ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்து


அம்மா ஓர் அர்த்த ராத்திரி எழுத்தாளர். எல்லோரும் உறங்கிய பிறகு எழுதுவது அவருக்கு உகந்த நேரம். கணவன் காபி கேட்க மாட்டார். பிள்ளை பிஸ்கெட் தொணப்ப மாட்டான். கடைக்கான வேலைகள் முடிந்து ஏறக்கட்டப் பட்டிருக்கும். சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, விருந்தினர் வருவது, துணி துவைப்பது, சாமி கும்பிடுவது என்று கடமைகள் இடையூறு செய்யாது.

பக்கத்தில் மிக்சர். பிற்காலத்தில் மேரீ பிஸ்கெட். சிந்தனையை எழுத்தில் வடிக்க கொறிப்பதற்கு ஏதேனும் ஒன்று.

அவர் இராப் பிசாசு. அதற்காக காலையில் தாமதமாக எழுந்திருக்க மாட்டார். எனக்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து, வீடு பெருக்கி, காய்கறி நறுக்க ஆரம்பித்திருப்பார்.

எனினும், அவருக்கு எழுத வேண்டும். ஒரு திட்டத்தை ஆரம்பித்து விட்டால் அதை திருப்திகரமாக முடிக்கும் வரை ஓட்டம். மூடு இருந்தால் இருபது பக்கம். உடல் ஒத்துழைக்காவிட்டால் அன்றைய தினத்திற்கு நாலைந்து பக்கமாவது விஷயம் நகர வேண்டும்.

அவரின் பிசாசு என்னிடம் ஏற வேண்டும் என்பது என் அவா. மிக்சர் உண்டு. மாரியும் உண்டு. தமிழகத்தைப் போல் மின்வெட்டுகள் இல்லாத இரவும் உண்டு.

ஏக சிந்தனை கிட்ட என்ன வேண்டும்?

ஆயிரம் கொக்குக்குக் கண்ணியை வைத்துநான்
அப்பாலே போயொரு மிப்பா யிருக்கையில்
மாயிரும் காகங்கள் ஆயிரம் பட்டு
மறைத்து விறைத்துக் கிடப்பது போலவே
காயம் ஒடுங்கிக் கிடந்தது கண்டுநான்
கண்ணி சுழற்றி நிலத்திலே வைத்தபின்
சேயிழை தன்பொருட் டாலேபஞ் சாக்கரம்
செபித்த மன்னவன் பாவம்போ னாற்போலப் – போ

குற்றாலக் குறவஞ்சி 68 Kutralak kuravanji 68

ஆயிரம் கொக்குக்குக் கண்ணி வைத்தேன்
அப்பால் சென்று பதுங்கி இருந்தேன்.
அதில் ஆயிரம் காக்கைகள் பட்டுச் செத்து விறைத்துக் கிடப்பது போல் தோன்றியது.
அதைக் கண்ட நான் என் கண்ணிவலையைச் சுற்றி வைத்தேன்.
பெண்ணால் தவ வலிமையை இழந்த விசுவாமித்திர மன்னவன் மீண்டும் “நமசிவாய” பஞ்சாக்கர மந்திரம் ஓதியது போலச் சுருட்டி வைத்தேன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.