“பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்புவுக்கு எதிர்ப்பு
சென்னை, செப். 1: “பெரியார்’ படத்தில் மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு நடிகை குஷ்புவுக்கு பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்த விவரம்:
“மோகமுள்’, “பாரதி’ போன்ற தரமான படங்களை இயக்கிய ஞானராஜசேகரன் அடுத்ததாக நடிகர் சத்யராஜை வைத்து “பெரியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். வறட்சியான சிந்தனை, மலிவான ரசனைகளுக்கு அப்பாற்பட்ட இவரது படங்கள் யதார்த்த களத்திலிருந்து தடம் புரளாத வகையைச் சார்ந்தவை. ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து வியாபாரியாக இருந்து 29 அரசு பதவிகளை வகித்த ஈரோடு ராமசாமிக்குள் திடீரென சமூக பிரச்சினை நுழைந்தது எப்படி என்பதையும், சராசரி மனிதனாக இருந்த ஒருவர் பெரியாராக மாறியது எப்படி என்பது பற்றியும் சொல்வதுதான் “பெரியார்’ திரைப்படத்தின் கதை.
பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் மீண்டும் எடுத்துச் செல்லும் வகையில் படம் உருவாகி வருவதால் இந்தப் படத் தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. இதில் பெரியாரின் முதல் மனைவி நாகம்மை வேடத்தில் “தலைநகரம்‘ படத்தில் நடித்த ஜோதிர்மயி நடித்து வருகிறார். பெரியாரின் இரண்டாவது மனைவியான மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்பு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்கக் கூடாது என பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன்: தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மதிக்காமல் “கற்பு’ பற்றி தவறானதொரு கருத்தை வெளியிட்ட ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்?
மக்கள் வரிப்பணத்திலிருந்து தமிழக அரசு தந்த ரூ.95 லட்சம் நிதியுதவி பெற்ற படம் என்பதால் “பெரியார்’ படத்தில் குஷ்பு நடிக்க அனுமதிக்கக்கூடாது என்றார் வேல்முருகன் எம்.எல்.ஏ.
திருமாவளவன்: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “பெரியார்’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகையைத் திணிப்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. குஷ்பு நடிக்க பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தால் அது ஒரு களங்கமாகிவிடும். எனவே குஷ்புவை படத்தில் தவிர்ப்பது நல்லது என்றார்.
நடித்தே தீருவேன்: குஷ்பு: “பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிக்க நான் தேர்வுசெய்யப்பட்டிருப்பது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். இது எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு. தமிழ் கலாசாரத்தை அவமதித்துவிட்டதாக முன்பு என்மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தப் பிரச்சினை குறித்து நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பல பிரச்சினைகள் வந்தன. கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போதும் அப்படித்தான் தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும்தான் பிரச்சினை என்பது போல் பேசுகிறார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி “பெரியார்’ படத்தில் நடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் மூலம் தமிழகத்தில் எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். நான் தமிழ்நாட்டின் மருமகள். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன் என்கிறார் குஷ்பு.
மணியம்மை வேடத்துக்குப் பொருத்தமானவர் குஷ்புதான்: சத்யராஜ்: படத்தை இயக்கும் ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. “பெரியார்’ பற்றிய தகவல்கள், புகைப்படங்களை மட்டும் ஒரு வருட காலம் திரட்டியிருக்கிறார். திரைக்கதை அமைக்க மூன்று வருட காலம் எடுத்திருக்கிறார். தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்த பின்பே என்னை அந்த வேடத்துக்குத் தேர்ந்தெடுத்தார். மேலும் படத்தில் காந்தி, ராஜாஜி போன்ற கதாபாத்திரங்களும் வருகின்றன. ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனையைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தினரே வியந்திருக்கிறார்கள்.
அதேபோலத்தான் குஷ்புவையும் தேர்ந்தெடுத்திருப்பார். குஷ்புவுடன் பல படங்களில் நடித்திருக்கிறேன். அவரைப் பற்றி நன்கு தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு சதவிகிதம் இந்த வேடத்துக்கு குஷ்பு பொருத்தமாயிருப்பார் என்றார் சத்தியராஜ்.
படத்திலிருந்து தங்கர்பச்சான் விலகல்?: “பெரியார்’ படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றிருப்பவர் தங்கர்பச்சான்.
கடந்த வருடம் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதுதொடர்பாக தங்கர்பச்சான் வருத்தம் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையில் தங்கர்பச்சானுக்கு எதிராக குஷ்பு மிகவும் ஆவேசமான கருத்துகளை கூறினார். தற்போது தங்கர்பச்சானைச் சார்ந்தவர்கள் குஷ்பு படத்தில் பணியாற்றத்தான் வேண்டுமா? அதனால் படத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக தங்கர்பச்சானைக் கேட்ட போது இதுவரை தான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் இதுகுறித்து பேச விரும்பவில்லை என்றும் கூறினார். பிரச்சினை வலுக்கும் பட்சத்தில் படத்திலிருந்து அவர் விலகுவார் என்று தெரிகிறது.










