Daily Archives: ஏப்ரல் 15, 2005

பிட்ஸ் லொள்ளு

விகடன் கொடுத்தது பிட்ஸ்
நான் வழங்குவது லொள்ளு.

கும்பகோணம் பகுதியில் கோயில் கோயிலாகப் பயணம் போகிறார் சினேகா. என்ன வேண்டுதலோ?!

சரவணா செல்வரத்தினம் அண்ணாச்சி விளம்பரத்தில் தனக்கு பதிலாக – ப்ரியா மணி வர ஆரம்பிச்சுட்டாரே என்னும் பயமோ?

சிறையில் இருந்தபடியே தன் வெளிநாட்டுப் பக்தர்களுக்காக பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் பத்திரிகை நடத்தி வருகிறார் பிரேமானந்தா.

சங்கர மடம் சந்தோஷப்படுகிறது

சந்திரமுகி ரிலீஸானதும் மறுபடியும் கேரளா கிளம்புகிறார் ரஜினி… ஆயுர்வேத சிகிச்சைக்காக!

தீவிர சிகிச்சை அளித்தாலும் படம் ஹிட்டாகாது என்கிறார் ரஜினி ரசிகர்.

தன் கைக்கடிகார நேரத்தை எப்போதும் அரைமணி நேரம்முன்கூட்டி ஓடும்படி செட் செய்து வைத்திருக்கிறார் வைகோ.

நேரத்தை வேகமாக்கினாலாவது, சீக்கிரமே திமுக தலைவர் பதவி கிடைக்காதா என்னும் நப்பாசைதான்?

குழந்தைகள் படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கமல்.

அப்ப… மைக்கேல் மதன காமராஜன், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்பந்தம், மும்பை எக்ஸ்பிரஸ் எல்லாம் எதில் சேர்த்தி?

அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்காக, அரசின் சார்பில் அடுத்த மாதம் அமெரிக்கப் பயணம் செல்கிறார் ஜெயலலிதா!

மோடி மாதிரி இல்லாமல், விசா வழங்காவிட்டால், கடற்கரையில் உண்ணாவிரதத்தில் குதிச்சுடுவாங்க!

ஏப்ரல் 10 & 14

நன்றி: Yahoo Groups: Rajinidotcom Message 12651 :: ஷாஜஹான்

புத்தாண்டு படங்கள் :: முதல் நாள் ரிப்போர்ட்


சென்னையில் சந்திரமுகி


Rajini attended function for K.Balachander :: ஒரு விழாவில் கவிஞர் வாலி சொன்னார். நான் எம்.எஸ்.வியை சந்திப்பதற்கு முன் சோற்றுக்கு அலைந்தேன். எம்.எஸ்.வி.யை சந்தித்தபிறகு சோறு சாப்பிட நேரமில்லை என்று. அதேமாதிரிதான் இந்த நான். வாழ்க்கையை பார்த்து பயந்தவன் இந்த சிவாஜிராவ். பாலசந்தர்சாரை சந்தித்தபிறகு அவர் என் பெயரை ரஜினின்னு மாத்திவச்ச பிறகு வாழ்க்கை என்னை பார்த்து பயந்தது. அதுதான் பாலசந்தர் டச். அவரிடம் எத்தனையோ கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய மகான் 130 வருடம் வாழ்ந்தார். அவரிடம் நீங்கள் இப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன காரணம் என்றhர்கள். அதற்கு அந்த மகான் சொன்னார். வாழ்க்கையில் 3 ஒழுக்கத்தை கடைபிடித்தால்போதும் நீங்களும் அப்படி வாழ முடியும். அந்த 3 ஓழுக்கம் ஒன்று physical(உடல்ரீதியான ஒழுக்கம்), moral (உள்ள ரீதியான ஒழுக்கம்), spiritual (மத ரீதியான ஒழுக்கம்).

உடல் ரீதியான ஒழுக்கம் என்பது உன் உடலை பற்றி தெரிந்துக்கொண்டு, அதில் என்ன நோய் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை சீர்செய்து கொள்ள வேண்டும், மோரல் என்பது பெத்த அப்பா, அம்மாவை நன்றhக பார்த்துக்கொண்டு, தாய் நாட்டுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை ஜhஸ்தியாகவும் இல்லாம, கம்மியாகவும் இல்லாம, கரெக்டா செய்யணும், ஸ்பிருட்சவல் என்பது நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் அந்த மதத்தின் கொள்கைகளை சரியாக கடைபிடித்து வாழ்வது. இந்த மூணும் சரியாக இருந்தால் நீயும் அப்படி வாழலாம்.


Black tickets selling like hot :: கோயம்பேடு தியேட்டர் காம்ப்ளக்சில் “சந்திரமுகி’ டிக்கெட் 200 ரூபாய்க்கு பிளாக்கில் விற்கப்பட்டது. “மும்பை எக்ஸ்பிரஸ்’ டிக்கெட் நூறு ரூபாய்க்கு “பிளாக்’கில் விற்கப்பட்டது. விஜய்யின் “சச்சின்’ பட டிக்கெட் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரை “பிளாக்’கில் விற்கப்பட்டது.


ரஜினி குடும்பம் :: “நேற்று மதியம் 2.30 மணி காட்சியின் போது ரஜினியின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகனும் நடிகருமான தனுஷ் ஆகியோர் படம் பார்க்க வந்தார்கள். காரில் இருந்து இறங்கிய தனுஷை ரசி கர்கள் அலேக்காக தியேட்டருக்குள் தூக்கிக் கொண்டு போனார்கள். இந்த காட்சியை தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.”

கல்கி தலையங்கம்

Kalki Weekly :: போப் இரண்டாம் ஜான் பால் மறைவு மத எல்லைகளையும் தாண்டி, துயரத்தையும் இழப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ், பிளேர் தொடங்கி கார்பசெவ், காஸ்ட்ரோ வரை (சீனா உட்பட) உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இத்தனைக்கும் போப் ஆண்டவர் இந்தத் தலைவர்களுடன் எல்லா நேரங்களிலும் உடன்பட்டார் என்று கூற முடியாது. மனித உரிமைப் பண்பாளர் என்ற போதிலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதக் கோட்பாடுகள் அனுமதியாத கர்ப்பத்தடை முறைகள், விவாகரத்து போன்றவற்றை இறுதிவரை கடுமையாக எதிர்த்தார். ஓரினச் சேர்க்கையையும் கருக்கலைப்பையும்கூட அடிப்படை உரிமைகளாகக் கோரி வருகின்ற மேற்கத்திய உலகில், போப் ஆண்டவரின் நிலை பழைமை வாதம்தான்!

கம்யூனிஸத்தை மிக வெளிப்படையாகவும் கடுமையாகவும் நிராகரித்தார் போப். அவ்வாறாயினும் அவரால் இத்தனை தலைவர்களின் மதிப்பை எவ்வாறு பெற முடிந்தது ?… அதுவும் ஏதோ மரியாதை நிமித்தம் இரங்கல் செய்தி வெளியிடாமல், ஒவ்வொருத்தரையும் உணர்ச்சிப் பெருக்குடன் பேச வைத்துள்ளது போப் ஆண்டவரின் மரணம்.

இந்த அரிய உணர்ச்சிப் பெருக்குக்குக் காரணம் போப் ஜான் பாலின் மனித நேயம்தான். கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதிலும் கத்தோலிக்கப் பழைமைவாதத்தைக் காப்பதிலும் எவ்வளவுக்கெவ்வளவு உறுதியாக இருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு தம்மோடு முரண்பட்டவர்கள் மீதும் அன்பு செலுத்தினார்.

முரண்படுவோரையும் நேசிக்கும் இந்தப் பேரன்புதான் கிறிஸ்தவ மதத்துக்கு மட்டுமின்றி, அனைத்து மதங்களுக்கும் ஆணிவேர். இந்தப் பேரன்பு காரணமாகத்தான் தம்மைச் சுட்டுக் கொல்ல முயன்ற மெஹ்மட் அலி அக்(g)கா(ca)வையும் மன்னித்து, அன்போடு அரவணைத்து ஏற்றார் ஆண்டவர்.

துருக்கி நாட்டுச் சிறையில் உள்ள அக்(g)கா(ca), போப்பாண்டவரின் மரணச் செய்தி அறிந்ததும் இறுதிச் சடங்குக்கு வரவேண்டும் என்று துடித்திருக்கிறான். தனக்கு அனுமதி கிடைக்காவிடில், தனது குடும்பத்தினர் யாரேனும் இறுதிச்சடங்குக்குச் சென்றே ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறான்.

கிறிஸ்துவ மதக் கொள்கையைப் பின்பற்றி இங்கே அம்மதத்தின் மதபோதகர்கள் பலர் நுழைந்து, ஹிந்துக்களை மதமாற்றம் செய்து வருவது குறித்து பெரும் சர்ச்சை நிலவிக் கொண்டுதானிருக்கிறது. இந்த முறைகேடுகளுக்குக் கத்தோலிக்க கிறிஸ்துவத் தலைமை துணை போவது குறித்துப் பெருங்கோபமும் தார்மிக எழுச்சியும் நாட்டில் எங்கும் காணக் கிடைக்கிறது. ஆனால், இந்த எதிர்ப்புணர்வையும் மீறி, போப் ஆண்டவருக்குப் பல ஹிந்துக்களும் மனம் கசிந்து அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து, சுனாமி போன்ற சோக நிகழ்வுகளின்போது வாடிகன் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறதே என்று பலர் மகிழ்கின்றனர். ‘பல்லாயிரம் ஆண்டுகளாக அமலில் இருக்கும் கத்தோலிக்க அமைப்பு இழைத்திருக்கக்கூடிய தவறுகள், அநீதிகளுக்கு போப் இரண்டாம் ஜான் பால் பொது மன்னிப்புக் கேட்டாரே!’ என்று நெகிழ்கின்றனர்.

ஆனால், மக்களின் உணர்வுகளை மதித்து, இந்திய அரசு மூன்று நாள் அரசுமுறை இரங்கல் அறிவித்திருக்கிறது என்று நாம் கருதுவதற்கில்லை. அப்படி மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த அறிவிப்புக்கு இருப்பதாகவும் தோன்றவில்லை. மத்திய அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் எழுந்ததல்ல. கிறிஸ்துவ மதத்தினரைத் திருப்திப்படுத்த, அரசியல் கண்ணோட்டத்தில் எழுந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. ஒரு மனிதாபிமானிக்குச் செலுத்தப்படும் மரியாதை எனில், அன்னை தெரஸாவுக்கு இப்படி ஓர் அறிவிப்பு இல்லையே!

இதுநாள்வரை எந்த மதத்தின் எந்தவொரு (தேசிய அல்லது சர்வதேச) தலைவருக்கும் அறிவிக்கப்படாத அரசுமுறை இரங்கலை அறிவித்ததன்மூலம், சர்ச்சைக்குரிய ஒரு முன்னுதாரணத்தை வகுத்துவிட்டது மத்திய அரசு. மதச்சார்பின்மையின் கொடியைத் தூக்கிப் பிடிப்பதாக இதற்கு மத்திய அரசு விளக்கம் தரக்கூடும்… ஆனால் சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த ஹிந்து மதத் தலைவர் ஒருவருக்குத் தரப்படாத கௌரவம், போப் ஆண்டவருக்கு மட்டும் தரப்படுவது ஏன் என்கிற கேள்விக்கு, நியாயமான பதில் இல்லை.

அந்த பதில் இல்லாத காரணத்தால், இந்த அரசிடம் மெய்யான மதச்சார்பின்மையும் இல்லை.

போப் ஆண்டவரின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது சிறுபான்மையினரைத் திருப்திப் படுத்துவது என்ற போலித் தனமாகிவிடக் கூடாதே என்றுதான் நியாயமாகக் கவலை கொள்கிறோம்.

சென்னை தூங்குகிறது

Tamiloviam ::

சென்னையை தமிழகத்தின் டெட்ராய்ட் என்றார்கள். இப்பொழுது இந்தியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்க ஆசைப்படுகிறார்கள். சென்னையின் முக்கிய தடங்களில் எலெக்ட்ரிக் பனை மரங்கள் முளைத்திருக்கிறது. ஸ்பென்ஸர், சென்ட்ரல், மீனம்பாக்கம் என்று எல்லா முக்கிய தளங்களும் பனையோலைகளை மினுக்குகிறது. பட்ஜெட் இடர்ப்பாட்டினாலோ, இடப் பற்றாக்குறையினாலோ தலத்துக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே தகிக்கும் வெயில். தற்போது மின்பனைகள். எப்போதும் மூணு சீட்டும் மங்காத்தாவும். ‘அப்ரெண்டிஸ்’ (Apprentice) நிகழ்சிக்காக ட்ரம்ப் வருகிறாரா என்று தெரியாது. ஆனால், ‘ட்ரம்ப் பல்லவபுரம்’ கூடிய சீக்கிரமே தொடங்கலாம்.

திரைப்படத் தணிக்கை குழுவின் திருவிளையாடல் எங்கும் தெரிகிறது. ‘அப்புறமா மிச்சம் காட்டவா’ என்று த்ரிஷா பாடுவதை மௌனமாக்கியவர்கள், ‘ஸெஹர்’ போஸ்டரில் மிச்சத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் உதிதா கோஸ்வாமியை ஒன்றும் செய்யவில்லை. எதிர் பக்கம் மௌனமாக எம்ரான் ஹாஷ்மியும் (Emran Hashmi) இந்தப் பக்க முதுகை மந்தகாசத்துடன் முக்குப் பிள்ளையாரும் அரோகராவசப்பட்டிருந்தார்கள்.

சென்னையில் மூன்று விதமானப் பெண்மணிகளைப் பார்க்க முடிகிறது. சேலை மட்டுமே கட்டும் நாற்பது+ மகளிர். சுடிதார் மட்டுமே விரும்பும் இருபத்தைந்தர்களும் மத்திய வகுப்பினரும். நியு யார்க் அளவுக்கு இல்லாவிட்டாலும் பரத்தின் சுசிலா போன்ற ·பேஷன் மகளிர். ஆண்களிடம் இரண்டே வகுப்பினர்தான். நூறு டிகிரி அடித்தாலும் வேட்டி அல்லது லுங்கி நுழையாமல் முழுக்கால் சட்டைக்குள் நுழைத்துக் கொள்பவர்கள் அதிகமாகி வருகின்றனர். கூட வந்திருந்த கேர்ள் ப்ரெண்ட்கள் பரவாயில்லை. காற்றோட்டமான கை வைக்காத டாப்களைக் கொண்டிருந்தனர்.

‘ஆறுசக்கர கப்பல் நகர்வலமா வருதுடா’ என்று பல்லவன் படத்தில் வரும் பாடல் போல் மாநகரப் பேருந்துகள் முன்பு போல் கண்ணில் படுவதில்லை. அதற்கு மாற்றாக பொறியியல் கல்லூரிகளின் வண்டிகள் சோர்ந்த முகத்துடன் நகர்வலம் வருகிறது. கோவில்களில் வேண்டுதல்கள் அதிகரித்துள்ளது. கபாலி கோயில் வாயிலில் ஜெயலலிதா புன்சிரித்திருந்தார். இன்னமும் நெய் மணக்கும் காரசாரத்துடன் புளியோதரைகள் கிடைக்கிறது. செருப்புகளைப் பாதுகாப்பதுடன் செல்பேசிகளையும் காக்க விட்டுச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். தப்பாமல் உடன் வரும் மற்ற செல்லினங்கள் ‘தேவுடா தேவுடா’வில் ஆரம்பித்து மொஸார்ட் வரை எல்லா இசைகளையும் கோவில் மணியுடன் அழைக்கிறது. இறைவனுக்கு எட்டும்படியாகவும் நமக்கும் கேட்கும்படியாகவும் பலர் செல்லுக்கு செவி மடுக்கிறார்கள்.

பாரிமுனையில் சைனாவே கொட்டிக் கிடைக்கிறது. மீரான் சாஹிப் தெருவில் அமெரிக்காவில் கூட வெளிவராத ஆங்கிலப் படங்களின் வட்டுக்கள் கிடக்கிறது. கெடுபிடி அதிகமாகிப் போனதால் ஐம்பது ரூபாய் அதிகம் கேட்கிறார்கள். ஒரே டிவிடியில் ஆறு ஆங்கிலப் படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆட்டோக்கள் பண்பலைகளை அலறவிடுவதைக் குறைத்திருக்கிறது. ஆட்டோக்கள் குறைந்தபட்ச கட்டணமாக இருபது ரூபாய் கேட்கிறது. அவற்றிடம் ஐந்து ரூபாய் மதிப்பிழந்து விட்டிருந்தது. இவர்களின் தயவில் சென்னை ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. நாலணா, எட்டணாவைப் பொறுக்கியே கோடீஸ்வரன் ஆவது போல் ப்ளாட்பாரத்தை இடித்தும் இடிக்காமலும் இரு சக்கர வாகனம் கூட நுழைய அஞ்சும் பொந்துகளில் புகுந்தும் போக்குவரத்தை நிலைநாட்டுகிறார்கள். விஜய்காந்த் நேர்மையானவர்; ஈகோ பார்க்காதவர்; என்று பட்டயம் கொடுத்த மூச்சோடு விவேக் ஓபராய் மாதிரி ஆகுமா என்றும் தராசுகிறார்கள்.

மிட்நைட்டில் பத்தடிக்கு இரண்டு காவல்துறையினர் கண்ணில் லத்தியை விட்டு ஆட்டுகின்றனர். இரு சக்கர வாகனங்களை நிறுத்தியும் நான்கு சக்கர வண்டிகளைக் கண்களால் அளந்தும் எட்டு சக்கர கனரகங்களை கையசைத்தும் அளக்கின்றனர். நடுநிசி தாண்டிய இரவுகளில் ரதி கஜ துரக பதார்த்தங்களுடன் ஊர் சுற்றுவோர் போதிய அடையாளங்களும் காரணங்களும் வைத்திருப்பது காவல்நிலையத்தை விட்டு போதிய தூரத்தில் உலாவ வைக்கும்.

‘திருப்பாச்சி’ சூப்பர் ஹிட்டாகிறது. ‘கண்ணாடிப் பூக்கள்’ ஓடும் அரங்கை டெலஸ்கோப்பில் பார்த்தாலும் கிட்டவில்லை. வேலை முடிந்த ஆறு மணிக்கு கணினி உழைப்பாளிகளோ கால் செண்டர் புண்ணியவான்களோ மாயாஜாலில் பௌலிங் கொண்டாடுகிறார்கள். பல திரையரங்குகள் இருக்கும் மாயாஜாலில் ஆங்கிலப் படங்களுக்கு நுழைவு சீட்டு கேட்டு தடுப்பதில்லை. காலியாக இருக்கும் கொட்டாவி ‘மாயாவி’யானாலும் நூறு ரூபாய் கொள்முதல் கேட்கிறார்கள்.

விஜய் டிவியும் சன் நியுஸும் ஓரளவு தனித்தனமையுடன் வித்தியாசம் காட்டுகிறார்கள். அமெரிக்காவின் ஜெர்ரி ஸ்ப்ரிங்கர் போல் வீரபாண்டியன் பல குழாயடிகளை அரங்கேற்றுகிறார். இணைய வாக்குவாதங்களிடம் இருந்து நிறையவே கற்றுத் தேர்ந்திருந்தது போன்ற பிரமுகர்கள் இருவர் — முஸ்லீம் லீக்-கரும் & பா.ஜா.க.வின் பெண்மணியும் மோடியை வம்புகிழுத்துக் கொண்டிருந்தார்கள். சுனாமி வருவதாக இருந்தால் இந்நேரம் வந்திருக்கும் என்று தலைப்புச் செய்திகளைப் போடுவதற்கென்று ஏழெட்டு செய்திக்காட்சிகள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்பது மணிக்கு நிகழ்ந்த இந்தோனேசியா பூகம்பத்தை உடனடியாக பதினொன்று பத்துக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டது. சீரியல் முடிந்து அதைப் பார்த்த தமிழர்கள் நிம்மதியாக கொறட்டை விட ஆரம்பித்தனர். அமெரிக்கர்களுக்கு உறக்கமே எட்டிப் பார்த்திருக்காது.

பாஸ்டன் பாலாஜி