மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் கௌஸ்பாஷா
மதுரை, செப். 20: மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.கௌஸ்பாஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி, அவர் தமது மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசின் சாதனைகளே எனது வெற்றிக்கு வழி வகுக்கும்.
மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இத் தொகுதியில் செயல்படுத்துவதாக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன். கோயில் மாநகரான மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரவும், அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
நகரில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கொசுத் தொல்லையைப் போக்கவும், போக்குவரத்து நெரிசலைப் போக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
இத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் மாதத்துக்கு ஒரு முறை வார்டு வாரியாக மக்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கட்சித் தலைவர் மு.கருணாநிதி, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், மு.க.அழகிரி, கூட்டணி கட்சியினரின் ஆதரவுடனும், பொதுமக்கள் ஆதரவுடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் எஸ்.எஸ்.கௌஸ்பாஷா.
மதுரையைச் சேர்ந்த கௌஸ்பாஷா (44) எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். இவர் திமுகவில் 1977-ம் ஆண்டு சேர்ந்து, கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்டத் தொண்டர் அணி துணை அமைப்பாளர், வட்டச் செயலர், மாமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.










