டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct


இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

One response to “டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

  1. பாபா இது என்ன திடீரென?

    மீண்டும் சொல்கிறேன். சின்மயி, கார்த்தி சிதம்பரம், பால் தாக்கரே, ஏர் இந்தியாகாரர்கள் ஆகிய அனைவர் மீதும் 66ஏ இல்லை என்றாலும் இதே நடவடிக்கை காவலர்களால் மற்ற இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளில் எடுத்திருக்க முடியும். தவறு 66ஏவில் இல்லை என ஏன் யாரும் உணர மாட்டேன் என்கிறார்கள் என்பது புரியவில்லை.

    சிவாஜி பற்றி எழுதினார் என்று பெங்களூர் பொறியாளர் மும்பை காவலர்களால் சில வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டாரே, அப்போது 66ஏ என்ற பிரிவே ஐ டி சட்டத்தில் கிடையாது. பார்க்க எனது சைபர் கிரைம் பற்றிய கட்டுரை http://marchoflaw.blogspot.in/2009/09/blog-post_23.html

    இணைய உலாவிகள், அச்சு மற்ற ஊடகங்களுக்கும் இணையத்திற்கும் வித்தியாசம் உண்டு என்று தவறாக நினைப்பதன் விளைவுதான், இப்புரிதல்கள். இணைய ஊடகத்தினை முன்பு பலர் கண்டு கொள்வதில்லை. தற்பொழுது கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவ்வளவுதான்

    ஆனால் இணையத்திற்கு உள்ள அட்வாண்டேஜ், அமெரிக்க பிரஜை ஒருவர் இந்தியா சம்பந்தப்பட்ட அவதூறை பரப்பி தப்பித்துக் கொள்ள முடியும்.
    ஆயினுன் மொரார்ஜி தேசாய் சேய்மூர் ஹெர்ஷ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததைப் போல தொடரலாம். யாருக்கு இயலும்.

    ஸ்டார் மூவிஸ் முதன்முதலாக இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட பொழுது உடலுறவு காட்சிகள் நிறைந்த சாப்ட்போர்ன் வகை படங்களை திரையிட்டார்கள். ஏன் இப்போது இல்லை? அதுதான் இங்கும் விளையப் போகிறது

    ஏற்கனவே எழுதி வைத்த அவதூறுகள் கூட விட்டு வைத்திருந்தால் ஆபத்துதான்!

    பிரபு ராஜதுரை
    25/11/12

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.