புலி வருது..புலி வருது…


தமிழக தேர்தல் அலசலில் ம.தி.மு.க வை எடுத்து அலசலாம் என்று உள்ளேன். ஏற்கனவே குழலி ஒரு அலசலை வெளியிட்டுள்ளார்.இது என் பார்வையில் சுருக்கமாக.

இது சிறிய கட்சிதான் எனினும் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் சுமார் ஐம்பது தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆப்பு வைத்தது என்பதிலிருந்து இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த கட்சியில் வைகோ மட்டும்தான் பெரிய தலைவர்.ஆனால் கருணாநிதிக்கு பிறகான தமிழக அரசியலில் வைகோவின் பங்கு மிகப்பெரிது.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

வைகோ தலைமையில் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க மீண்டும் விசுவரூபம் எடுக்கும். தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது வைகோ நடத்திய போட்டி பொதுக்குழுவிற்கும் கணிசமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம்கூட ஊசலாடி கொணடிருந்தார்.கருணாநிதி ஒருவருக்காகத்தான் அனைவரும் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்வது போல் நாடகம் ஆடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.ஸ்டாலின் கோஷ்டி என்று ஒன்று உண்டு.அதைத்தவிர மற்ற அனைவரும் வைகோ பின்னால் அணிசேருவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்டாலினா, வைகோவா என்ற கேள்வி ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் வரும்போது தொண்டன் கண்டிப்பாக வைகோவை தான் தேர்தெடுப்பான் என்பது திண்ணம்.அந்த நம்பிக்கையில்தான் வைகோவும் கட்சி நடத்திக்கொண்டு வருகிறார்.நம்பிக்கை வீண்போகாது என்பது என் கணிப்பு.

தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட வைகோ அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, மீண்டும் தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, பி.ஜே.பி, காங்கிரஸ் என்று அனைவருடன் ஒரு ரவுண்ட் கூட்டணி அனுபவம் உள்ளதால் அரசியல் நடத்துவதிலும் தேறுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

அதிகம் உணர்ச்சி வசப்படும் தலைவரான வைகோ ஆட்சி நடத்திய அனுபவம் எதுவும் பெற்றிருக்கவில்லை. குறைந்தது ஒரு மந்திரி பதவியில் கூட ரொம்ப நாள் இருந்ததில்லை.இவருடைய நிர்வாகத்திறன் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது.கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்ற பெயர் உள்ளது.அதுவே போதும்.

தேர்தலை பொறுத்தவரை தனியாக இந்த தேர்தலில் எந்த சீட்டையும் இவர்கள் வெல்ல முடியாது.கூட்டணி விஷயத்திலும் ம.தி.மு.க ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் அதிக சீட் கேட்கும் நோக்கத்தில்தான் இந்த நாடகத்தை வைகோ ஆடுவதாக தோன்றுகிறது.பொடாவில் உள்ளே இருந்ததை மறப்பது வைகோவிற்கு கடினம்.

ம.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு நாயுடு இனத்தை சேர்ந்த விஜயகாந்த கட்சி ஆரம்பித்து உள்ளதால் குறைந்திருக்கும் என்று ஒரு எண்ணம் உள்ளது.அது உண்மையா என்று இந்த தேர்தல் பதில் சொல்லும்.

9 responses to “புலி வருது..புலி வருது…

  1. கருணாநிதிக்குப் பிறகான திமுகவிலிருந்து கணிசமான தொண்டர்கள் + தலைவர்கள் வை.கோவுக்கு ஆதரவாகச் செல்வார்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் எந்த சதவிகிதத்தில் என்று பார்க்கவேண்டும்.

    நடக்க இருக்கும் தேர்தலில் மதிமுக அஇஅதிமுகவுடன் கூட்டு சேர்வது மிகவும் கடினமான செயல். அதனால் பேசாமல் கருணாநிதியுடன் கூட இருந்து, அவர் கொடுக்கும் இடங்களைப் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டு (மனத்துக்குள் மட்டும் இடம் கொடுத்தால் அதனையும் வைத்துக்கொண்டு) கூட்டணியின் வெற்றிக்கு உழைப்பதுதான் சாத்தியம்.

    இல்லாவிட்டால் மீண்டும் தனித்து நின்று டெபாசிட் இழக்கலாம்.

  2. நான் எழுதிய பதிவு முழுக்க முழுக்க இன்றைய நிலையை வைத்து, மேலும் நான் எடுத்துக்கொண்டது வைகோ தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்தாலா விலகினாலோ ஏற்படும் விளைவுகளைப் பற்றியது மட்டுமே…

    //இது சிறிய கட்சிதான் எனினும் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் சுமார் ஐம்பது தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆப்பு வைத்தது என்பதிலிருந்து இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
    //
    2001 தேர்தலில் மதிமுக வினால் திமுக கூட்டணி இழந்தது மொத்தம் 26 தொகுதிகள், அந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் திமுக வுடன் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    //தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது வைகோ நடத்திய போட்டி பொதுக்குழுவிற்கும் கணிசமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம்கூட ஊசலாடி கொணடிருந்தார்.
    //
    எம்.ஜி.ஆர் வெளியேறியபோது ஒரே ஒரு மாவட்ட செயலாளர் கூட வெளியேறவில்லை. ஆனால் வைகோ வெளியேறிய போது 8 மாவட்ட செயலாளர்கள் வைகோவுடன் வெளியேறினர், இன்றைய நிலையில் கலைஞரா? வைகோ வா? என்றால் கலைஞர் ஆனால் வைகோ வா ஸ்டாலினா என்றால் வைகோ இது தான் பெரும்பாலானவர்களின் நிலை, ஆனால் திறமையாக கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வரும் ஸ்டாலின் தலைமை கலைஞருக்கு பின் பெரிய அளவில் வைகோ வால் பாதிப்பு ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை… காரணம் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சில இரண்டாம் நிலை தலைவர்களை தவிர மற்ற அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள்… இல்லை இல்லை ஸ்டாலினால் ஸ்டாலினுக்காக பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்கள்… ஆகவே வைகோ பாதிப்பு கலைஞருக்கு பின் நிச்சயம் இருக்கும் ஆனால் அது பெரும் பாதிப்பாக இருக்காது என்பதும் எனது கணிப்பு

  3. கலைஞருக்குப் பிறகு திமுக தொண்டர்களை வைகோ பெருமளவு ஈர்க்கலாம். ஆனால் கலஞருக்குண்டான நீக்குப் போக்குகள் இல்லாவிட்டால் மதிமுக எந்நாளும் திமுக ஆக முடியாது. அதற்குப் பிறகு வரக்கூடிய தேர்தல்களில் ஜெவைப் பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள் சிதறிப்போக மட்டுமே மதிமுகவின் வளர்ச்சி கை கொடுக்கும். அப்படியே மதிமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால்
    தமிழகம் கூட சிதறிப்போகும் அபாயம் உள்ளது 😦

  4. Unknown's avatar முத்து(தமிழினி)

    பத்ரி,

    //கருணாநிதிக்குப் பிறகான திமுகவிலிருந்து கணிசமான தொண்டர்கள் + தலைவர்கள் வை.கோவுக்கு ஆதரவாகச் செல்வார்கள் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் எந்த சதவிகிதத்தில் என்று பார்க்கவேண்டும்.//

    இது கொஞ்சம் கொஞ்சமாக கிராஜுவலாகத்தான் நடக்கும். ஒரேயடியாக போக மாட்டார்கள்.ம.தி.மு.க விற்கு இந்த தேர்தலில் வாய்ப்புகளை பற்றி நீங்கள சொல்வது சரிதான்.

    குழலி,
    // அந்த நிலையில் தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ் திமுக வுடன் இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.//

    இது சரி…நான் இந்த பாயிண்டை கணக்கில் எடுக்கவில்லை…..

    //திறமையாக கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வரும் ஸ்டாலின் தலைமை கலைஞருக்கு பின் பெரிய அளவில் வைகோ வால் பாதிப்பு ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை… காரணம் கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சில இரண்டாம் நிலை தலைவர்களை தவிர மற்ற அனைவரும் ஸ்டாலின் ஆதரவாளர்கள்… இல்லை இல்லை ஸ்டாலினால் ஸ்டாலினுக்காக பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்கள்… ஆகவே வைகோ பாதிப்பு கலைஞருக்கு பின் நிச்சயம் இருக்கும் ஆனால் அது பெரும் பாதிப்பாக இருக்காது என்பதும் எனது கணிப்ப//

    தொண்டர்கள் எடுக்கும் நிலைகளை பொறுத்து தலைவர்கள் மாறத்தான் வேண்டும். பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக முழு அளவில் வரலாம்.இது பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
    ஸ்டாலின் கலைஞர் அளவு விவரம் இல்லை.எத்தனை காலம் பொன்முடியும் துரைமுருகனும் அவரை பொத்தி காக்க முடியும்?

    மூக்கு சுந்தர்,
    //மதிமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கூட சிதறிப்போகும் அபாயம் உள்ளது //

    இதெல்லாம் சொல்ல முடியாது..நான் கூடத்தான் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த முதல்நாள் பாகிஸ்தானையும் இரண்டாம் நாள் ஆப்கானிஸ்தானையும் பிடிப்பார்கள் என்று நம்பினேன். ஆனால் நடந்தது என்ன?

    அதிகாரத்திற்கு விலை இருக்கிறது.அது உங்கள் கைகளை கட்டும்.ம.தி.மு.கவிற்கு அது புலிகள் ஆதரவு ஒரு ஐடென்ட்டி கார்டு.அவ்வளவுதான்.தார்மீக ஆதரவு கொடுத்தாலே பெரிய விஷயம்தான். புலிகளுக்கு நாம் ஆதரவு கொடுத்தப்போது நீங்கள் வீட்டை வெளியே வரவே பயந்து கிடந்தீர்களா?

  5. //அதிகாரத்திற்கு விலை இருக்கிறது.அது உங்கள் கைகளை கட்டும்.ம.தி.மு.கவிற்கு அது புலிகள் ஆதரவு ஒரு ஐடென்ட்டி கார்டு.அவ்வளவுதான். //

    அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்த மாதிரியான விஷயங்களில் கைகள் கட்டப்பட்டால் சரிதான்.

    //புலிகளுக்கு நாம் ஆதரவு கொடுத்தப்போது நீங்கள் வீட்டை வெளியே வரவே பயந்து கிடந்தீர்களா?// அது வேறு காலம். அப்போதைக்கும், இப்போதைக்கும் வித்தியசங்கள் உள்ளன.

  6. //நான் கூடத்தான் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த முதல்நாள் பாகிஸ்தானையும் இரண்டாம் நாள் ஆப்கானிஸ்தானையும் பிடிப்பார்கள் என்று நம்பினேன்.
    //
    ஹா ஹா நானும் இப்படித்தான் நம்பினேன், என்ன முதல்நாள் பாக்கிஸ்தானையும் இரண்டாம் நாள் சீனாவிடம் இழந்த பகுதிகளையும் பிடிப்பார்கள் என்று நம்பினேன்

  7. இப்போதைய ஜீவி- யில் வைக்கோ கலைஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ,அதில் மதிமுக-வின் முக்கியத்துவம் குறித்து விளக்கியிருப்பதாக கொடுக்கபட்டுள்ள அலசல் ஓரளவு சரியெனவே எனக்குப் படுகிறது

    http://www.vikatan.com/jv/2006/feb/12022006/jv0601.asp

  8. குழலி பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கேயும் பொருந்துவதால் …

    குழலி,
    வடக்கில் பா.மா.க வுக்குள்ள ஓட்டுவங்கி,தெற்கில் செல்வாக்கின்மையோடு தெற்கில் ம.தி.மு.க வின் ஓட்டு வங்கி ,வடக்கில் செல்வாக்கின்மை இடையிரண்டிற்கும் ஒரு சமன் பாட்டை உங்களைப் போல் என்னால் காண முடியவில்லை .ம.தி.மு.க வுக்கு செல்வாக்கு இல்லாத வட மாவட்டங்களிலேயே ம.தி.மு.க தனியாக நின்று 3000 முதல் 8000 வரை ஓட்டு வாங்கியிருக்கிறது .அதே ரீதியில் பா.ம.க தெற்கில் இல்லை .கன்னியாகுமரி ,நெல்லை ,தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் பா.ம.க விற்கும் தொகுதிக்கு 500 ஓட்டுகள் கூட கிடையாது.

    சில வட மாவட்டங்களில் பா.ம.க வுக்கு குறிப்பிடத் தக்க ஆதரவு இருப்பது உண்மை .ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவற்றில் பா.ம.க வே போட்டியிடும் பட்சத்தில் ,கூட்டணிக்கு என்ன லாபம் இருக்க முடியும்?5000 ஓட்டுக்கள் ஒரு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் என்று வைத்துக்கொண்டால் ,பா.ம.க 100 தொகுதிகளில் அந்த நிலையில் (பலவற்றில் கணிசமான அளவு அதிகமாக என்பது உண்மை) இருக்கிறது என்றால் ,ம.தி.மு.க கிட்டத்தட்ட 175 தொகுதிகளில் அந்த நிலையில் இருக்கிறது .சில இடங்களில் பா.ம.க வடக்கில் பெற்றிருக்கும் செல்வாக்கு அளவுக்கு இல்லையெனினும் ,தெற்கில் கணிசமான ஆதரவு ம.தி,மு.க வுக்கு இருக்கிறது .கன்னியாகுமரி மாவட்டதில் குளச்சல் தொகுதியில் சென்ற தேர்தலில் தி.மு.க வை மூன்றான் இடத்துக்கு தள்ளி ம.தி.மு.க இரண்டாம் இடத்தை பிடித்தது.

    தமிழகம் முழுவதும் கூட்டணி என்று வரும் போது சிறிய கட்சியாக இருந்தாலும் மாநிலம் முழுக்க பரவலான ஆதரவு பெற்றிருக்கிற கட்சியே கூட்டணிக்கு அதிகமாக பங்களிக்க முடியும் .ப.ம.க மாநிலத்தில் பாதி பகுதியில் 1% ஓட்டு கூட பெற முடியாது.

    இன்னொன்று .ம.தி.மு.க தனியாக நின்ற போது அது பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து அதன் பலத்தை கணக்கிட முடியாது .அவை வெற்றி பெறாது என தெரிந்தே போடப்பட்ட ஓட்டுக்கள் .ம.தி.மு.க வுக்கு ஓட்டு போட மனமிருந்தும் ,வெற்றி பெற முடியாத ம.தி.மு.க வுக்கு போடுவதை விட ,ஜெயலலிதாவை தோற்கடிக்க தி.மி.க வுக்கு போடுவோம் என்று வாக்களித்த பலரை அனுபவ பூர்வமாக நான் பார்த்திருக்கிறேன் .

    வைகோ மேல் மிகுந்த மதிப்பு இருந்தும் ,அவரை ஆதரிக்க மனம் இருந்தும் ,கலைஞர் என்ற ஒரே மனிதருக்காக இன்னும் தி.மு.க வுக்கு ஓட்டு போடுகிற ஒரு கூட்டம் இருக்கிறது .அவர்களெல்லாம் காலம் வரும் போது மாறும் வாய்ப்பிருக்கிறது .ஆனால் இத்தகையோர் வை,கோ ஜெயலலிதாவோடு மீண்டும் கூட்டு சேர்ந்தால் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வாய்ப்பிருக்கிறது.

    என்னைப் பொறுத்தவரை வைகோ தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,திமுக அனுதாபிகளின் நல்லெண்ணத்தை குலைக்காமல் இருப்பது நல்லது .இல்லையேல் இவ்வளவு நாள் அவர் காட்டிய பொறுமைக்கு பலனின்றி போகலாம்.

  9. Unknown's avatar சந்திப்பு

    மதிமுக குறித்த தங்களது பார்வை சரியானதுதான். மதிமுக ஒரு இலவு காத்த கிளி. எப்போது வாய்ப்பு கிடைக்குமோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது வைகோவின் கணக்கு.

    வைகோ ஒரு சிறந்த பேச்சாளராக இருக்கலாம். அவருக்கு கொள்கை பிடிப்பும் – அரசியல் அனுபவமும் போதாது என நினைக்கிறேன். ஏனென்றால் வைகோ கட்சி ஆரம்பித்த புதிதில்

    1. தமிழின மீட்சி, பெரியார் – அண்ணா கொள்கைகளை மீட்டெடுத்தல் என்றெல்லாம் பேசினார். அன்றைக்க வைகோ மற்றும் ஒரு எம்.ஜி.ஆராக பார்க்கப்பட்டார்.

    இன்று என்ன நிலை! மேலே சொன்ன எதையும் வைகோ மக்களிடம் கொண்டு செல்லவில்லை. இவையெல்லாமே ஆரம்ப சூரத்தனமாக இருந்து விட்டது. மேலும் எந்த திமுகவை எதிர்த்து அரசியலில் நுழைந்தாரோ அதே திமுகவுடன் குழைவது என்பது அவரது அரசியல் நிலைபாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது. தொண்டர்களும் கூட கருணாநிதியை வெறுத்தவர்கள்தான் வைகோவின் பின்னாள் வந்தார்கள். அந்த தொண்டர்களிடம் ஒரு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    2. பெரியார் ஜாதி, மதவெறிகளை எதிர்த்து அரசியல் செய்தவர். பெரியாரின் வழி நடப்பேன் என்று கூறிய வைகோ எப்போது பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்தாரோ, அப்போதே அவரது கொள்கை முகமூடி கிழிந்து விட்டது.

    3. தமிழகத்தில் ஜெயலலிதா மீதான ஊழல் புகாருக்கு முதன் முதலில் ஓடோடி கவர்னரிடம் மனு கொடுத்தவர் வைகோ. அதே வைகோதான் ஜெயலலிதாவின் காலடியிலும் விழுந்தார். இவரது அரசியல் பார்வை வெறும் வெத்து வேட்டு என்பதைத்தான் இது நிரூபித்தது.

    வைகோவின் மதிமுகவுக்கு யார் அரசியல் எதிரி : அதிமுகவா, காங்கிரசா, பா.ஜ.க.வா, திமுகவா, பா.ம.க.வா, விடுதலை சிறுத்தைகளா, இடதுசாரிகளா? அநேகமாக அவருக்கே தெரியாது? இப்படி கொள்கை இல்லாத கட்சி எப்படி கரை சேரும்?

    மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வைகோவின் அரசியல் நடவடிக்கை என்பது முற்றிலும் செலிழந்ததாகத்தான் இருந்தது. யாரையும் எதிர்த்து ஆர்ப்பாட்டமோ, மறியலோ, எதிர்ப்பு இயக்கங்களோ நடத்தவில்லை. அவரது நடைபயணத்தை தவிர அதுவும் எதற்கு என்று தெரியவில்லை? தெரிந்தால் கூறுங்கள்.

    அநேகமாக மதிமுகவில் வைகோவை விட எல். கணேசனே பெட்டர் என்று தெரிகிறது. அவராவது அவ்வப்போது ஏதாவது விஷயங்களில் உறுதியாக செயல்பட வேண்டும் என்ற தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்…

    வைகோ திமுக என்ற ஜலத்தில் கரையப்போகிறாரா? அல்லது இந்த தேர்தலில் திமுகவின் சதி என்ற வலையில் சிக்கப் போகிறாரா? வரலாறுதான் தீர்மானிக்கும்.

Badri -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.