Category Archives: செவ்வி

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்

அரசியல் பங்களிப்பு, தமிழர் நலன்: வெளிநாடுகளில் தெற்காசியர்கள் – வெங்கட்

2. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் கனடா அரசியலில் தெற்காசியர்கள் பெருமளவில் ஈடுபடுவதாக உணர்கிறேன். உண்மையா? இதனால் தமிழர்களின் நலன் முன்னெடுத்துச் செல்லப்படுகிறதா? அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினரின் தேர்தல் பங்களிப்பு குறித்த உங்கள் எண்ணங்கள் ப்ளீஸ்…

உன்மைதான். தெற்காசியர்களின் பங்கேற்பு கனேடிய அரசியலில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இதில் தாராளக் கொள்கைகளைக் கொண்ட புதிய ஜனநாயாகக் கட்சியின் பங்கை மிகவும் பாராட்டியாக வேண்டும். (தலைவர் ஜாக் லெய்ட்டனின் மனைவி சீன வம்சாவளி ஒலிவியா சௌ). அதிக அளவில் சிறுபான்மையினரை நிறுத்துவது இவர்கள்தான்.

அதற்கு அடுத்தபடியாக லிபரல்கள். பஞ்சாபியனர் அதிகம் வசிக்கும் (சொல்லப்போனால் பஞ்சாபியர் மாத்திரமே வசிக்கும்) டொராண்டோவின் வடமேற்குப் புறநகர் ப்ராம்ப்டனில் (Brampton) ரூபி பல்லா தற்பொழுதைய லிபரல் எம்.பி. அழகுப்போட்டி ஒன்றையே மூலதனமாக அரசியலில் இவர் வந்தபொழுது எனக்கு நம்பிக்கையில்லை; ஆனால் தற்பொழுது தொகுதியின் அடிப்படை நலன்களை நல்ல முறையில் பாதுகாக்கிறார். இன்னும் சில பஞ்சாபியினர் எம்.பிக்களாக இருக்கிறார்கள், (ஒண்டாரியோ, அல்பெர்ட்டா, ப்ரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில்). பஞ்சாபியரைப் போலவே பாக்கிஸ்தானியர், இரானிய வம்சாவளியினர் என்று சிலரும் எம்பிக்களாக இருக்கிறார்கள். சீனர்களைச் சொல்லவே வேண்டாம்.

வலதுசாரி கன்ஸர்வேட்டிவினர் பொதுவில் அமெரிக்க ரிபப்ளிக்கன் கட்சியைப் போலத்தான் இவர்கள் கூட்டத்தில் பொற்றலை (Blond) இல்லாதவர்கள்தான் சிறுபான்மை. கறுப்பு, சீனர், இந்தியர் இவர்கள் யாராவது தென்பட்டால் அதிசயம்தான். ஆனால் சமீபத்தில் பார்க்க நன்றாக இருப்பதால் ஸ்டீபன் ஹார்ப்பரின் எல்லா போட்டோக்களிலும் பின்னால் நீல டர்பனை அணிந்த ஒரு சீக்கியரும், இடுப்புக்குக் கீழே ஒளிந்துகொண்டு ஒரு சீனரும் தென்படுகிறார்.

ப்ளாக் க்யெபெக்வாவுக்கு இந்த நாடகமாடும் தேவைகூட கிடையாது.

ஆனால் தமிழர் யாரும் இன்னும் மத்திய அரசியலில் முதலடியைக் கூட எடுத்து வைக்கவில்லை. இங்கிருக்கும் இந்தியத் தமிழர்களின் அதிகபட்ச சமூக நடவடிக்கை கர்நாடக சங்கீதக் கச்சேரிக்குப் போவதுதான். எனவே அவர்களை ஒதுக்கிவிடலாம்.

டொராண்டோ பெருநகர் பகுதியில் மாத்திரம் இரண்டரை லட்சம் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சமூகத்தில் எல்லா அடுக்குகளிலும் இடம்பெற்றிருக்கிறார்கள்; மருத்துவர், வழக்கறிஞர், தொடங்கி மாஃபியா வரை எல்லாமே உண்டு. ஆனால் ஜனநாயக முறை அரசியலில் இவர்கள்க்கு இன்னும் இடமில்லை. இதற்குக் காரணம் கடின உழைப்பாளிகள் பலருக்கு அரசியல் தேவையற்றதாக இருக்கிறது. அரசியலுக்கு வரும் பிற தமிழர்கள், தமிழர் நலனை மாத்திரமே முன்வைக்கிறார்கள். (அதாவது விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை). இது தொகுதியில் இருக்கும் பிற சமூகத்தினரின் ஒரு ஓட்டுகூட அவர்களுக்குக் கிடைக்காமற் செய்துவிடுகிறது.

கனேடியத் தமிழர்கள் பெரும்பாலும் உள்ளார்ந்த பார்வையையே கொண்டவர்கள், இதை உதறிவிட்டு கனேடியப் பொதுநலனை முன்னிருத்தி அதன் வாயிலாகத் தமிழர் நலனை முன்னெடுத்துச் செல்லாதவரை இவர்களுக்கு மத்திய அரசில் என்ன, உள்ளூர் மாநகராட்சித் தேர்தலில்கூட ஒரு இடமும் கிடைக்கப்போவதில்லை. பஞ்சாபியனர் இதைத் திறமையாகச் செய்கிறார்கள், பாக்கிஸ்தானியர் கூட. ஆனால் 2.5 லட்சம் தமிழர்களில் இன்னும் ஐந்து வருடங்களிலாவது உள்ளூர் நகர்மன்ற உறுப்பினராகும் வாய்ப்புகூட யாருக்கும் இல்லை என்பது வருத்தமான நிலைதான்.

அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பைக் குறித்து என்னைவிடத் திறமையாகக் கருத்து சொல்லப் பலரும் இருக்கிறார்கள். நான் பார்த்தவரை அரசியலில் ஈடுபடும் பல இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் தங்கள் பின்புலத்தின் காரணமாகவோ, அதன் நலனுக்காகவோ இல்லை. அதையும் மீறித்தான் அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். (Indians are not in American politics because of it, they are there despite of it.) தனிப்பட்ட நலன்கள் மாத்திரமே அவர்கள் முன்வைப்பது. பாபி ஜிந்தால் ஒருவர்தான் ஓரளவுக்கு அமெரிக்க அரசியலோடு இயைந்துபோகிறார் என்று தோன்றுகிறது.

3. டோக்யோவிலும் தாங்கள் வசித்ததுண்டு அல்லவா? ஜப்பான் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுப்பு எவ்வாறு வேறுபடுகிறது?

ஜப்பானிய அரசியல் அமெரிக்கக், கனேடிய, ஏன் இன்னும் பல ஜனநாயக முறைகளிலிருந்து வேறுபட்டது.

1950களில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இரகசியமாகச் செலவிட்டு தஙகள் சித்தாந்தங்களை ஜப்பானிய மண்ணில் வேரிடச் செய்தார்கள். இதே ரீதியாக பாக்கிஸ்தான், சிலி, ஈரான் உட்பட பல நாடுகளில் அவர்கள் கொடுங்கோலர்களை வளர்ந்த்தெடுக்க ஜப்பான் கொஞ்சம் தப்பித்துக் கொண்டு ஜனநாயகத்தைப் பற்றிக் கொண்டது. 1955 தொடங்கி இன்றுவரை ஜப்பானில் (ஒரு சிறிய இடைவெளியைத் தவிர) லிபரல் டெமாக்ரடிக் என்று சொல்லப்படும் ஒரே கட்சிதான் ஆண்டுவருகிறது. இது கலவை இடது-வலது கட்சி.

தனியார் தொழில் முன்னேற்றம் போன்ற விஷயங்களில் ரிபப்ளிக்கன் கட்சியை ஒத்தது இதன் கொள்கை, ஆனால் வலுவான, எல்லாவற்றிலும் தலையிடும் மத்திய அரசு, இலவசப் படிப்பு, மருத்துவம், ஓய்வுப் பாதுகாப்பு போன்ற பல விஷயக்களில் அமெரிக்க டெமாக்ரட்களை ஒத்தவர்கள். அதைத்தவிர பொதுவில் ஜப்பானின் கலாச்சாரம் இடதுசாயும் லிபரல் கலாச்சாரம்தான், இங்கே கருக்கலைப்பு எதிர்ப்பு, வலுவான ராணுவம், எல்லோரும் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடலாம் போன்ற சித்தாந்தங்கள் வேகாது.

ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (ஜியூ மின்ஷுதோ) உட்கட்சி ஜனநாயகம் என்ற வகையில் மிகவும் செழிப்பாகவே இருக்கிறது. ஜியூவின் உள்ளே பல பிரிவுகள் உண்டு. இவர்களுக்குளே பூசல் மிகவும் பிரபலம். 55 தொடங்கி ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட 25 பிரதமர்கள் என்று ஆட்சி-ஆட்சிக்கலைப்பு ஆட்டங்கள் ஜப்பானில் சாதாரணம். ஆனால், ஜியூக்கள் மற்றவர்கள் தலையெழும்பச் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் திறமையில் உன்னதம் கண்டவர்கள். கட்சியில் அடுக்கு முறைகள் வலுவானவை.

இதையெல்லாம் தாண்டி ஒபாமா மாதிரி ஒருவர் ஜப்பானில் வந்துவிட முடியாது.

அடுக்கு முறையில் படிப்படியாக மேலெழும்பி வருபவர்கள்தான் பிரதமர்கள். 1999-2001 ல் ஜப்பானில் நான் வசித்த பொழுதே யோஷிரோ மோரி, ஜுனிச்சிரோ கொய்ஸுமி, ஷின்ஷோ அபே போன்றவர்களின் பெயர்கள் கெய்ஸோ ஒபூச்சிக்கு அடுத்தபடியாக அடிபட்டன. இவர்கள் அனைவரும் பின்னால் ஒவ்வொருவராக பிரதமர்கள் ஆனார்கள். அப்பொழுது மேலடுக்கில் இருந்ததில் இன்னும் பிரதமர் ஆகாமல் இருப்பவர் டோக்கியோ மேயர் இஷிகாரா ஒருவர்தான். எனவே ஜப்பானிய ஜனநாயகம் என்பது லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள்ளே ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட வரிசையில் நகர்ந்து இலக்கை அடைவதுதான்.

பெண்களுக்கு ஜப்பானிய அரசியலில் இன்னும் சொல்லிக்கொள்ளும் இடமில்லை.

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

தொடரும்…