பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஏன் எடுத்தார்கள்?


பத்து நாளுக்கு தினம் ஒரு காரணம் போட திட்டம். உங்கள் உதவியைக் கோருகிறேன்.

முதல் காரணம் எளிது:

கல்கி கதையின் போதாமைகளைச் சொல்லத்தான் இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை யானைக்காலாக யாரும் படிக்க முடியாத அளவு பக்கங்களாக பாகங்களாக இருந்ததை திரைப்படமாக்கியதால் இப்போது எல்லோரும், “இந்தக் கதை மொக்கையா இருக்கே!” என ஊர் எல்லாம் அறியும்படி தன் ஆனைக்கால் கொண்டு உதைத்து விட்டார் மணி ரத்னம்.

ஜெயமோகனுக்கு எப்போதுமே தனக்கு மட்டுமே அரியாசனம் வேண்டும். அது சுஜாதா, ஜெயகாந்தன், கல்கி போன்றோரால் சரியாசனமாக இருந்தது. கூடவே மும்மூர்த்திகள் என்று எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற சமகாலத்தவரும் போட்டியில் இருந்தார்கள். விஷ்ணுபுரம் எழுதி ஒருவரை சாய்த்தார் என்றால், விஷ்ணுபுரம் விருது கொடுத்து இன்னொருவரை சாய்க்கிறார்.

இப்பொழுது கல்கியின் போதாமைகளை உணர்த்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார் ஆசான். அதற்கான பிரும்மாஸ்திரம் — பொ.செ.1, 2, 3…

ஆதித்த கரிகாலனுக்கு தோல்வியைக் கண்டு பயம் என்பதை கல்கி உணர்த்துவார். படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தை பார்த்தால் வடிவேலு மாதிரி சிரிப்பு வருகிறது.

யானை ராணியை மாந்திரீகமாக, மாயாவாதமாக, பூடகமாக கல்கி உலவ விடுவார். இங்கே மேக்கப் இல்லாத ஐஷ்வர்யா என்று கெக்கலிப்பு வருகிறது.

ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் தூணிலும் இருப்பான், தூணாகவும் இருப்பானாக மிளிரும். இங்கே நிஜமாக நகைச்சுவைக்காக உலவுகிறது.

கல்கியைக் கொண்டாட வேண்டுமானால் சமரசங்கள் இல்லாமல் திரைக்குக் கொணர முயன்றிருக்க வேண்டும்.

மஹாபாரதம் எழுதிய போது எவ்வாறு தன் திரைவடிவத்தை ஏற்க மறுத்த சன் டிவியை உதாசீனம் செய்தாரோ… அது மாதிரி!

ஆனால், ”கடல்” போல் உருப்படியாக எடுத்தால் எவ பார்ப்பாள்? எனவே, திருடா… திருடா… பகுதி இரண்டை #PS1 ஆக எடுத்து விட்டார்கள்.

சிவாஜி என்றால் ரஜினியின் படம் என நிறுவியது ஷங்கர்.

பொன்னியின் செல்வன் என்றால் ஜொள்ளுச்சோழர் படம் என நிறுவுவது – 1ஸ்ட் ரீஸன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.