நிறைய சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்கள். மாமாவை ‘சார்’ போட்டு
அழைக்கும் மாப்பிள்ளை தனுஷ், ரசிகர் மன்ற உறுப்பினர் ‘இளைய தளபதி’ விஜய்,
முடி நரைக்காத ‘சிவாஜி’ தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், சூப்பர் ஸ்டாரை
மட்டும் புகழ்ந்த சபையில் ஜோதிகாவையும் மனமுவந்து பாராட்டிய ‘சிவாஜி’
இயக்குநர் சங்கர் என்று odd men-கள் நிறைந்த சபை. பாபா தோல்வியை even
செய்யும் சந்திரமுகி வெற்றி விழா.
கஸ்தூரிராஜாவைப் பார்த்தால் செல்வராகவனின் தம்பிதானே என்று சொல்ல
வைக்கிறார். விஜயகுமாரின் பேரன், மெரீனா பீச்சில்
ஒன்றுக்கிருக்கும்போதும் ‘வேட்டையனை’ நினைவு கூர்வதை மேஜிகல்
ரியலிஸ்மாக்கலாம். மேடையில் இருந்த ஒரே பெண்மணி நயந்தாராவுக்கு மைக்
கொடுக்கப்படவில்லை.
சன் டிவியில் காட்டப்பட்ட ‘சந்திரமுகி உருவான கதை’ நல்ல முறையில்
தொகுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலப் புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட
பூனைகளான ‘தி மேகிங் ஆஃப் கிஸ்னா’, ‘ஸ்வதேஷ் பின்னணி’ என்றெல்லாம்
பார்த்து நொந்து போயிருந்த, கண்ணாடிகளுக்கு பதமாக இருந்தது. நச்
எடிட்டிங். ‘கங்கா’வாகாவே பி. வாசு மாறுகிறார். அடுத்த விநாடி சரவணனாக
ரஜினிக்குப் பாடம். சீன் முடிந்தவுடன் மானிட்டரில், உடனடியாக எதிர்வினை.
வெற்றிகரமான இயக்குநராவது சாதாரணமான விஷயமல்ல.
சந்திரமுகியின் படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் பிறிதொரு பேட்டியில்
தன்னுடைய அனுபவங்களை சொன்னார். முதலில் இவர் எடிட்டிங் செய்வதாக இல்லை.
நடுவில்தான் பெங்களூரில் திடீர் நேர்முகம்; பின் தேர்வு. Batch
process-ஆக படங்கள் சுடப்பட்டு, இவரிடம் வந்து கொண்டேயிருக்க, சுரேஷ்
தொகுத்துக் கொண்டேயிருப்பார். Hands off-ஆக இயக்குநர் விடுவது அர்ஸின்
நம்பகத்தன்மையை சுட்டி பொறுப்பை அதிகரித்திருக்கும். ‘சரஸகு ரரா’ பாடலில்
முதல் ஃப்ரேம் ‘குஷால்தாஸ் பவன்’. மூன்றாவது ஃப்ரேம் ‘பெங்களூர் மாளிகை.
‘ பத்தாவது ஃப்ரேம் ‘ராமோஜிராப் ஃபிலிம் சிட்டி’. ‘இருபதாவது அடி ‘மைசூர்
மாளிகை’. சுரேஷ்-அர்ஸ் படத்தின் மிகப் பெரிய பலம்.
தோட்டா தரணி படத்தின் இன்னொரு பலம். ‘அண்ணனோட பாட்டின்’ பிருமாண்டமான
வளர்ப்பு மகன் திருமண செட் ஆகட்டும்; சந்திரமுகி அரண்மணை; அறைகள் என்று
பார்த்து பார்த்து மினுக்கியிருக்கிறார்.
‘ஜெயம்’ ரவி வரவில்லை. சிம்புவுக்கு அழைப்பிதழ் வரவில்லையே என்று இன்னும்
புலம்பவில்லை. வரி ஏய்ப்பு நலனுக்காக மத்திய மந்திரி தாசரி நாராயண
ராவும், பினாமி நலன்களுக்காக ராவ் பகதூரும் ஆஜர்.
ரஜினியின் பேச்சு இந்தப் பதிவை ஒத்து ஜெர்க் தாவல்கள் கொண்டிருந்தது.
‘இந்த தாடியை ஏன் சார் வச்சிருக்கீங்க? அது என்ன உங்களுக்கு ஆளுமையோ
பலத்தையோக் கொடுக்குதான்னு கேக்கிறாங்க. எனக்கு தாடி ஒரு தன்னம்பிக்கைய
கொடுக்கிறதா தோணுது. சின்ன வயசில இருந்தே தாடி மேல எனக்கொரு பிரேமை. இப்ப
வசீகரமா இருக்கிறதா நெனச்சுண்டு வச்சுக்கிறேன். ‘அது அப்படி இல்ல’ என்று
கட்டுடைக்கிறதும் பகுத்தறிவு மூலமா தெளிவு கற்பிக்கறதும் வேணாம். என்னை
விட்டுடங்க்ளேன்ப்பா. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து உட்பொருள் காணுவதால்
என்ன பயன். சில விஷயங்கள் சந்தோஷமா இருந்தா அப்படியே விட்டுடணும்’
அப்புறம் ஜெயலலிதா பாணியில் குட்டிக்கதை ஒன்று சொன்னார். கடத்தப்பட்ட
விமானமாய் டாபிக் மாறினார். ‘பாபா’ படத்தின் தோல்வியையும் பாபாவையும்
வம்புக்கிழுத்ததை ‘சோதனை இருந்தால்தானே சாதனை’ என்னும் ஆன்மிகப்
பார்வையில் விளக்கினார். தெலுங்கு சந்திரமுகியின் பிரச்சாரத்தை செய்த
தாசரிக்கும், கண்ணுருட்டல் ஜோதிகாவுக்கும், நன்றி நவின்றார்.
நன்றி நெடுஞ்சாண் வீழ்வதில் பிரபுவை விஞ்ச முடியாது. சிவாஜிக்கு அப்புறம்
இந்த ‘சிவாஜி’தான் என்றபோது வசூல்ராஜாவுக்கு பில்லியன்கள் கிடைக்காததை
மட்டுமே எண்ணி சொன்னதாக கொள்ளலாம்.
இணையப்பதிவர்களில் ரஜினி ராம்கி போயிருந்தாரா என்று கேட்க வேண்டும்.










