Tag Archives: SOTT

கோடை மறைந்தால் இன்பம் வரும்

நியூ ஜெர்சி ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ விழா அமர்க்களமாக நடந்தது. பழனி ஜோதி சிறப்பான அறிமுகம் செய்து துவங்கி வைத்தார். நான் சற்றே தாமதமாக வந்ததால் (ஐந்தாறு நிமிடங்கள்) ஜெயமோகன் உடன் அமர்ந்திருந்தவர் யார் என்று நிகழ்ச்சி நடக்கும் போது தெரியவில்லை. அதன் பின்னர் அவருடன் அறிமுகம் செய்து கொண்டேன். நிகழ்ச்சியில் முழுவதும் இளைஞர்களும் இளைஞிகளும் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு கதைகள்… பல்வேறு பார்வைகள் … சுருக்கமாக, வித்தியாசமாக, அதேசமயம் பொருத்தமாக இருந்தது. ஜெயமோகன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கேள்வி பதில்களை நடத்தினார். வழக்கமான திரள் புத்தி கேள்விகள் பெரியோரிடம் இருந்து வந்தன. இளைய தலைமுறையினரிடம் இருந்து அப்படிப்பட்ட வினாக்கள் எதுவும் இல்லாமல், ஆழமாக புத்தகம் தொடர்பாக அந்த கதா மாந்தர்களில் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையில் எழுந்த நேர்மையான வினாக்கள் – எளிமையாக பகிரப்பட்டன

மிக நிறைவான நிகழ்வு. இதை கச்சிதமாக நடத்தியதற்கு பழனி ஜோதி மற்றும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் குழுவிற்கு பாராட்டுக்கள். இது எளிமையான காரியம் அல்ல… எவ்வளவு பேர் வந்தார்கள் என்று எண்ணவில்லை. 100+ பேர் இருப்பார்களோ!? அரங்கம் நிறைந்து வழிந்தது. பலரும் இழுத்துப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். மாயா வழக்கம் போல் அமைதியாக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். இளா கொஞ்சம் விவகாரமான கோணங்களில் சுட்டுக் கொண்டிருந்தார்.

நெல்லை விஜய், வேல் முருகன், பாஸ்டன் நவீன் என்று நியு இங்கிலாந்து மக்கள் சூழ சென்றது பயணத்தை சுவாரசியமாக்கியது. அங்கே பல அறிந்த முகங்கள். புதிய அறிமுகங்கள். நெடுங்காலமாக இணையத்தில் மட்டுமே பேசி வந்த தமிழ் சசி. விவசாயி இளா. காரைக்குடி சுபா. காண்ட்ராரியன் ஏகே அரவிந்தன் கன்னையன். டாக்ஜட்ஜ் துவங்கி அமர்க்களமாய் வீடியோக்கள் நடத்தும் தினேஷ் ஜெயபாலன். திண்ணை துக்காராம் அம்மா கிச்சனுக்கு வந்திருந்தார். நெடுங்கால சொந்தமான பிரபு சின்னத்தம்பி கலகலப்பாக்கி பழைய சிகாகோ நினைவுகளை மீட்டெடுத்தார்.

ஜெயமோகன் 20 ஆண்டுகள் முன்பு பார்த்தபடியே இருக்கிறார் என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருந்தார் … புகைப்படங்களில் பார்த்ததை வைத்து! நேரிலும் அவ்வாறே… மிக இயல்பாக ஆதுரத்துடன் கட்டித்தழுவி வரவேற்று அன்போடு பழகினார்

அதன் பின்னர் நாங்களே எங்கள் அனைவரையும் மஹேஸ் பழனிஜோதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட அங்கேயும் ஒரு 30 /40 பேர் குழுமியிருப்போம். சபை களை கட்டியது. சூடான பருப்பு வடை அல்லது அதற்குப் பேர் மெதுவடையா . கரக்… மொறுக் உள்ளே தள்ளினோம். தேநீர். ஆளுக்கு முருக்கு பாக்கெட் வேறு.

நியுயார்க் லிட் ஃபெஸ்ட் களப்பணிக்கு முன்னோட்டம். மிக சிறப்பாக செயல்பட்டு உதவினார்கள். கதவுக்குப் பக்கத்தில் சத்தம் வராமல் பார்த்துக் கொண்டது முதல் அனைத்தையும் பார்த்துப் பார்த்து பம்பரமாக இயங்கிய செயல்வீரர்கள்!!

வழக்கம்போல் ஆசான் என்ன கேள்வி கேட்டாலும் அநயாசமாக விடையளித்துக் கொண்டிருந்தார். இதில் என்ன அதிசயம்!? எப்பொழுதும் போல் முன்னரே அறிந்தது தான் … என்றாலும் என்னால் சற்றும் நம்ப முடியவில்லை. மதியம் ஒரு மணியிலிருந்து முக்கியமான விழா . அது நான்கு மணி அளவில் நிறைவுகிறது. அதன் பின் இன்னொரு இரண்டரை மணி நேரம்… பல்வேறு தலைப்புகள்… சுவாரசியங்கள் … நெருக்கமான தகவல்கள்… இலக்கிய அலைதல்கள் என்று எல்லா இடங்களுக்கும் எப்பொழுதும் இவரால் அட்சய பாத்திரம் போல் காமதேனு போல் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க முடிகிறது!

தத்துவ முகாமை தவறவிட்டதை நினைத்து இப்பொழுதும் வருந்தி பொறாமை கொள்ளும் தருணம்