Daily Archives: ஜூன் 15, 2004

கோலையாத்தின் சறுக்கல்

லாஸ் ஏஞ்சலீஸ் வாசிகளே கலக்கல் பேர்வழிகள். எடுத்த காரியத்தை அசால்ட்டாக முடிக்கும் திறமை உடையவர்கள். அமெரிக்கக் கூடைப்பந்தாட்டத்தின் ராஜாக்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸை சொல்லலாம். (இதே ஊரில் இருக்கும் க்ளிப்பர்ஸ் மகா சோடை டீம்). லேக்கர்ஸின் காப்டன் ‘ஷக்கீல்-ஒநீல்’ ஏழடிக்கு மேல் உயரம். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும். எதிரணிக்காரர்களை லங்கேஸ்வரனின் வீரர்களைப் போல் ஊதித் தள்ளிவிடுவார். அவருடை முக்கியமான சகா ‘கோபி ப்ரையண்ட்’. வாலி போன்ற பலத்துடன் எதிராளியை ‘தூசு’ என்று சிம்பு வசனம் பேசிக் கொண்டே வீழ்த்துவார். இவர்கள் போதாது என்று ஜாம்பவான் (வயதிலும்+அனுபவத்திலும்) ‘கார்ல் மாலோன்’. அங்கதன் ‘பேட்டன்’ அமைதியாக பந்தை அனைவருக்கும் நகர்த்துபவர். NBA இறுதியாட்டத்திற்கு அணியை தேர்வு பெறச் செய்தவர்கள்.

இப்பேர்பட்ட goliath-களுக்கு அடி சறுக்கியிருக்கிறது. ஒரு ஆட்டம் மட்டுமே தோற்பார்கள், போனால் போகிறது என்று இரண்டு விட்டுக் கொடுப்பார்கள் என்றெல்லாம் ஆருடம் சொன்னவர்களே அசந்து போயிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் கென்யாவைப் போன்ற டெட்ராயிட்டை (Detroit) சேர்ந்த பிஸ்டன்ஸ் வெற்றி வாயிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏழு ஆட்டம் கொண்ட சீரிஸில் மூன்றை வென்று விட்டார்கள். இன்று மாலையும் வென்றால், கோப்பை கிடைத்து விடும். இதுவரை எவருமே 3-1 என்ற நிலையிலிருந்து தோற்றதில்லை. டெட்ராயிட் மீதமிருக்கும் மூன்று ஆட்டங்களில் ஒன்றை வென்றால் கூட போதும்.

ஆட்டத்தைத் தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் டெட்ராயிட் ஜெயிக்க வேண்டுமே என்னும் எண்ணம் உள்ளூர இருக்கும். ஆனாலும், எல்லே லேக்கர்ஸ் வீறு கொண்டு எழுந்தால் யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதி. ஒரே ஒரு சக்தியை தவிர… முன்பே சொன்னேனே ‘வாலி’ கோபி ப்ரையனுக்கும் அனுமார் ஷக்கீலுக்கும் நடக்கும் நிழல் யுத்தம் நடு அரங்குக்கு(ம்) மீண்டும் எழாத வரை; லாஸ் ஏஞ்சலீஸ் நிச்சயம் மிச்சம் இருக்கும் மூணு மாட்சிலும் டெட்ராயிட்டை துவம்சம் செய்து விடும்.

பிகு: யாராவது யூரோ 2004 பார்க்கிறீங்களா??

காணவில்லை – இந்தியாவின் நைட்டிங்கேல்

இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பாடுவதற்கு அப்பாயிண்ட்மண்ட் கிடைப்பதே பெரிய விஷயம். இன்ன பிற நேரங்களில், ஆஷா போன்ஸ்லே, வாணி ஜெயராம் போன்ற கலைஞர்களை வளர்வதற்கு முன் கிள்ளிவிட துடிப்பவர். தேசபக்திப் பாடல்களையும் உணர்ச்சி ததும்பப் பாடுவார். இப்பொழுது பொழுது போக்காக எம்.பி.பதவி. பொழுது போக்கக் கூட அரசவை மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

பேருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள இரண்டு இனிஷியல் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் பதவியை ஒப்புக் கொண்டாரோ என்னவோ? (இந்த நேரத்தில் காரணமில்லாமல் ‘சோ’ நினைவுக்கு வருகிறார். பதவியை தங்கத்தட்டில் வைத்து கொடுத்தபோது கூட, தன்னால், ரெகுலராக பங்கேற்க முடியாது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு எம்.பி.யானார்).

திரைப்பட உலகத்தை மொத்தமாக குறை சொல்லலாம் என்று ஆர்வத்துடன் சத்ருகன் சின்ஹா முதல் சுனில் தத் வரை லிஸ்ட் போடுவதற்கு முன்பே ஷபனா ஆஸ்மி சிவப்புக் கொடி தூக்குகிறார். மாநிலங்களவையில் இந்த பிரசினையை எடுத்து வைத்ததே ஷபனாதான். எம்.பி3 திருட்டு, கர்நாடக/ஹிந்துஸ்தானி இசை பாரம்பரிய பராமரிப்பு, பாடல் வரிகளுக்கான ரேட்டிங், சென்ஸார் சர்டிபிகேட் போல் திரை மற்றும் இசை ஆல்பங்களுக்கும் சான்றிதழ், புதிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களுக்கான திட்டங்கள் என குரல் கொடுக்க ஆயிரம் விஷயம் இருக்கிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இசைத் தொண்டும், பள்ளி திறப்பு விழாக்களுக்கும் (சவுரவ் கங்குலியின் மனைவி நடத்தும் நடனப் பள்ளி திறப்பு போன்ற விழாக்களினால் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு ஆஜர் கொடுக்க முடியவில்லை – லதாவின் அதிகாரபூர்வ அறிக்கை) செல்வதே தலையாய கடமை என்றால் கலை சேவை மட்டும் செய்து கொண்டு இருக்க வேண்டியதுதானே?

எதற்காக தேச சேவைக்கு வருகிறார்?

ஜே. ஜே.: சில குறிப்புகள்: சிறு குறிப்புகள்

பெயரிலி:

நாவலுக்கு இலக்கணம் வலிந்து அதன்படி தமிழின் சென்ற நூற்றாண்டின் சிறப்பான பத்து பட்டியல் வகுத்து, தனது இரண்டு புதினங்களை முன்னுக்கு வைக்கின்ற எழுத்தாளத்திறனாய்வுக்குழவிகள் தொடங்கி, (தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு – ஜெயமோகன்.) தாள் தேர்ந்து நூல் வாசித்து பிடித்தபத்து பொறுக்கும் பெரும்பாலான சாதாரண வாசகர் வரைக்கும் எவருமே தமது பத்துக்குள் ஜேஜேயின் குறிப்புகளைத் தவிர்க்கமுடியாமற்போனதற்கு, குறிப்புகளின் கருவும் பாத்திரப்படைப்பும் சொற்செதுக்கலும் இழை மேவிச் சீராய் ஊடுபாவி அமைந்துகொண்ட விதமே காரணமாக இருக்கின்றது என்று தோன்றுகின்றது. எழுத்தாளர்-திறனாய்வாளர்-வாசகர் என்ற முக்கோணமுடுக்கிலே கதையின் பாத்திரங்கள் மாற்றி மாற்றி தம்மை இடம் பெயர்த்துக்கொள்கின்றன. அதே நேரத்திலே, குறிப்புகளை வாசிக்கின்றவர்களும்கூட தெளிவாக விளக்கமுடியாத காரணங்களின் உந்தலால், தம்மை ஏதோவொரு பாத்திரத்தால் ஆரம்பத்திலே அடையாளம் கண்டுகொண்டு, தாமும் கதையோட்டத்துடன், ஜேஜேயின் குறிப்புகள் மேலான பாலுவின் குறிப்புத்தளத்துக்குச் சமாந்திரமான இன்னொரு தளத்திலே, வேறொரு கோணத்திலே அதே பாத்திரங்களோடு தமக்கான சொந்தக்கதையைக் கோலாட்டி வழிநடத்திச் செல்ல நேரிடுவதாகின்றது. இந்தவிதத்திலே, பதிவாளன் பாலுவூடாக ஆசிரியர் என்ன சொல்லவந்தார் என்பதிலும், வாசகனின் பிறிதான பதிவாடியிலான தெறிப்புகளும் முக்கியமாகின்றன. இதன் காரணமாக, ஆசிரியரின் காலடியொற்றிப் பாதம் பதித்தாடும் கட்டாயத்திலிருந்து வாசகன் தளர்த்தப்படுகின்றான்; விடுவிக்கப்படுகின்றான். இஃது இந்தப்புதினத்துக்கு மட்டுமேயான சிறப்பில்லையெல்லையென்றாலும், எல்லாப்புதினங்களுக்கும் இச்சாத்தியம் ஏற்படுவதில்லை.

இந்தச்சாத்தியம் நிகழ்வதற்கு பாத்திரப்படைப்புகளின் முளைப்பும் அமைப்பும் செதுக்கலும் விவரிப்பும் ஆசிரியனாலே முழுமையாக வரையறுக்கப்படாது, வாசகனுக்கு வேண்டியபோதிலே கைகொடுத்து விழையாப்பொழுதிலே விலகி நின்று கவனித்து, இன்னொரு பொழுது படைப்பும் தெறிப்பும் மீள ஒட்டிக் கொள்ளும் வண்ணம் நிகழ்த்தல் வேண்டும். இது மண்டையோடு பிளந்து மூளை அறுவைச்சிகிச்சை செய்யும் கலை; சற்றே நெருங்கினால், வாசகனின்மீது பாத்திரத்தின் செறிவின்மீதான திணிப்பும் சற்றே விலகினால், கதைமீதான ஈடுபாட்டு விலகலும் நிகழும் என்ற கம்பியிலே எம்பிக்குதித்துக் கால் தந்தியாடும் நிலை. ஜேஜேயின் பதிவு மட்டுமல்ல, அரவிந்தாட்சமேனன், எம்.கே.ஐயப்பன், முல்லைக்கல் மாதவன் நாயர், திருச்சூர் கோபாலன் நாயர் என்று மட்டுமின்றி, சாராம்மா வரைக்கும் இதே காட்டியும் காட்டாமலும் வாசிப்பவர் கற்பனைக்கும் இடங்கொடுத்து கவர்ச்சி தரும் செயல் நிகழ்கின்றது. தமிழ் எழுத்துமட்டத்தின் முந்தநாளையும் நேற்றினையும் இன்றினையும் வாசிப்பாகப் பாதி, ஊர்வம்பூசியேறிய செய்தியாக மீதி கண்டு நடக்கும் தினசரி வாசகன் மட்டுமேயானவனுக்கு, ஆசிரியரின் பாத்திரங்கள்மீதான அறிமுக விவரணங்கள் – இது மலையாள இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா தமிழ் இலக்கிய உலகத்தின்மீதான பார்வையா என்பதற்கு ஆசிரியர் ஆங்காங்கே கொடுக்கமுயற்சித்த விளக்கங்களை அவரின் விரிவும் ஆழமும் தேடியிலே அங்கும் இங்கும் காணமுடிந்தபோதும்- ‘யாரோ, இவர் யாரோ? இவரோ? அவரோ?’ என்ற உருவகிப்பினை ஏற்படுத்தினாலும், கதை விரியுமிடத்திலே அந்தத் தனியாளை இந்தப் பாத்திரமாய் ஒட்டிவைக்கும் சுதை கழன்று அரூபம் மட்டும் வாசகனோடு நேரத்துக்கேற்ப இரசத்துளி உருளலும் வடிவமுமாய் -ஆனால், தானானது உள்ளே மாறாமற் போகின்றது.

முழுவதும் படிக்க – பெயரிலி கோப்புகள்

ஜே.ஜே : சில குறிப்புகள்

சுந்தர ராமசாமி

‘இலக்கியப் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்களே இங்கு. மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுகிறவன் வரக்கூடாது. …..

….

‘புதிதாக இன்னும் எழுதித் தா’ என்று அரிக்கிறான் என் வெளியீட்டாளன். பாலு, நான் சரித்திரத்துக்கு எங்கே போவேன்? என் நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததும், ‘பட்சி சாஸ்திரம்’, ‘பெண்களை வசீகரிப்பது எப்படி?’, ‘படுக்கை அறை ரகசியங்கள்’, ‘வாகட விளக்கம்’, ‘எண்பது வயதுக்குப் பின் இளமை’ என்று எழுதிக் கொண்டிருந்த பயல்கள் எல்லாம் சரித்திரத்தின் மேல் ஏறி விழுந்து பிச்சுப் பறக்கவிட ஆரம்பித்து விட்டார்கள். பாலு, உனக்குத் தெரியும். எங்களுக்குக் கொஞ்சம் போல்தான் சரித்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்றால் முக்குளித்து விளையாடலாம். இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள், பழுதடைந்த அரணமனைகள், மண் மூடிவிட்ட சுரங்கப் பாதைகள், சாய்ந்த கோபுரங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டோ ம். பாலு, கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே, உனக்கு அது பற்றி, ஏதாவது விபரம் தெரியுமா? ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான வரி, கிடைத்தால் போதும். அதை ஒரு பிடி பிடித்தேன் என்றால் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன். ஜே.ஜேயும் அவனுடைய வானர சேனைகளும் புலம்பிக்கொண்டு இருக்கட்டும். எனக்கு என் வசகர்கள்தான் முக்கியம். இலக்கிய தர்மத்தை ஒருநாளும் நான் கைவிட மாட்டேன்.’பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரித்தான் நம் மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்துவிடலாம்? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழி பறிப்பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான். வெவ்வேறு மொழி பேசினாலும் நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே? நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்குமா?‘தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்க முடியாவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே’ என்றார். எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் ஆயிற்று. ‘நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்?’ என்று நான் திருப்பிக் கேட்டிருக்கலாம். அந்த நிமிஷத்தில் எங்கள் உறவு முறிந்து போய்விடும். ‘எவரும் அவர் விரும்பும் கருத்தை வெளியிடுவதுதான் இலக்கிய உலகின் நிர்த்தாட்சண்யமான நியதி’ என்று சொல்லிக் கொண்டே கடைசி வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்துவிடுவார். இவரும் பேசாதாகிவிட்டால், அப்புறம் நான் தனியே பேசிக் கொள்ள வேண்டிய நிலை இன்று.‘கால்பந்தாட்டக்காரனின் நினைவுகள்’ என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில், “தோவிகளுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக்காரனின் மனோபாவமே. காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. உனக்குக் கொண்டுபோவதற்குச் சாத்தியமானதற்கு மேல் ஒரு அங்குலம் கூடப் பந்தைக் கொண்டுபோக முடியும் என்று நினைக்காதே. நீதான் ‘கோல்’ போட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதே. உனக்கு பெரும் தடைகள்சூழ்ந்து வரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே’ என்றெல்லாம் ஜே.ஜே. எழுதியிருக்கிறான். கால் பந்தாடத்தை அடிப்படையாக வைத்து விரிவாக ஜே.ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தை பற்றியது மட்டும் அல்ல என்று விமர்சகர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக் கொண்டு விட்டதே என்றும், இந்தக்கோணல் சுய பிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே.ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக்கிறார்கள்.

காலச்சுவடு – ரூ. 75/-