குஷ்புவின் பேட்டியும் வெளியாகியிருந்த செப். 28, 2005 தமிழ்-இந்தியா டுடேயில் இருந்து எனக்கு முக்கியமாகப் பட்ட சில பகுதிகள்:
(நேரத்தே வான் மடலிட்ட எனி இந்தியன்.காம் மற்றும் இந்தியா டுடே-க்கு நன்றிகள் பல!)
பிரபு சாவ்லா:
இந்திய சினிமாக்களில் செக்ஸ் புரட்சி நடக்கிறது. முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் தாராளம் கரைபுரண்டோடுகிறது. இதை ஒரு சமூக விஞ்ஞானி ‘அந்நிய கலாச்சார நேரடி முதலீடு’ என்கிறார்.
காவேரி பம்ஸாய்:
ஆணின் கற்பனை உலகில் பிகினி உடையில் குழந்தைத்தனத்துடன் வளையவரும் தேவதை. கார்ப்பரேட் உலகில் கோட் அணிந்து கம்பெனியை ஆளும் பெண் அதிபர். இந்த இரு பிம்பங்களுக்கிடையே எங்கோதான் நாளைய உலகின் லட்சியப் பெண் இருக்கிறாள்.
55 % பெண்களுக்கு உச்சகட்டம் என்றால் என்ன என்று தெரியவில்லை.
82 % தாங்கள் சுயஇன்பம் அனுபவிப்பதில்லை என்று சொன்னார்கள். அடுத்தவர்களின் சுகம்தான் முக்கியம் என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்ட பெண்கள் முதல் முறையாகத் தங்கள் சுகத்திற்கு முக்கியத்துவம் தருவதால் வரும் ஆரம்பத் தடுமாற்றங்களாக இவை இருக்கக்கூடும்.
60 % பெண்கள் விருப்பமில்லாமலேயே செக்ஸ் உறவு கொள்ள வேண்டியிருப்பதாகச் சொல்கிறார்க்ள்.
ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட சர்வேயில் ஆணின் செக்ஸ் அப்பீல் என்பது அவனது கட்டுமஸ்தான தேகத்தில்தான் இருக்கிறது என்று பாதிக்கு மேற்பட்டவர்கள் சொல்லியுள்ளனர். ஆனால், பெண்களில் பெரும்பாலானவர்கள் ஆணின் கண்கள்தான் செக்ஸ் அப்பீலுக்கு அளவுகோல் என்று சொல்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு கவர்ச்சி மார்பகம்தான் என்று ஆண்களில் 75 % சொல்கிறார்கள்
வெளிநாட்டில் வாழ்ந்தால் கூட இந்தியப் பெண்கள் மரபணுவிலேயே பரிசுத்தம், களங்கம் என்ற இரண்டு வார்த்தைகளும் கலந்திருப்பதால் செக்ஸ் தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்துவதில் கூட ஒரு தயக்கம் இருக்கிறது.
24 வயது பெங்களூர் சாஃப்ட்வேர் எஞ்சினியரான ஆஷா ரவி தனது பாய் ஃப்ரெண்டுகளுடன் பப்களுக்கும் ரெஸ்டாரண்டுகளுக்கும் போவது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெற்றோருக்குத் தெரிந்துவிடக்கூடாது.
விளக்கு அணைந்ததும் என்ன நடக்கிறது என்பது புதிய நிழலுலகமான இண்டெர்நெட் பிளாக்குகளில் (வலைப்பதிவுகள்) சில பெண்கள் மூலம் தெரியவருகிறது.
கவிஞர் சுகிர்தாராணி:
மோசடி அகராதியிலும் பிரதிபலிக்கப்படுகிறது. வர்ஜின் என்ற சொல்லின் பொருள் குறிப்பாக பெண்களின் கன்னித்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது.
எஸ். காளிதாஸ்:
ஆணாதிக்க உலகம் மெச்சிக் கவிபாடிய ஜான்சி ராணி கூட வாளெடுத்து போர்க்களம் புகுந்தது தனது உரிமையை நிலைநாட்ட அல்ல. தனது வாரிசின் உரிமையை நிலைநாட்டத்தான்.
காத்திரமான புராண பிம்பங்கள் இந்தியாவில் உண்டு. பார்வதி ஜலக்கிரீடை செய்வதற்கு தன் கணவர் (சிவன்) வந்து இடையூறு செய்யாமலிருக்க தனது தோழிகளின் மேல் இருந்த மண்ணை வைத்து மகனாகவும் பாதுகாவலனாகவும் இருக்க ஒரு ஆணை (விநாயகர்) படைத்தாள்.
காளி சின்னமஸ்தா என்ற உருவெடுத்து தன் சக ஆண் வெறுமனே படுத்திருக்க, அவனருகே அமர்ந்து எல்லையில்லா பேரின்பம் துய்த்தபடியே தனது தலையையே வெட்டி தனது ரத்தத்தையே குடிக்கும் கதை உண்டு.
சுஷ்மிதா சௌத்ரி:
ஹைதராபாதில் 49 % பேர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒருவருடன் வாழ்வதை சரி என்கிறார்கள். தேசத்திலேயே இங்குதான் அது அதிகம்.
அதே போல், நான்குக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு இருந்ததாக சொல்பவர்களும் ஹைதராபாதில்தான் அதிகம். 11 % அப்படிச் சொல்கிறார்கள். தேசிய சராசரி 5 % தான்.
பெருநகர பெண்களுக்கு 19-21 வயதில் முதல் உறவு நிகழ்கிறது. சிறுநகரங்களில் அந்த வயது 15-18 ஆக இருக்கிறது.
ஆணுறை மிக அவசியம் என்று நினைக்கும் பெண்களின் சதவீதம் ஜெய்ப்பூர், லூதியானா, ஹைதராபாத் போன்ற இடங்களில் மிகக் குறைவாக இருக்கிறது. எயிட்சிற்கும் பால்வினை நோய்களுக்கும் பயமில்லை அல்லது தெரியாது என்று சொல்லும் பெண்களின் சதவீதமும் இங்குதான் அதிகம்.
திலீப் பாப்:
பெரும்பாலான ஆண்கள் (54 %) திருமணமாகும்வரை பெண்கள் கன்னித்தன்மையைக் காப்பாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதே சமயம் பெரும்பாலான ஆண்கள் (51 %) ஆண்கள் திருமணமாகும்வரை பிரம்மச்சரியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக சர்வே செய்யப்பட்டவர்களில் 66 % ஆண்கள், இன்னொரு ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண்ணை திருமணம் செய்யமாட்டோம் என்று கூறியுள்ளார்கள்.
ஒரு இரவு மட்டும் உறவு கொள்வது, தற்செயலாக உறவு கொள்வது என்பவை இங்கு இல்லை. பெண்ணுடன் உறவு கொள்வதற்கு அவளுடன் காதல் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் கூறுகிறார்கள்.
தலைவலி இருப்பதாக சொல்லி செக்ஸில் இருந்து தப்பிப்பதில் ஆண்களைவிட பெண்கள் அதிகம். தோழியை திருப்திப்படுத்த மட்டுமே 67 % சதவீத ஆண்கள் செக்ஸில் ஈடுபடுகிறார்கள். பெண்ணின் செக்ஸ் ஆளுமைக்கு இது நல்ல அறிகுறி.
இன்றைய இந்திய ஆண்மகன் தனது செக்ஸ் அடையாளம் பற்றி மிகவும் குழப்பமுடையனாக இருக்கிறான் என்பது நிரூபணமாகியிருக்கிறது. பழமையான மரபுகளில் நாட்டம், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமை, செக்ஸ் பற்றிய அடிப்படை அறிவின்மை மற்றும் நாட்டமினமை ஆகியவற்றுக்கிடையே இந்திய ஆண் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.
சல்ஸ்மான் தனது புதிய நாவலான ‘தி ஃப்யூச்சர் ஆஃப் மென்’ என்ற புத்தகத்தில் நான்கு நாடுகளில் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிடுகிறார். ஆண்களின் செக்ஸ் ஆர்வத்திற்குப் பதிலாக இப்போது தொழில்நுட்பம் வந்திருப்பதாக அவர் கூறுகிறார். எம்.பி.3க்கள், பிளாக் பெர்ரி செல்ஃபோன், லேப்டாப்கள் போன்றவை ஆணின் ஆசைக்குப் பரிகாரம் செய்வதாக அவர் சொல்கிறார். செக்ஸ் என்பது ‘எந்திரத்தனமான’ ஒன்றாக மாறிவிட்டது என்கிறார் அவர்.
பெண்களிடம் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
1. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது தவறு – 24 %
கருத்தரிக்க வாய்ப்பில்லை என்பதால் அதில் தவறில்லை – 17 %
அது உடலுறவு அல்ல என்பதால் அதில் தவறில்லை – 15 %
2. ஆணுறை பயன்படுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கட்டாயம் – 51 %
உபயோகிப்பதில்லை – 9 %
இன்பத்தைத் தடுக்கிறது – 12 %
3. நீங்கள் கீழ்கண்டவற்றில் எதைப் பற்றியாவது கற்பனை செய்திருக்கிறீர்களா?
உங்கள் துணையுடன் பல உடலுறவு நிலைகளில் – 28 %
மற்றவர்கள் செக்ஸ் உறவுகொள்வதை பார்ப்பது – 11 %
உங்களுடையவர் தவிர மற்றவர்களுடன் செக்ஸ் உறவு கொள்வதை – 5 %
பலருடன் சேர்ந்து செக்ஸ் – 3 %
இவை எதுவுமே இல்லை – 32 %
4. பிடித்த ஆண்கள் உடை?
ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் – 46 %
பேண்ட் ஷர்ட் – 19 %
குர்தா பைஜாமா – 12 %
ஷார்ட்ஸ் டி ஷர்ட்ஸ் – 12 %
ஸ்வெட்டர் – ஸ்வெட் பேண்ட் – 5 %
வேஷ்டி குர்தா – 2 %
ஆண் சர்வே:
1. ஆண்கள் திருமணமாகும் வரை பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
ஆம் – 44 %
இல்லை – 51 %
2. வாய்வழி செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வாய்வழி செக்ஸ் சரியானது இல்லை – 33 %
உடலுறவாக கருதப்படாததால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 26 %
பெண்கள் கர்ப்பமாக மாட்டார்கள் என்பதால் வாய்வழி செக்ஸ் சரிதான் – 21 %
சர்வே எடுக்கப்பட்ட விதம்:
இந்தியா டுடே – ஏ சி நீல்சன் – ஓ ஆர் ஜி மார்க் செக்ஸ் சர்வே இந்திய நகர்ப்புறத்து மணமாகாத பெண்களின் பாலியல் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டது.
இன்றைய பெண் தனது பாலியல் தன்மை பற்றி என்ன நினைக்கிறார்?
அவரது பாலியல் கற்பனைகள் என்ன?
அவற்றில் எவற்றையெல்லாம் முயன்று பார்த்திருக்கிறார்?
தனது துணையுடன் அவர் கொண்டுள்ள நெருக்கம், பகிர்தலின் அளவு என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த சர்வேயின் நோக்கம்.
இந்த சர்வேக்காக 11 நகரங்களில் (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அஹமதாபாத், பட்னா, லக்னோ, லூதியானா, ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர்) உள்ள 18-30 வயதிற்குட்பட்ட மணமாகாத அதிக வருவாய் உள்ள 2,035 பெண்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதில் 62 % பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடையவர்கள்.
மூன்றில் ஒரு பங்கினர் வேலைக்குப் போகிறவர்கள்.
54 % மாணவிகள்.
அதே நகர்களில் 517 ஆண்களிடம் சர்வே நடத்தப்பட்டது. அதே வயதுடைய பெண்களிடமிருந்து இந்த ஆண்களின் கருத்து எப்படி மாறுபட்டதாக இருக்கிறது என்று அறிவதே இதன் நோக்கம். தெருமுனையில் நின்றபடி தகுதியான பெண்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிற்பாடு அழைத்து கேள்வித்தாள்கள் தரப்பட்டன. ஆண்களிடம் தெருமுனையிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன.
அனைவரிடமும் கேள்வித்தாள்களைத் தந்து அவர்களையே நிரப்பச் சொல்லப்பட்டது. பிறகு அவர்களது பெயர் வெளியாகாமல் இருப்பதை உறுதி செய்ய ஒரு பெட்டியில் விடைகளைப் போடச் சொல்லப்பட்டது.