மெமண்ட்டோ
மெமண்ட்டோ-வை ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். படாதவர்கள் கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப்பில் மதி கந்தசாமியின் அறிமுகத்தைப் படித்து விடவும்.
பிறந்த நாள், நினைவு நாள் அன்று ஏரிக்கரையிலோ மலைவழிப்பாதையிலோ உட்கார்ந்து கொண்டு கடந்த காலத்தை, சென்ற வருடத்தை நினைத்துப்பார்ப்பேன்.
போன வருடம், இந்த நாளில் என்ன நினைத்தோம்? எவ்வளவு முடித்தோம்? ஏன் அதற்காக குறிக்கோள் வைத்தேன்? திருப்தியளித்ததா? அடுத்த வருடம் என்னவாக இருக்க வேண்டும்? ஏன்? ஐந்து வருடம் கழித்து… என்று சிதறலாய் இயற்கையை வெற்றுப்பார்வை பார்த்துக் கொண்டே, மகளுடன் விளையாடியபடியே அசை போடுவது பிடிக்கும்.
எதிர் காலம் தெரிந்திருந்தால், கடந்த காலத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம். அல்லது, அப்படியே விட்டிருப்பதும் சுவாரசியமே எனவும் எண்ணலாம். மெமண்ட்டோ இது போல அலைகளை எழுப்பும் படம். எதற்காக ஓடுகிறோம்? எதை ஆதாரமாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம்?
புத்தகத்தைப் படிப்பது சுகம். உண்மைகளை எடுத்து வைக்கும். சரித்திர நிகழ்வுகளை தற்காலப் புரிதல்களுடன் விளக்கும். திடுக்கிடும் திருப்பங்களுடன் செல்லும். இயல்பான வாழ்க்கையை படம் பிடிக்கும். அறிவுபூர்வமாக விவாதிக்கும். உணர்ச்சிபூர்வமாக விவரிக்கும்.
வாழ்க்கையும் புத்தகங்களைப் போல வெரைட்டியானவை. முடிவு தெரிந்த வரலாற்றுப் புத்தகம். இறப்பு நிச்சயம் என்று தெரிந்த வாழ்க்கை. இறந்த காலக் கொடுமைகளை மறந்தால்தான் நிகழ்காலம் இனிக்கும். கடந்த தினங்களின் கசப்பை காலப்போக்கில் மனிதர்கள் மறந்துவிடுவார்கள்.
மெமண்ட்டோவில் ஹீரோவுக்கு ஞாபகசக்தி சில மணித்துளிகள்தான். கூகிள், புகைப்படங்கள், நினைவு நாள் என்று ஞாபகப்படுத்திக் கொள்வது போல் அவனுக்கும் உபகரணங்கள் இருக்கிறது. அதன் அடிப்படையில் அனுமானங்களை அமைத்துக் கொள்கிறேன். செய்தித்தாள், நண்பர்களின் கூற்று, அக்கம்பக்க பேச்சு என்று எனது முடிவுகள் அமைகிறது. எனக்கு பத்து வருடத்தில் மறந்து போகும் சங்கதிகள், ஹீரோவுக்கு பத்து நிமிடத்தில் மறக்கின்றன.
எது மெய்? எப்படி பொய்? நாம் கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாலும், என் பிம்பம் பிரதிபலிக்கிறது. என்னுடைய செயல்கள் தண்டக்கருமாந்திரமாகப் போகாமல் இருப்பதை மனம் விரும்புகிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் சந்தோஷம் வருமே. வலைப்பதிவை கூகிள் தேடல் பட்டியலில் கண்டடைந்தால் மனம் பொங்குமே. அது போல. மூளைக்கு எட்டினால்தான் கருமத்தில் கண்ணாக இறங்கமுடிகிறது.
மெமண்ட்டோ நாயகனுக்கும் குறிக்கோள் தேவை. உடனடி மறதி இருந்தாலும், வாழும் வாழ்வினால் பயன் தேவை. நல்லதோ, கெட்டதோ; சரியோ, தவறோ; பிரயாணம் முக்கியம். லட்சியங்களை அடைந்துவிட்டால் அடுத்த பயணங்களும், அடைதல்களும் வேண்டும். அவனும் என்னைப் போல் தெளிவாகக் குழம்பியவன் தான்.
படத்தைக் குறித்து ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், நாயகியைக் குறித்த நாயகனின் வசனம் பொருத்தமாக இருக்கும்:
“உன் நினைவை அழிக்க, நினைவில் வைக்க முடியவில்லை”. (I can’t remember to forget you.)
மேலும் முழுமையான திரைப்பார்வைக்கும் அலசலுக்கும் சலொண் பக்கம் எட்டிப்பார்க்கவும்.




















