கொண்டாலே போதும். (அதை எப்படி நல்லபடியா வைத்துக் கொள்வது…??)

4. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?

ஆண்டிற்கு 250,000 டாலர்க்கு மேல் வாங்கும் குடும்பங்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்பது ஒபாமா தரப்பு திட்டம். அதுவும் மெக்கெய்னின் தரப்பு கூறப்படுகின்ற ‘வசதியுள்ள பெருங்குடி மக்களுக்கு’ கொடுக்ககூடிய வரி சலுகைகளைதான் ஒபாமா எதிர்கிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், நாட்டின் பெரும்பான்மையான வரிபணம் கிடைப்பது அந்த குறைவான சதவீதமுள்ள ‘பெருங்குடி மக்களிடமிருந்து’ தான் என்று அரசாங்க குறிப்பு சொல்கிறது. ‘அதனால் அவர்களின் வரிச்சுமையை 3-4% குறைத்தால் என்ன?’ என்பது மெக்கெய்னின் தரப்பு கேள்வி!.

ஒபாமாவின் திட்டம் பெரும்வாரியான குடும்பங்களின் வரிச் சுமையை ஓரளவு தளர்த்த உதவும். அதனால் ஒபாமா திட்டம் சிறந்ததாகவே (எனக்கு) தோன்றுகிறது.

5. முதியவர்களுக்கான வரி: (An Updated Analysis of the 2008 :: Presidential Candidates’ Tax Plans – Tax Policy Center and Urban Institute) அறுபத்தைந்து வயதைத் தாண்டியோர் $50,000த்திற்கு குறைவாக சம்பளம் ஈட்டினால், முழுமையான வருமான வரிவிலக்கு தருவதாக ஒபாமாவின் கொள்கை தெரிவிக்கிறது. அப்படியானால் குழந்தை குட்டியோடு உழலும் சாதாரணக் குடிமக்கள் குடும்பம் இந்த சலுகைக்கு உகந்தவர்கள் இல்லையா? ஏற்கனவே முதியவர்களுக்கு பல்வேறுவிதமான தள்ளுபடி கிடைக்கும் இன்றைய நிலையில் இது போன்ற கேரட்களும் தேவைதானா?

சுட்டிக்கு நன்றி! இதுல (An Updated Analysis of the 2008 – Presidential Candidates’ Tax Plans: Revised August 15, 2008) அருமையான தகவல்கள் இருக்கு!

“அரசியல இதலாம் சகஜம்தான்” னாலும் மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற சலுகைகள் வரவேற்கதக்கதே!!

அமெரிக்க பொருளாதாரம்: அலசல் – தென்றல்

முந்தைய இடுகை

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

ஆகா…இந்த கேள்விக்குதான் ‘பெரிய பெரிய தலைகளே’ மண்டை பிச்சிகிட்டு இருக்கிறாங்க!!

சமீபத்திய பங்குச்சந்தை/நிதி நிர்வாகங்களின் சரிவு, 700 பில்லியன் டாலர் தேவை ….

இந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணம் என்னனு பார்த்தா எனக்கு தோன்றியது …… பேராசை – சாமான்யமிடமிருந்து பெரிய நிர்வாகம் வரை..

5, 6 வருடத்திற்கு முன், கேக்குறவுங்களுக்கு எல்லாம் கடன். ஒரு சென்ட்கூட கையில் இருந்து குடுக்காம வீடு வாங்கலாம். அதுவும் 3-4 வருடத்திற்கு, interest only loan. ‘ஆடி/சிறப்பு தள்ளுபடி’யா 3.5% வட்டி விகிதம் !! வருசத்திற்கு 40000, 50000 டாலர் சம்பாதிக்கிறவன், ஆரம்பத்தில மாசத்துக்கு 2000 mortgage கட்டினா போதும். வாங்குறவனுக்கு தெரியாத என்ன, ‘3-4 வருசத்திற்கு அப்புறம் வட்டி கூடும், அதிகமா வட்டி கட்ட வேண்டி வரும்..நம்ம வரம்புக்கு மீறி எப்படி கட்டுறது’னு.. அவன் கணக்கென்ன, ‘3-4 வருசத்தில வீட்டோட விலை அதிகமாச்சினா, நல்ல இலாபத்துக்கு வித்துட்டு போயிடலாம்.’

வங்கிகள், நிதி நிர்வாகங்களின் கணக்கு 3-4 வருடத்தில் வீட்டின் விலை கூடும், வட்டி கூடும்….. நல்ல வசூல்!

மூன்று வருடத்தில். 3.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம், 6, 6.5. சதவீதமானது. மாசத்துக்கு 2000 mortgage கட்டியவன் இப்பொழுது 3500 கட்ட வேண்டும். வீட்டை விக்கலாம்னா, வாங்கின விலையை விட கம்மி! அதுவும் வாங்க ஆளில்லை! Foreclosures!

அந்தப் பக்கம், ஃபேனி மே, ஃபிரெட்டி மேக், லெஹ்மன் பிரதர்ஸ் ..திவால்!!

இதற்கு வங்கிகள், நிதி நிர்வாங்களின் விதிமுறைகள், சட்ட திட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
திவால் ஆகிற நிதி நிர்வாங்களை அரசாங்கம் காப்பதறதுண்ணா. நாளைக்கு Ford, GM, Staples (!) க்கும் இதே மாதிரி நிலைமை வந்தா அரசாங்கம் ஓடி வருமா?

சரி.. இந்த நிலையில் இருந்து நிமிர யார் தேவை…!!

ஓபாமா நல்ல பேச்சாளர். ஆனால் ராஜ தந்திரியா… இப்போதைக்கு தெரியாது! ஏன்..?

செனட்ரா இருந்து அவர் செய்த சாதனைகள் எதுவும் பட்டியலிடப் படவில்லை!

He is not a good lobbyist! இப்பொழுது அவருக்கு பக்க பலமாக இருக்கும் அவருடன் இருப்பவர்களும் அப்படியே! ஓபாமா, இதுவரை lobby பண்ணி சாதிச்சதா ஒண்ணுமில்லை.

அப்புறம் அவருடைய அனுபவமின்மை….எதிர்காலத்தில் இதுவே பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், ஜோ பிடன் தேர்வு விவேகமானது!

பெரிய நிர்வாகங்களை (eg: Exxon-Mobil) லாம் பிடி பிடினு பிடிக்கிறார். இப்படி அவர் ‘தைரியமா’ பேசுவதற்கு காரணம், பெரிய பெரிய பணசுனாமிகளின் தாக்கம் இவர் மேல் நேரிடையாக இல்லை. எட்டு வருடம் இவருடைய கட்சி அதிகாரத்தில் இல்லாததும் இவருக்கு ப்ளஷ்.

அந்தப் பக்கம், மெக்கெய்ன்… நல்ல அனுபசாலி! இருபது ஆண்டுகள் செனட்டில் இருந்த அனுபவம், பல திட்டங்களில் ஒருங்கிணைத்த விதம், பணமுதலைகள், யூதர்கள், கிருஸ்தவர்களின் பக்க பலம்…… இதலாம் சேர்த்து அவரை ஒரு நல்ல lobbyist உருவாக்கி இருக்கிறது. அதனால், மெக்கெய்ன் வந்தால் நல்லது!

3. பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு: இதையெல்லாம் குறித்து ஒபாமாவோ மகயினோ கவலை கொள்கிறார்களா? பொருட்டாக மதித்து ஏதேனும் ஆக்கபூர்வமான திட்டங்கள் வைத்துள்ளார்களா?

தேர்தல் வாரம்: கொள்கை விளக்கம் – பொருளாதாரம்

அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.

தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.

இந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:


முதலில் டிஸ்கி;

(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல! தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்!!

1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? எந்த அம்சங்கள் கவர்ந்தது?

இப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.

‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….

  • வருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.
  • $80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு
  • 10% Morgage interest வரி விலக்கு
  • கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு
  • ராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்
  • எல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்

… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…

மெக்யன் தரப்பிலிருந்து

  • வேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்
  • Single Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்
  • இணையதளத்திற்கான வரி விலக்கு
  • புது கைத்தொலைபேசிக்கான வரிவிலக்கு
  • கோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு

இதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…?!!

2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?

ஒபாமா – ஆள வந்தான் வழியில் பாடினால்

இன்றைய செய்திகளில், அலசல்களில் –

எல்லாம் சரியாய்த்தான் இருக்கிறது, ப்ராட்லி விளைவு மட்டும் இல்லாமலிருந்தால் அடுத்த அமேரிக்க அதிபராக ஓபாமா இன்னமும் ஆறு நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவாரென்பதே ஊடகங்களின் முக்கியப் பேச்சு.

ப்ராட்லி விளைவு (Bradley effect) –

1982 ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் எல்லோராலும் வென்றுவிடுவாரென்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்பரான லாஸ் ஏஞ்சலஸ் நகர மேயரான டாம் ப்ராடலி, கருத்துக் கணிப்புக்களுக்கு மாறாக எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வெள்ளை வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

ஆளவந்தான் படப் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

வைரமுத்துவும், கமலும் மற்றும் ஒபாமாவும் மன்னிக்க.

கறுப்பு பாதி வெள்ளை பாதி
கலந்து செய்த கலவை நான்!

வெளியே தெளிவு உள்ளே கவலை
தோற்க இயலா நிலையில் நான்!

நிறவெறி கொன்று நிறவெறி கொன்று
தேர்தலில் வெல்லப் பார்க்கின்றேன்!

ஆனால்
ப்ராட்லி கண்டு தூக்கம் இழந்து
தோல்வி பயம் வருகிறதே!

அமேரிக்காவே! அமேரிக்காவே!
எனக்கே ஒட்டு தருவாயா?
நிறவெறி கொன்று மெக்கெய்ன் தோற்று
என்னை வெல்லச் செய்வாயா?

-இது போதுமென்று நிறுத்திக் கொள்கிறேன்.

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்!

வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நான்!

மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றேன்!

ஆனால்……….
கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே!

நந்த குமாரா! நந்த குமாரா!
நாளை மிருகம் கொள்வாயா?
மிருகம் கொன்ற எச்சம் கொண்டு
மீண்டும் கடவுள் செய்வாயா?

ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்!

தேர்தல் செலவுகளைக் கணக்கில் கொண்டுவருவதே நம் ஊர்த் தேர்தலுக்கும் அமெரிக்கத் தேர்தலுக்குமுள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று. அமெரிக்க பெடரல் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,  கடந்த 2004ஆம் தேர்தலுக்கு மொத்தமாக தேர்தல் பிரச்சாரக் குழுக்களால் வசூலிக்கப்பட்ட தொகை 800 மில்லியன் டாலர்கள், ஆனால் இந்த தேர்தலின் வசூல் ஏற்கனவே ஓரு பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது.

மெக்கெய்ன் மற்றும் ஒபாமா இருவரின் தேர்தல் பிரசாரக் குழுக்களின் அக்டோபர் 15 வரையிலான அதிபர் தேர்தலுக்கான வசூலும் செலவுகளும்,

மொத்த வரவு மொத்த செலவு கையிருப்பு பணம் கடன் நிலுவை
ஜான் மெக்கெய்ன் $368,609,473 $302,090,668 $66,991,256 $2,016,924
பராக் ஒபாமா $521,869,310 $498,894,922 $65,762,929 $2,302,457

( as per Federal Election Commision’s data :- http://www.fec.gov/finance/disclosure/srssea.shtml)

மேலும் FEC-யின் தகவலின்படி,  இந்த தேர்தலில் ஜீஸஸ் பிலால் இஸ்லாம் முகம்மது (MUHAMMED, JESUS BILAL ISLAM ALLAH) என்ற வேட்பாளர் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கே சொடுக்கவும்  http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004070

இது தவிர நியூஜெர்சியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ராஜேஷ் சீனிவாச ராகவன் என்ற நம்ம ஊர்க்காரர் ஒருவரும் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக தனது பெயரைப் பதிவு செய்துத் தனது பணத்தில் $97 செலவு செய்த பின் (மொத்த செலவு $1097) அவர் தனது வேட்பாளர் பதிவையும்  விலக்கியிருந்திருக்கிறார்!

http://herndon1.sdrdc.com/cgi-bin/cancomsrs/?_08+P80004336

FEC தவிர சில தன்னார்வக் குழுக்களும், தேர்தலுக்கான செலவினங்களைக் கண்காணித்து வருகின்றன, ஓபன்சீக்ரெட்ஸ்.காம் என்பதும் அதில் ஒரு குழு, அவர்களின் தளத்தில்

2008 அதிபர் தேர்தல் தொடர்பான பக்கம் http://www.opensecrets.org/pres08/index.php

2008 அதிபர் மற்றும் அவைத் தேர்தலுக்கான பக்கம் http://www.opensecrets.org/overview/index.php

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்: