மதுரை மத்திய தொகுதியில் ராஜன் செல்லப்பா மனு தாக்கல்
மதுரை, செப். 19: மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் வே. ராஜன் செல்லப்பா மதுரையில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமது கட்சியின் மூத்த நிர்வாகிகள் புடைசூழ தமது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் எஸ். மூக்கையாவிடம் அவர் தாக்கல் செய்தார்.
மாற்று வேட்பாளர்: மாற்று வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கே.துரைப்பாண்டி மனுத் தாக்கல் செய்தார். பின்னர் கார்களில் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு ராஜன் செல்லப்பா மாலை அணிவித்தார்.
நிச்சயிக்கப்பட்ட வெற்றி: வேட்பு மனுத் தாக்கல் செய்தபின் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்: அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அதிமுக தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தவர். மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தவர்.
பி.எல். பட்டதாரியான இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து அதிமுகவில் கட்சிப் பணியாற்றிவந்த இவர், 1992-ம் ஆண்டு மதுரை மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அதிமுகவை விட்டு விலகி எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது ராஜன் செல்லப்பாவும் அதிமுகவில் இருந்து விலகினார்.
அதையடுத்து, 2001-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப் பணியாற்றி வந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது மதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகக் களம் காண்கிறார்.
முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது சொந்த ஊர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாக்கிலிப்பட்டி கிராமம். இவரது தந்தை பெயர் வேலுச்சாமி, தாயார் பாப்பாத்தி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ராஜசத்தியன் என்ற மகனும் உள்ளனர்










