Tag Archives: Uyirmmai

ராபர்ட் ஃப்ராஸ்ட்: சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கங்கள்)

நான் ஒரு கவிஞனில்லை. கவிதையை மொழிபெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது. இருந்தும் ஃப்ராஸ்டின் கவிதைகளைப் படிக்காதவர்களை ஃப்ராஸ்ட்டுக்கு அழைக்க இந்த மொழிபெயர்ப்பு உதவும் என நம்புகிறேன்.

புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்
சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது — நீயும் வாயேன்
oOo
கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன்
அதன் அம்மாவின் பக்கத்தில்
நின்றுகொண்டிருக்கிறது – ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது
தடுக்கி விசுகிறது
அதிக நேரம் ஆகாது — நீயும் வாயேன்

– ஆகஸ்ட் 1975

அசல்:

The Pasture by Robert Frost

I’m going out to clean the pasture spring;
I’ll only stop to rake the leaves away
(And wait to watch the water clear, I may):
I sha’n’t be gone long.—You come too.

I’m going out to fetch the little calf
That’s standing by the mother. It’s so young,
It totters when she licks it with her tongue.
I sha’n’t be gone long.—You come too.

கொசுறு: The Death of the Hired Man by Robert Frost

முகவரிகள் – மாதங்கி (சிங்கப்பூர்)

நன்றி: உயிர்மை

பெருவிரைவு ரயிலில்
அரை மணி நேரப்
பயணம்;
பரிச்சயம் செய்துகொண்ட
பக்கத்து இருக்கை பெண்மணி
வங்கி அலுவலராம்;
குழந்தைகள், புத்தகம்
பேச்சு நீண்டது

ஷெண்டன்வே பக்கம்
வந்தால் வங்கிக்கு வர வேண்டும்
விடைபெற்றார்

ஆறு மாதம்
கழித்து வேறு
வேலையாக அந்தப்
பக்கம் சென்றபோது
வங்கியில் நுழைந்தேன்
உணவு இடைவேளையில்

அந்நியமான பார்வை
கண்டு
வழித்துணையாய்
வந்ததை நினைவுபடுத்தியபோதும்
என்னைத் தெரியாமல் போனது
அவருக்கு

‘இப்ப இங்க வேலை எதுவும்
காலி இல்லை’ மெல்லிய
புன்னகையோடு சொன்னார்

அதன்பின்
எத்தனையோ பயணங்கள்
என்றாலும் வழித்துணையாய்
வருபவர் முகவரி கொடுத்தால்
வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறேன்

தேவதச்சன் கவிதை – உயிர்மை

வானவில்கள்

அது
நிறங்கள் அடர்த்தியாகிக்
கொண்டுவரும் வானவில். என்
வீட்டின்மேல் அழகாய் வட்டமிடத்
தொடங்கியது
“எவ்வளவு பெரிய வில். உள்ளே
வந்தால் வீடு
உடந்துவிடும்தானே” என்கிறார்கள்
உறவினர்கள்
“வில்லும் உடைந்துதானே
போகும்” என்கிறார்கள்
நண்பர்கள்
கண்ணில் வழிந்தோடு
குமிழிகளில்
தானே வளர்கிறது
சப்தத்தைக் கடந்த அன்பில் வில்
தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக
வளைந்திருக்கும்
வானவில்லுக்குள்ளே
இருக்கிறது என் ஊர்.
ஊருக்குள்ளே இருக்கிறது
என் வீடு,
எப்போதும்
கதவுகள் மூடியிருக்கும்
என் சின்னஞ்சிறிய வீடு

கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்

உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்

உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது

வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.

சென்னை புத்ததகக் காட்சி – மனுஷ்யபுத்திரன் (சென்ற வருடம்)

நன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008

wrappers-publishers-generic-tamil-booksநடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

:::

புத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.

:::

கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.

அதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.

பதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.

ஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.

பத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.

தமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.

புத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கும் ஒரு செயல்பாடு.

குறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.