சொதப்பல் விளையாட்டு – மாது
வெள்ளித்திரையில் ‘வேட்டையாடு விளையாடு‘ கண்டு களித்த சக பாஸ்டனார் மாதுவின் மடல்.
தலைப்பை படித்துவிட்டே புரிந்திருக்கும். வேறு தலைப்பு தோன்றவில்லை – மன்னிக்கவும். பலருக்கு புரிந்திருக்கும் வேட்டையாடு விளையாட்டை பற்றிய கட்டுரை என்று. விறுவிறுப்பாக ஆரம்பிக்கின்றது கதை. கொடூரமான கொலை. துப்புத் துலக்க வருகிறார் உயர் காவலதிகாரி. பிணத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்குப் பிறகு படம் நகர மறுக்கின்றது. ஏதேதோ காட்டி படத்தை கஷ்டப்பட்டு நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். (பார்வையாளர்கள் இஙகேயே வெளியே செல்லலாம்)
மிக வலுவான கதை முடிச்சை வைத்துக்கொண்டு, அதை அவிழ்ப்பதில் தவறியிருக்கிறார்கள். கொடூரக் கொலைகளுக்கு வலுவான காரணத்தையும், வில்லனையும் முன் வைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் (Hannibalன் படத்தை வில்லனின் அறைச் சுவற்றில் ஒட்டி விட்டால், வில்லன் ஒரு Hannibal Lecterஆக ஆகிவிடமுடியாது). வில்லனை கண்டுபிடிக்கும் விதத்தில் எந்தவித நுட்பமும் இல்லாதது ஒரு thrillerன் மிகப் பெரிய குறை. வில்லனின் கதாபாத்திரம் மிக மெலிதாக படைக்கப் பட்டிருக்கிறது. தலை நிறைய முடி வைத்துக் கொண்டு இரைந்து பேசினால் (பேசுவது பாதி புரியவில்லை) சைகோ வில்லனாக ஆகி விட முடியாது. நடு நடுவே வில்லன் தான் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக் உலகை சாவிலிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று வசனம் பேசுகிறார், எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை பார்வையாளர்களை சைகோ ஆக்கப் பார்க்கிறார்களோ?
கமல்-ஜோதிகா காதல் filler valueக்காக சேர்த்திருப்பது போலிருக்கிறது. ஏற்கனவே தோய்ந்த கதையே மேலும் தொய்ய வைக்கிறது. படத்தில் இருந்த சிறு விறு விறுப்பையும் போக்கி விடுகிறது.
கதாநாயகன் மிகவும் கஷ்டப்படாமல் வில்லனை கண்டுபிடித்து விடுகிறார். இங்கேயாவது படத்தை முடித்திருக்கலாம். பார்வையாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். “ஒ…இன்னும் இரண்டரை மணி நேரம் முடியவில்லையா இன்னும் கொஞ்சம் இழுப்போம்” என்று வில்லனை தப்பிக்க விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரிரு தமிழ்ப் படங்களைப் பார்த்திருந்தால் கூட முடிவை யூகித்திருக்க முடியும்.
படத்தில் ஒரிரு நிறையும் இருக்கிறது – ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.
இந்த படத்திற்கு ப்ராயச்சித்தமாக கமலும் கௌதமும் தனித்தனியாக ஒரு நல்ல படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகிற்கு சமர்ப்பிக்க கடவதாக.











