ஜாகீர் உசேன், திருவிடைமருதூர்.
திரையுலகில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தரப் பகைவனுமில்லை என்பது உண்மையா?
ஒருநாள்… சென்னை தூங்கிப்போன பின்னிரவில் பாரதிராஜா என்னிடம் ‘ஒப்புச்சொல்லிப்’ புலம்பினார். ‘‘கமல்ஹாசன் என்னைப் புண்படுத்திவிட்டார். இனி ஒட்டுமில்லை உறவுமில்லை’’ என்றார். ‘‘பெரிய கலைஞர்கள் பிரியக்கூடாது; சேர்த்துவைக்கட்டுமா’’ என்றேன். ‘‘இனிமேல் செத்த இழவில் கூட இருவரும் சேரமுடியாது’’ என்று உடைந்த குரலில் சொன்னார். கண்ணில் எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் கதவடைத்துக் கொண்டது கண்ணீர். ‘‘உங்களுக்கு உறவில்லாத இடத்தில் எனக்கும் உறவில்லை’’ என்று தேற்றினேன்.
எம்.ஜி.ஆரோடு எனக்கு ஏதொரு பிணக்கும் இல்லையென்றபோதிலும், கலைஞர் மீது கொண்ட காதலால் (பொது இடத்தில் தவிர) அவரைக் கடைசிவரை சந்திக்காமற்போனது மாதிரி, பாரதிராஜா மீது கொண்ட பாசத்தால் கமலோடு கொண்ட தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டேன். ஒரு செயற்கை இடைவெளி சிருஷ்டித்துக் கொண்டேன். அதனால் அவருக்கல்ல எனக்குத்தான் இழப்பு என்றபோதிலும் எட்டியே இருந்தேன்.
சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நட்சத்திர விடுதியில் மின்னுயர்த்தி வரட்டும் என்று தரைத் தளத்தில் காத்திருக்கிறேன். கதவு திறக்கிறது.
திறந்தால்…
ஒருவர் தோளை ஒருவர் கட்டிக்கொண்டு அதிரும் சிரிப்போடு வெள்ளைக் காரக் காதலர்கள் போல விளையாடிக் கொண்டே இறங்குகிறார்கள் பாரதிராஜாவும் கமல்ஹாசனும். என்னைப் பார்த்து, ‘என்ன கவிஞரே சௌக்கியமா?’ என்கிறார்கள்.
கீழே வந்த மின்னுயர்த்தி மேலே செல்வதும் அறியாமல் நின்ற நெடுஞ் சுவராய் நின்றேன் நான்.
இதிலிருந்து என் னென்ன பாடங்கள் பெறலாம் என்பதை உங்கள் மூளையின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
————————————————————————————-
ஜெயசீலன், பண்ணைக்காடு.
வாலைக்குமரியடி என்று பாரதியார் பாடியிருக்கிறாரே அது என்ன வாலைக்குமரி?
பிராயத்திற்கேற்பப் பெண்களைப் பிரித்து வைத்தது காமசாஸ்திரம்.
வாலை _ தருணி _ பேரிளம்பெண் _ விருத்தை என்று நான்கு வகையாம்.
- 16 வயது வரையான பெண் வாலைப் பெண்ணாம்;
- 16 முதல் 30 வரை தருணிப்பெண்ணாம்;
- 30 முதல் 55 வரை பேரிளம் பெண்ணாம்;
- 55_க்கு மேல் விருத்தையாம்.
ஐப்பசி _ கார்த்திகை கூதிர்காலமும், ஆனி _ ஆடி வேனிற்காலமும் கூடி மகிழ்தல் கோடி இன்பமாம் வாலைப்பெண்களுக்கு.
மார்கழி _ தை முன்பனிக்காலமும், மாசி _ பங்குனி பின்பனிக் காலமும் கலவிக் காலமாம் தருணிப்பெண்களுக்கு.
ஆவணி _ புரட்டாசி கார்காலமும், சித்திரை _ வைகாசி இளவேனிற்காலமும் பேரின்பம் பெருக்குமாம் பேரிளம் பெண்களுக்கு.
இதில் வேடிக்கை என்னவென்றால்,
சாஸ்திரம் படிக்கும் காலத்தில் சௌகரியம் அமைவதில்லை; சௌகரியம் அமையும் காலத்தில் சாஸ்திரம் தேவையில்லை.
————————————————————————————-
எஸ்.ஹரீம், திருநள்ளாறு.
கலைஞர் சொன்ன நகைச்சுவை நிறையச் சொல்லியிருக்கிறீர்கள்; கலைஞரைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லுங்களேன்…
என் நண்பன் ஒருவன் நன்றாய்ச் சொன்னான். இந்தியக் கிரிக்கெட் அணியும் கலைஞர் பல்லும் ஒன்றுதானாம்; ஆடவே ஆடாதாம்.