Tamil Poems by Women Writers


1. இரண்டாம் தளத்தில் தள மேற்பார்வை – ப கல்பனா

பச்சைப் பசேலெனக்
கண்ணை நிறைக்கிறது
அகண்ட அரச மரம்

இளவேனிற்காலக்குயில் உள்ளிருக்கலாம்

வேப்பங்கொழுந்தும் மாந்தளிரும்
சன்னலைத் தழுவி அசைகின்றன

நான்கைந்து காகங்களைத் தவிர
வானத்தில் இயக்கமில்லை

குனிந்த தலை நிமிராமல்
எழுதுகின்றனர் தேர்வு
நாளை தலைநிமிர்ந்து நடக்க

என்றோ வாங்கிய சாக்லெட்
ஐந்து நிமிட ஆசுவாசம்

நான்காம் மாடி பால்கனியிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
ஐந்து வயது தளிர்
கோடை விடுமுறை போலும்

மேலும்
மின்விசிறி நாற்காலி மேசை தாள் பேனா…
இன்னும் வரிசையாய்
விவரிக்கத் தொடங்குமுன்
முடித்துவிடுங்கள் தேர்வை.

ஐந்து மணிக்குப் போக வேண்டும்
குழந்தையைப் பார்க்க.


2. இருக்கிறேன் – சே பிருந்தா

பொசுக்கும் வெயிலில்
மரங்களேதுமற்ற நகரச் சாலைகளில்
வழி தவறிய முதியவரென –

அன்புமிக்கவரிடமிருந்து பெற்ற
சாபமென –

கடைசித்துளி
விஷத்திற்கப்புறமான
வாழும் வேட்கையென –

இலையுதிர்கால மரத்தினடியில்
வளரும் சிறு புல்லென –

உன் கடிதங்களின்றி.


3. பனிக்குடமும் சில பாம்புகளும் – சுகிர்தாராணி

புராதனமான என் பனிக்குடத்தில்
பாம்புகள் சில நீந்தி மகிழ்கின்றன
பெருத்த கர்ப்பகாலம் தீர்வதற்குள்
நாற்புறமும் என்னுடல் வெடிக்கப்
பிறக்கின்றன பிளந்த வாய்களுடன்.

அவற்றைப் பழக்குவது
அவ்வளவு எளிதாக இல்லை.
சலனங்கள் பூக்காத துவாரங்கள் மறந்து
படர்ந்தயென் மடியுள் ஒடுங்குகின்றன
உறங்குவதற்கும் விழிப்பதற்கும்.

அதனதன் வால்களையே
விழுங்கிக் கொள்ளும் உணவுப்பழக்கம்
விசித்திரமாயிருக்கிறது.

காற்றசையும் ஒலித்தருணத்தில்
பற்றுக்கொடியின் உயிர்வேட்கையாய்
நட்ட என் மீதேறி
விஷத்தை கக்குகின்றன.

என்னிழல் என்மீது விழும்
மதியப் பொழுதுகளில்
நீண்டு கிடக்கிறேன்
வறட்சியை ருசித்த துக்கஆறு போல.

பாம்புகளுடன் வாழ்வது
சிரமமாயிருக்கிறது
இல்லாமல் வாழ்வதும்.


4. படையல் – உமா மகேஸ்வரி

வீடு முழுக்க அப்பியிருக்கும்
இழப்பின் உலர்ந்த துயரம்.
பொருளற்ற சொற்கள்
உருள்கின்றன நிற்க மாட்டாமல்.
மௌனமாய்க் கலங்கும்
யாரும் யாருடனும் இல்லை.
சமாதானங்கள்
ஜலதாரையில் வழிகின்றன கறுப்பாக.
மகள் இறந்த முப்பதாம் நாளில்
தலைக்குச் சாயமிட்டுக் கொண்டிருக்கும் அப்பாவைக்
கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றிருக்கிறது.
உனக்குப் பிடிக்குமேயென்று
ஜாதிமல்லியை முழம் போட்டு வாங்கும் அம்மா.
உனக்குப் பிடிக்குமே, உனக்குப் பிடிக்குமே…
ஊதா நிறப் பட்டு;
பருப்பு ரசம்; பட்டாணி பொரியல்;
பால் கொழுக்கட்டை;
கப்பங்கிழங்கு; கருவாட்டுக் குழம்பு;
இலையிலேறுகிறது ஒவ்வொன்றாகப்
படையலென்று.
பூச்சரத்தைக் கோர்த்து
மாலையிட முனையும்
அம்மாவைத் தடுத்து,
திருப்பி வைக்கிறேன் உன் நிழற்படத்தை
அது நீயில்லையென்று


5. அறைகளாம் ஆன வீடு – குட்டி ரேவதி

அந்த அறை பெண்களுக்கானது
ஆளுயரக் கண்ணாடிகளும் எப்பொழுதும்
வீசும் மதுவின் போதையும்;
உறக்கத்திலாழ்ந்து கனவுகளுக்கான
நுழைவாயிலைக் கண்டடைவதும்,
அங்கு வரும் அதிசயப்பிராணிகளை
வரைந்து பிரதியெடுப்பதும்
மற்றபடி மந்திரங்கள் நிகழ்த்துதல்
அவர் தொழில்

அடுத்த அறை யானைகளுக்கானது
நினைத்துப் பாருங்கள்
உடலைத் திருப்ப முடியாமல்
சுவரை உரசும் முதுகும் தலையும்
மதம் பெருகி நிற்கின்றன
வன்மத்தின் விதை ஊன்றப்பட்ட தரையும்
அது வளர்ந்து செழிக்கப்போதாத
உத்திரமும்

பக்கவாட்டில் இருக்கும் அறை
குழந்தைகளுக்கானது ஆகவேதான்
நீங்கள் பறவைகளின்
இறக்கை படபடப்பைக் கேட்க முடிகிறது
கண்ணாடியைக் கண்டு மிரளும் அவர்கள் கையில்
கத்திகள் பழக்கப்படுகின்றன

முன்புறம் இருக்கும் பெரிய அறை
ஆண்களுக்கானது
குறட்டை ஒலிகளும் பேதலித்த வார்த்தைகளும்
நீங்கள் நுழையவே முடியாத
அவர்களும் வெளியேறவே விரும்பாத
இரும்புச்சுவர்கள்
காலத்தை வழிமறிக்கும் கற்களைத்
தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்


| |

One response to “Tamil Poems by Women Writers

  1. Unknown's avatar மாயவரத்தான்...

    அந்த ‘குட்டி ரேவதி’ன்றது யாரு? துப்பட்டா கவிஞை தானே? ‘சண்டைக் கோழி’ மேட்டர் என்ன ஆச்சுன்னு எதுவும் தெரியுமா? (இல்லே.. ஊரு பக்கம் எல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க. லேட்டஸ்ட் அப்டேட் தெரியுமேன்னு கேட்டேன்!?!)

மாயவரத்தான்... -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.